‘96’ – சினிமா விமர்சனம்

‘96’ – சினிமா விமர்சனம்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’,  விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற  வெற்றிப் படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபால்  இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மற்றும் ஆதித்யா, வர்ஷா மலேத்ரியா, ஜனகராஜ், தேவதர்ஷிணி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கவிதாலயா’ கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா, தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’,  ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.   

இத்திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் S.S.லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

கை வலிக்க, வலிக்க.. ‘பரியேறும் பெருமாளை’ பெருமைப்படுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்குள் அடுத்தப் பணியையும் தந்துவிட்டார் இயக்குநர் பிரேம்குமார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான இவர் தனது நெருங்கிய நண்பரான நடிகர் விஜய் சேதுபதியின் உதவியால் முதல் முறையாக இப்படத்தின் மூலமாய் இயக்குநர் அவதாரமெடுத்திருக்கிறார். இது இவரது முதல் படம் என்று சொன்னால் தியேட்டர் ஆபரேட்டர்கூட நம்ப மாட்டார்..!

எத்தனையோ காதல் படங்களை பார்த்திருக்கிறோம். கொண்டாடியிருக்கிறோம். பலவற்றை பார்த்து சலித்திருக்கிறோம். சிலவற்றை பார்த்துதான் அழுதிருக்கிறோம். அந்தச் சிலவில் சிலதான் நம்மை தூங்கவிடாமல் செய்திருந்தது. ‘காதல்’, ‘ஆட்டோகிராப்’ படம் போல..! இதோ இந்தப் படமும் அதே நிலைமைக்குத்தான் நம்மைத் தள்ளியிருக்கிறது.

படம் பார்த்த ரசிகர்களை ஒரு வாரத்திற்காகவாவது காதல் இம்சை செய்யாமல் போனால் அந்த ரசிகன் மரமண்டையாகத்தான் இருக்க வேண்டும். தியேட்டரில் இருந்து வீட்டுக்கு எப்படி போய்ச் சேர்ந்தேன் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு அத்தனை ரசிகர்களையும் மூளைச் சலவையும் செய்திருக்கிறது இத்திரைப்படம்.

கே.ராமச்சந்திரன் என்னும் விஜய் சேதுபதி இப்போது புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர். காடுகள், மலைகள் என்று ஏறி, இறங்கி புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கலையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தும் கொண்டிருக்கிறார்.

தான் பிறந்து, வளர்ந்து, படித்த தஞ்சை மண்ணை மிதிக்கும் தருணத்தில் தன்னுடைய உயர்வுக்கு அடித்தளமிட்ட தான் படித்த பள்ளியைத் தேடிச் சென்று பார்க்கிறார். இப்போதும் அந்தப் பள்ளியில் காவல் தெய்வமாய் இருக்கும் ஜனகராஜை பார்த்து அகமகிழ்கிறார். அந்தப் பள்ளி நாட்கள் அவருக்குள் இம்சையைக் கூட்டுகிறது.

தன்னுடைய நெடுநாளைய பள்ளி நண்பனைத் தொடர்பு கொண்டு “மற்ற நண்பர்கள் எங்கே..?” என்று வினவுகிறார். தொடர்புகள் இணையம் மூலமாக கிடைக்கின்றன. வாட்ஸ்அப் குரூப்பில் அலப்பறைகள் ஆரம்பிக்கின்றன. “இப்படி எத்தனை நாளைக்குத்தான் இணையத்திலேயே பேசுவது.. ஒரு நாள் நேரில் சந்தித்து பேசலாமே..?” என்கிறார் விஜய் சேதுபதி. அனைவரும் ஒத்துக் கொள்ள.. அந்தத் தருணமும் வருகிறது.

1996-ம் ஆண்டு தஞ்சை பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி காத்திருப்பது அவரது பள்ளிப் பருவத்து தேவதைக்காக.. ‘ஜானகி தேவி’ என்னும் திரிஷா.. திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சிங்கப்பூரில் செட்டிலாகியிருக்கிறார்.

தனது நண்பர்களைச் சந்திக்க ஓடி வரும் ஜானகி தேவிக்கு இங்கு வந்த பின்பே ராமச்சந்திரனை பார்க்கும் ஆவல் பற்றிக் கொள்கிறது. ஆனால் ஜானகி தேவியை சந்திக்க மறுத்து ஓடி ஒளிகிறார் விஜய் சேதுபதி. தன்னுடைய பருவக் காலத்து காதலி.. தான் தேடியலைந்த தேவதை. இப்போது தானே நேரில் வந்து முகத்தைக் காட்டியும் ஏதோ ஒன்று அவரைத் தடுக்க பேச முடியாமல் இருக்கிறார். இல்லை.. தவிக்கிறார்.

விஜய் சேதுபதி இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார் என்பதையறியும் திரிஷா அது ஏன் என்று கேள்வியெல்லாம் எழுப்ப.. அவர்களிடையே இருந்த காதலும், அந்தக் காதல் கதைகளும் மெல்ல, மெல்ல எட்டிப் பார்க்கின்றன. எங்கே இவர்கள் இருவரும் திரும்பவும் காதலர்களாகிவிடுவார்களோ என்கிற அச்சத்தை நெருங்கிய நண்பர்களிடத்தில் ஏற்படுத்தும் அளவுக்கு போகிறது அவர்களது நட்பு.

மறுநாள் காலை 5 மணி விமானத்தில் சிங்கப்பூர் பறக்க வேண்டிய திரிஷாவை விஜய் சேதுபதி ஹோட்டலில் டிராப் செய்ய போகிறார். ஹோட்டலுக்கு சென்றவரால் திரும்ப முடியவில்லை. அவரை அழைக்காமல் தன் அறைக்கு திரும்பிய திரிஷாவால் அப்படியே விடவும் முடியவில்லை.

பள்ளிப் பருவத்தில் இருந்த காதலை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்த அந்தக் காதலர்களின் நிலைமை இனி என்ன ஆனது என்பதுதான் இந்தக் காதல் காவியத்தின் மீதிக் கதை..!

‘எங்கய்யா நல்ல படம் வருது..? எல்லாமே வெத்து டூயட்டுகளும், லவ்வும்தான்..’ என்று தமிழ்ச் சினிமாவை நக்கலடித்து ஓரங்கட்டிய பெருந்தகையாளர்களுக்கு பதில் கொடுப்பது போல முத்தாய்ப்பாய் வந்திருக்கிறது இத்திரைப்படம்.

‘மனித வாழ்க்கையில் சலிக்காதது காதல்தான்’ என்பார்கள். அப்படியொரு காதலைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காதலை வெறுமனே உடல் சார்ந்த ஈர்ப்பாக இல்லாமல், மனம் சார்ந்த விருப்பமாக அமைத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

இப்போது வரும் அனைத்து படங்களிலும் காதல் இருக்கிறது. உச்ச நடிகரில் இருந்து கடைக்குட்டியாய் நேற்று பணம் கொடுத்து நடிக்க வந்த ஒன்றரை கண் நடிகர்வரையிலும் அனைவரும்தான் திரையில் காதலிக்கிறார்கள். காதலைச் சொன்ன மறுநிமிடமே படத்தின் பட்ஜெட்டை பொறுத்து சென்னை ஜெமினி பார்க்கிலோ, அல்லது செர்பியாவிலோ டூயட் பாட கிளம்பி விடுகிறார்கள். அடுத்த 4 ரீல்கள் கழித்து காதலுக்குள் ஒரு ஊடலை உருவாக்கி சோகப் பாட்டுக்கும் வழிவிட்டு காதலை பிழியப் பிழிய அழுக வைக்கிறார்கள்.

ஆனால் இந்த ‘96’ படம் சொல்லியிருக்கும் காதல் முற்றிலும் வேறு. காதலர்கள் தொடக்கூட இல்லை. காதலிக்கிறோம் என்று சொல்லக்கூட இல்லை. ஆனால் இனம் புரியாத பாசம்.. பார்க்கத் துடிக்கும் நேசம்.. பேசத் துடிக்கும் நட்பு.. இந்தக் காதல் சத்தியமாய் தமிழ்ச் சினிமாவுக்கு புத்தம் புதிது.

பள்ளிப் பருவக் காதலை ‘இன்பாச்சுவேஷன்’ என்னும் ‘இனக் கவர்ச்சி’ என்றே அழைக்கிறார்கள் மன நல மருத்துவர்கள். ஆனால் இந்த ஜானகி தேவியும், கே.ராமச்சந்திரனும் கொண்டிருந்த காதல், அவர்களது வாழ்க்கைப் பாதைக்கு துணை நின்ற காதல். ஆனால் பாதியிலேயே குடும்பப் பிரச்சினையினால் முறிந்து போகிறது.

பள்ளிப் பருவத்தில் ஒரு நாள்வரவில்லையென்றால்கூட தேடோ தேடு என்று தேடும் நாயகன், தன் நண்பி உடல் நலிவுற்று வந்தவுடன் அருகில் வந்து விசாரிக்கக்கூட பயந்து போய் ஆனால் மெய் மறந்து நிற்கிறான். அவளது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல நா வராத நிலையில் அவளது கை அவன் மேல் படும் அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தாற்போல் மயங்கி சரிகிறான். என்னவொரு கவிதைத்தனமான படமாக்கல்..!?

ஏதோ சொல்ல வேண்டும் என்று துடிக்கும் அவனது செயலை தடுக்கும் நாயகி “எதுவும் இப்போது வேண்டாம். நல்லா படிக்கணும் அதுதான் நமக்கு முக்கியம்…” என்று சொல்லி அவனது விருப்பதை ஓரங்கட்டும் அளவுக்கு முதிர்ச்சி பெற்றவராக இருக்கிறார்..!

நாயகன் குடும்பப் பிரச்சினையால் இரவோடு இரவாக சென்னைக்கு ஓடிவிட.. அவனைத் தேடியலைந்து பின்பு அப்படியே விட்டுவிட்டாலும் அவன் நினைவாகவே அவள் வாழ்ந்து வந்த அந்தக் காலக்கட்டத்தை ஜானகி தேவியாக சொல்லும்போது ஐயோ பாவம் என்று ஏங்க வைத்திருக்கிறார் திரிஷா.

இடைவேளைக்கு பின்பு படத்தில் இடம் பெறும் பிரதான கதாபாத்திரங்களே 5 பேர்தான். அதில் நாயகனும், நாயகியும் மட்டுமே முக்கால் மணி நேரத்திற்கு தனிமையில் அமர்ந்து நமக்குக் கதை சொல்கிறார்கள்.

சின்ன வயதில் தெருவோரத்தில் புராணக் கதைகளைச் சொல்லிவிட்டுப் போகும் கூத்தாடிகளின் வார்த்தைகளில் மயங்கி நிற்கும் குழந்தைகளின் நிலைமைதான் தியேட்டருக்கு வந்த ரசிகர்களின் நிலைமை. ஒரு நெருக்கம் இல்லை. கை கொடுக்கல் இல்லை. கட்டிப் பிடித்தல் இல்லை.. ஆனால் இருவருமே நம்மை நெருங்கி அமர வைத்திருக்கிறார்கள். உடன் உரையாட வைக்கிறார்கள். நெஞ்சார நெகிழ வைக்கிறார்கள். என்னவொரு இயக்கமடா சாமி..?

எழுகிறார்கள். நடந்து போகிறார்கள். மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். திரும்பி வருகிறார்கள். நாயகனின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கேயும் பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் நமக்கு எதுவும் அலுப்பே இல்லையே..? எப்படி வாய்த்தது இந்தத் திரைக்கதை..?

பிரேம் டூ பிரேம் காதலை மொழிந்து கொண்டிருக்கும் எந்தப் படத்திலும் இது போன்ற தொடாத காதலையும், முத்தம் கொடுக்காத காதலர்களையும், கட்டிப் பிடித்துக் கொள்ளாத காதல் தருணத்தையும் பார்ப்பதே அரிது. இந்த ‘96’-ல் மட்டுமே நமக்கு இது சாத்தியமாகியிருக்கிறது. இதனாலேயே காதல் மேல் வெறுப்பு கொண்டவர்கள்கூட காதலை பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.

தனது காதலிக்காக அப்போதுவரையிலும் இருக்கும் தனது முகத்தைச் சவரம் செய்து பளிச்சென்றாக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதி வீட்டில் இப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அவள் பேனாவால் மை தெளித்த சட்டை, அவளுடைய துப்பட்டா.. எழுதிய புத்தகம், நோட்டுக்கள் என்று காதல் அடையாளங்களை காட்டுகின்ற காட்சியின்போதுகூட நாயகி உணர்ச்சிவசப்படாமல் அமைதி காப்பதை ரசிகர்களால்கூட தாங்க முடியவில்லை.

பள்ளிப் பருவத்தில் எத்தனையோ முறை கேட்டும் அந்தப் பாடலை பாட மாட்டேன் என்று அடம் பிடித்த நாயகி, வீட்டுக்குள் அதுவும் மின்சாரம் நின்றுபோய் இருளடைந்த நேரத்தில் ‘யமுனை ஆற்றிலே’ என்று துவங்க.. இதைக் கேட்டு நாயகன் இருப்பதையெல்லாம் தள்ளிவிட்டுவிட்டு பைத்தியமாய் ஓடி வந்து அவள் முன் அமரும் காட்சிதான் படத்தின் ஹைலைட். உச்சபட்ச  கை தட்டலை இந்தக் காட்சியே பெறுகிறது. இது இயக்குநரின் சொந்தக் கதையாகக்கூட இருக்க வாய்ப்புண்டு என்று உறுதியாய் நம்பலாம்.

‘வீடு பக்கத்துலதான் இருக்கு. போயிட்டு ஹோட்டலுக்கு போலாமா..?’ என்று பயத்துடன் கேட்கும் நாயகனிடம் விஸ்வாமித்திரன், ரம்பா, ஊர்வசி, மேனகாவை சொல்லி பதில் சொல்லும் நாயகியின் பதிலடி ரசிக்க வைக்கும் காதல் பேச்சு..!

விஜய் சேதுபதியின் நடிப்புக்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நாயகி இப்போது இன்னொருவரின் மனைவி என்பதை புரிந்து கொண்டு அந்த அளவுக்கு தூரத்தைக் கடைப்பிடிக்கும் நாகரீக மனிதராக தன்னைக் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

சாதாரணமான டயலாக் டெலிவரியிலும், தனது உடல் மொழியில் அவர் காட்டும் நடிப்பினாலும் இந்த ராமச்சந்திரன் கேரக்டருக்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமாக இல்லை என்றே சொல்ல வைத்திருக்கிறார்.

“நீ இன்னும் வெர்ஜின் பாய்தானா..?” என்று திரிஷா கேட்கும் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியாய் திரும்பும் விஜய் சேதுபதிக்கு தியேட்டரே கை தட்டுகிறது. “டேய் நீயொரு ஆம்பள நாட்டுக் கட்டைடா..!” என்னும் நாயகியின் பாராட்டை அவர் ஏற்றுக் கொள்ளும்விதமும் அருமை.

ஹோட்டலில் திரிஷாவுடன் பேசும்போது அவரை தான் சந்திக்க முயற்சித்த கதையையெல்லாம் சொல்லிவிட்டு அவரது திருமணத்திற்குக்கூட தான் போனதையும், தாலி கட்டும்போது பார்க்க முடியாமல் வெளியேறிவிட்டதாக சொல்லும்போது விஜய் சேதுபதி, சேதுபதியாகவே இல்லை.. கே.ராமச்சந்திரனாகவே தெரிகிறார்.

“நான் வந்தேன் ஜானு.. நீ அன்னிக்கு வாடாமல்லி கலர்ல சேலை கட்டியிருந்த.. அவ்ளோ அழகாயிருந்த… தெரியுமா..?! ஆனால் தாலி கட்டுறதுக்குள்ள கிளம்பிட்டேன். அதுக்கும் மேல என்னால அங்க இருக்க முடியல..” என்று தட்டுத்தடுமாறி அன்றைய சோகத்தைச் சொல்லும்போது அச்சச்சோ என்கிற உணர்வை மீட்டெடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இவருடைய இளமைப் பிராயத்து விஜய் சேதுபதியாக நடித்திருக்கும் ஆதித்யனும் நல்ல தேர்வு. திராவிட கலரில் சற்றே பயந்து சுபாவத்துடன், ஆனால் பாசத்துடனும் திரியும் அந்த சின்ன வயது ராமச்சந்திரனை எந்தப் பிள்ளைக்குத்தான் பிடிக்காமல் போகும்..?

குண்டு விழி கண்களுடன் அமர்க்களமாய் சின்ன வயது திரிஷாவாய் வலம் வரும் அந்தப் பெண்ணும் கவர்ந்திழுக்கிறார். நாயகனின் மனம் சொல்லும் விஷயத்தை புரிந்து கொண்டும், அதை வெளிப்படையாச் சொல்ல வேண்டாம் என்று தடுத்தும் பக்குவமாய் இருக்கும் கேரக்டரை வெகுவாய், அழகாய் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் கைகளை அலை வீசுவதுபோல வீசிக் காட்டி ‘யமுனை ஆற்றிலே’ பாடலை பாடச் சொல் என்று ஆதித்யா கெஞ்சிக் கேட்கும்போதும், அதைப் பார்த்தும் பார்க்காதது போல் அந்தப் பாடலை பாடவே இல்லாமல் போக்குக் காட்டும் காதலியாக கவர்ந்திழுக்கிறார் சின்ன வயது திரிஷா.

சின்ன வயது திரிஷாவுக்கே இந்த நடிப்பென்றால் பெரிய வயதில் எப்படி..? ஓய்வு கொடுத்து வீட்டுக்கு போக வேண்டிய வயதில் மறுபடியும் அதே அழகுடன்.. அதே ஈர்ப்புடனும், முகத்தில் இருக்கும் கவர்ச்சி ஒன்றை வைத்தே இந்தப் படம் முழுவதும் அனைத்துக் காதலர்களையும் உண்டு, இல்லையென்றாக்கியிருக்கிறார் திரிஷா.

கடைசியாக அவரை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஜென்னி’யாக பார்த்து ரசித்தது தமிழ் கூறும் நல்லுலகம். இதோ இன்றைக்கு இந்த ‘ஜானகி தேவி’யாகவும் ரசித்துக் கொண்டிருக்கிறது.

‘ஏன் இன்னும் நீ கல்யாணம் செஞ்சுக்கலை?’ என்ற கேள்வியை பலவிதமாகக் கேட்டும் பதில் கிடைக்காத விரக்தியில் முறைக்கிறார் பாருங்கள் ஒரு முறைப்பு. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் அக்கம் பக்கம் பார்த்துத் திரும்பிக் கொள்ளும் விஜய் சேதுபதியும் நம் நிலைமையில்தான் தெரிகிறார்.

ஹோட்டல் அறையில் தான் விஜய் சேதுபதியை சந்திக்கத் துடித்தத் தருணங்களைச் சொல்லி அழுகும் அந்த கண நேரத்தில்தான் எங்கே சேர்ந்துவிடுவார்களோ என்கிற பயத்தைக்கூட விதைத்திருக்கிறார் திரிஷா. ‘பிளைட்டுக்கு நேரமாச்சு’ என்று சொல்லியும்  ‘இன்னும் கொஞ்ச நேரம் என்கூட இரு..’ என்று சொல்லி காலம் கடத்தும் இருதலைக் கொள்ளி எறும்பு மனநிலையை மிக அழகாகக் காட்டுகிறார் திரிஷா.

அப்போது காதலை வெளிப்படுத்த முடியாமல் நின்றிருந்த தருணம் போலவே இப்போதும், கணவன், குழந்தையிருக்கும் சூழலில் அதேபோன்ற நிலைமையில் நிற்கின்ற வேதனையை அவர் உடைத்துக் காட்டும் காட்சி ஒரு கவிதை.

விஜய் சேதுபதியின் மாணவி “அவரைப் பத்திரமா பார்த்துக்குங்க” என்று தன்னிடம் சொல்லியதைச் சொல்லி “அதுக்குத்தான் என்ன சொல்றதுன்னு தெரியலை” என்று விஜய் சேதுபதியிடமே கேட்கும் தருணம் அவரது மறக்க முடியாத காதலுக்கு அச்சாரமாய் இருக்கிறது..! வெல்டன் திரிஷா மாமி..!

கிளைமாக்ஸில் விமானத்துக்கு தயாராக இருக்கும் நிலையில் இனி என்ன செய்ய.. அடுத்தது என்ன என்கிற பார்வையுடன் பரிதாபமாய் பார்க்கும் விஜய் சேதுபதியிடம், “அப்படி பார்க்காத ப்ளீஸ்…” என்று சொன்னபடியே அவர் கண்களைப் பொத்தி எடுத்துவிட்டு விருட்டென்று செல்லும் ஒரு நிமிடக் காட்சியில் கலங்கடித்துவிட்டார்கள் இருவரும்..! 

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் பள்ளி வாட்ச்மேனாக 3 காட்சிகளில் தென்பட்டிருக்கிறார். இவர்களின் பள்ளிக் காலத் தோழியாக வரும் தேவதர்ஷிணி தனது நடிப்புத் திறனால் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார். இவர்கள் இருவரையும் சந்தேகக் கண்ணோடத்திலேயே பார்க்கும் அவரது இயல்புத் தன்மையும், அதையும் போன் செய்து செக் செய்யும் குணமும் ரசிக்கத்தக்கது. இதேபோல் பகவதி பெருமாள், ‘ஆடுகளம்’ முருகதாஸ் இருவரும் பள்ளிக்கூட நண்பர்களாக இருந்து காதலுக்கு தூதாக இருந்தவர்கள், இப்போதும் அதேபோல் இருக்கும்படியாக நடித்திருக்கிறார்கள்.

ஒரேயொரு காட்சி என்றாலும் தொடர்ச்சியான தனது டயலாக் டெலிவரியில் விஜய் சேதுபதிக்கு ஈக்குவலாக நடித்திருக்கிறார் கவிதாலயா கிருஷ்ணன். இருவரும் ஏற்கெனவே நெருங்கிய நண்பர்கள் என்பதை வசனத்திலேயே காட்டிவிட்டதால் அவர்களது பாசப் பிணைப்பை ரசிக்க முடிகிறது.

விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்த வர்ஷா மலேத்ரியா தனது கண்களாலேயே அவருக்கான காதல் மொழியைக் காட்டுவிட்டுப் போகும் அந்த ஒரு காட்சி அழகான கவிதை.

துவக்கத்தில் விஜய் சேதுபதி காட்டுக்குள் வலம் வரும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் தனி வித்தையையே காட்டியிருக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையெல்லாம் துவக்கத்திலேயே காட்டிவிட்டதால், படத்தின் நெகிழ்வுத் திறன் அங்கேயே மேம்பட்டுவிட்டது.

பின்பு ஹோட்டல், சாலைகள், ஹோட்டல் அறை, பார்பர் ஷாப், மெட்ரோ ரயில், விமான நிலையம் என்று மாறி மாறி பயணிக்கும் கேமிராவால் நமக்கு அலுப்புத் தட்டவில்லை. புத்தம் புதிதாக காட்சிகளை மாறி, மாறிக் காட்டிக் கொண்டேயிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வெல்டன் ஸார்..!

‘தி லைப் ஆப் ராம்’, ‘ஏன்’,  ‘வசந்த காலங்கள்’, ‘ தாபங்களே’, ‘இரவிங்கு தீவாய்’, ‘காதலே.. காதலே’, ‘அந்தாதி’ என்று பாடல்கள் விட்டுவிட்டு ஒலித்தாலும் எந்தப் பாடலையும் கேட்கும் நிலையில் நம் மனமில்லை. பாடல்கள் ஈர்க்காத குறையை பின்னணி இசையில் நேர்ப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்தா வசந்தா. உறுத்தல் இல்லாத பின்னணி இசையில் காட்சிகளை மட்டுமே முன்னிறுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..!

எத்தனை பெரிய ‘இசை பருப்புகள்’ வந்தாலும் இசைஞானிக்கு நிகர் அவரேதான் என்பதை இந்தப் படமும் எடுத்துக் காட்டுகிறது. நாயகி வகுப்பில் பாடும் பாடல்கள் அனைத்தும் இசைஞானியின் பாடல்கள். அந்த ‘யமுனை ஆற்றிலே’ பாடலுக்காக நாயகன் படும் அல்லல்தான் இசைஞானியின் பெருமையைக் காட்டுகிறது. அந்தக் கால காதலர்களும், வாலிபர்களும், வாலிபிகளும், காதலிகளும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களது காதலுக்கு தூது போகவும், ‘ஜே’ போடவும், வாழ வைக்கவும் இசைஞானிதான் கை கொடுத்திருக்கிறார். இதனை மறக்காமல் இந்தப் படத்தில் பதிவு செய்தமைக்காக இயக்குநருக்கு நமது நன்றிகள்..! 

பள்ளிப் பருவக் காதலைத் தொடாதவர்களே இருக்க முடியாது. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி. ஆண்கள் தங்களது உரிமையால் அதனை எப்போதேனும் வெளிப்படுத்தி விடுவார்கள். ஆனால் பெண்களால் முடியாது. செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களின் மனசுக்குள்ளும் ஒரு காதல் நிச்சயமாய் ஒளிந்திருக்கும். இது கணவர்மார்களுக்கும் தெரியும்.

அப்படிப்பட்ட ஒரு மறைக்கப்பட்ட காதலைத்தான் இந்த 2 மணி நேர திரைப்படத்தில் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தப் படம் ரசிகர்களின் மனதையும் திறந்து பார்க்க வைத்து, அவரவர் வாழ்க்கையை பின்னோக்கி கொண்டு போகிறது என்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கான அடையாளம்.

இப்படியொரு படத்தைக் கொடுத்த கையோடு இதன் இயக்குநர் பிரேம்குமார் மீண்டும் ஒளிப்பதிவு பணிக்கே திரும்பிச் சென்றாலும்கூட தப்பேயில்லை.

ஒரு படம் செய்தாலும் இப்படியொரு படத்தைச் செய்துவிட்டுப் போக வேண்டும் என்று இயக்குநர்களின் சாம்ராஜ்யத்தில் மில்லியன் டாலர் வார்த்தையாக இருக்க வேண்டி, இந்தப் படத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு படத்தைத் திரும்பப் பார்க்க விருப்பமில்லாதவர்களைக்கூட மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டிவிடும் படமாகவும், காதலர்களுக்கு ஒரு குற்றவுணர்ச்சியைக் கொடுக்கக் கூடிய படமாகவும் அமைந்திருக்கும் இந்த ‘96’ திரைப்படம் தமிழ்ச் சினிமாவுக்கு கோடை காலத்தில் கிடைத்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சி..!

கொண்டாடுவோம்..!! தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்..!!!

Our Score