இன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..!

இன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை இயக்கவும், காப்பீட்டு நிறுவனத்திற்கு இன்ஸூரன்ஸ் பிரிமீயம் செலுத்தவும் தேர்தல் அதிகாரிக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான சோலைராஜா, குருசங்கர், ரவி ஆகியோர் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில்,

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் 1979-ல் உருவாக்கப்பட்டது. கவுன்சில் உறுப்பினர்கள் சேர்ந்துதான் அறக்கட்டளையை ஏற்படுத்தினார்கள். தேவைப்படுவோருக்கு நிதியுதவி வழங்க இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. கவுன்சில் நிர்வாகிகள் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் இரண்டுமே இயங்கவில்லை. எங்களை போன்ற உறுப்பினர்களால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியவில்லை.

கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக  ஸ்டார் ஹெல்த் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. பிரீமியம் தொகையாக வருடத்திற்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாயை காப்பீட்டு நிறுவனத்திற்கு அறக்கட்டளையில் இருந்து செலுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டுக்கான பிரீமியம் தொகை இதுவரையிலும் செலுத்தப்படவில்லை.

தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தனி அதிகாரியின் நிர்வாகத்தில் உள்ளது. கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவால் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகவில்லை.

எனவே, தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை இயக்கவும், காப்பீட்டு நிறுவனத்திற்கு பிரீமியம் தொகையைச் செலுத்தவும் உறுப்பினர்கள் கோரும் மருத்துவ உதவியை அளிக்கவும் தேர்தல் அதிகாரியை அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்…”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி அதிகாரியின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரலான அரவிந்த் பாண்டியன் இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரினார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

Our Score