விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..!

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..!

நடிகர் விஷால் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராகப் பணி செய்து வந்த ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தன்னை ஏமாற்றியிருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் இது குறித்து நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில்...

“எங்களது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்னும் பெண் கடந்த ஐந்தாண்டுகளாகக் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். எங்களது நிறுவனம் சம்பந்தமான அனைத்து கணக்கு, வழக்குகளையும், வருமான வரித் துறை சம்பந்தமான கணக்குகளையும் இவரே கையாண்டு வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.

இதனால் ஊழியர்களின் கணக்குகளை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா நிறுவனம் கட்ட வேண்டிய டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், மற்றும் ரம்யாவின் உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் ரூபாய் பணத்தினை மாற்றியுள்ளார்.

மேலும் போலியாக டிடிஎஸ் கட்டிய சான்றிதழையும், போலியான வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளையும் உருவாக்கியிருக்கிறார். மேலும், அவரது பொறுப்பில் இருந்த விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் லெட்டர்பேடை பயன்படுத்தி அவருடைய உறவினர்கள் பெயரில் போலியான வங்கிக் கணக்குகளைத் துவக்கி அதில் பண பரிவர்த்தனை செய்துள்ளார்.

டிடிஎஸ் மட்டுமில்லாமல் எங்களது நிறுவனத்தின் தினசரி வரவு, செலவு கணக்குகளில்கூட முறைகேடுகளை செய்துள்ளார். இது பற்றி போலியான கணக்குகளை எங்களுக்குக் காட்டியுள்ளார்.

மேலும், எங்களது நிறுவனத்தின் பிரத்தியேக மின்னஞ்சலில் உள்ள பல முக்கியமான மின் அஞ்சல்களை வேண்டுமென்றே அழித்துள்ளார். நிறுவனத்தின் கணிப்பொறியில் இருந்த முக்கியமான பைல்களை அழித்துவிட்டார்.

கடந்த ஜூன் 28-ம் தேதியன்று அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாக சொன்ன திருமதி ரம்யா சொன்னபடி செய்யாமல் தலைமறைவாகிவிட்டார். கூடவே அலுவலகத்தின் மிக முக்கியமான ஆவணங்கள் பலவற்றை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

மேற்படி பண மோசடியில் ஏற்பட்டு எங்களது நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாயை நஷ்டப்படுத்திய திருமதி ரம்யா மற்றும் இவருடன் சேர்ந்து கூட்டி சதி செய்திருக்கும் ராஜேஷ், சபரிஷ், ராதிகா, ராகுல், சிவகணேசன், தியாகராஜன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.