1.50 கோடியை விஜய் சேதுபதிக்கு திருப்பிக் கொடுக்கிறார் விஷால்..!

1.50 கோடியை விஜய் சேதுபதிக்கு திருப்பிக் கொடுக்கிறார் விஷால்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் தயாரித்த ‘96’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. அப்போது இதே தயாரிப்பாளர் முன்பு தயாரித்திருந்த ‘கத்திச் சண்டை’ படத்தில் நடித்தமைக்காக அதன் ஹீரோ விஷாலுக்கு சம்பளப் பாக்கி வைத்திருப்பதால் அதனைக் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமான நடிகர் விஷாலே நோட்டீஸ் கொடுத்தாராம்.

இதன் பொருட்டு அந்தக் கடன் தொகையை ‘96’ படத்தின் நாயகனான விஜய் சேதுபதி தானே பொறுப்பேற்றுக் கொண்டதால்தான் அன்றைய தினம் காலை 9 மணிக்கு படம் வெளியானது. இந்தக் களேபரத்தில் விடியற்காலை 5 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த காட்சி ரத்தாகிவிட்டது.

இந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டிருந்த ரூபாய் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் தொகையை விஜய் சேதுபதியிடமே திருப்பித் தருவதாக நடிகர் விஷால் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

அந்தத் தொகையை  தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று  பட ரிலீஸுக்கு முன்புவரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய் சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்த மாதிரியான ஒரு மன வலியை நடிகர் விஜய் சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்தச் சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக் கொள்கிறார்.

திரு.நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக் கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் அவர்கள் , திரு.நந்தகோபால் அவரிடமே பெற்றுக் கொள்வார்.  அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷாலே வட்டியும் கட்டுவார்.

ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு. விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் அவர்கள் நினைக்கிறார். மேலும், இந்தப் பிரச்சினையிலிருந்து விஜய் சேதுபதி அவர்கள் எந்த வலியும் இல்லாமல் வெளியே  வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்துக் கொள்கிறார்...” என்கிறது விஷால் தரப்பு பத்திரிகை செய்தி.

விஷால் கவுன்சிலில் புகார் கொடுத்து இந்த ‘96’ படத்தை நிறுத்தி வைத்தது தமிழ்த் திரையுலகில் பலவித குழப்பங்களையும் பேச்சுக்களையும் ஏற்படுத்தியது.

“தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரே இது போல் கடைசி நேரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து படத்தை நிறுத்தலாமா..? ஒரு தயாரிப்பாளரின் வலியை அவர் உணரவில்லையா..? கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களை துரத்துவேன் என்று சொல்லித்தான் தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்குள் நுழைந்தார். இன்றைக்கு அவரே இப்படிச் செய்யலாமா..?” என்று கேட்டு விஷால் மீது கடுமையான கண்டனக் குரல்களும், எதிர்க் குரல்களும் ஒலித்தன.

இதனால்தான் விஷால் இப்போது திடீரென்று மனம் மாறி இப்படியொரு முடிவையெடுத்து, அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது..!

எப்படியிருந்தாலும் இது நல்ல முடிவுதான்..!