full screen background image

“தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் சம்பந்தமேயி்ல்லை…” – நடிகர் விஷால் விளக்கம்

“தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் சம்பந்தமேயி்ல்லை…” – நடிகர் விஷால் விளக்கம்

பீட்டா அமைப்பில் தான் உறுப்பினராக இல்லையென்றும், அந்த அமைப்பை தான் எதிர்ப்பதாகவும்… ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் உறுதியான ஆதரவைத் தான் தந்திருப்பதாகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் கூறியுள்ளார்.

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் விஷால் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து விஷால் தொடர்ந்து பேசும்போது, “கிட்டத்தட்ட சென்ற ஜனவரி 5-ம் தேதியில் இருந்து சமூக வலைத்தளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார்.. பீட்டாவை ஆதரிக்கிறார்.. என்று பலரும் கூறியும், எழுதியும் வருகிறார்கள்.

விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை அவர் நேரடியாக கூறினால்தான் அது உண்மையான செய்தியாகும். சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் கூறும் செய்தி உண்மையாகாது.

நான் ஒரு கருத்து சொல்வதென்றால் மைக் மூலமாகவோ, பிரஸ் ரிலீஸ் மூலமாகவோ அல்லது என்னுடைய சமூக வலைத்தளத்தின் மூலமாகவோ நேரடியாகவே கூறுவேன்.

பீட்டாவின் முழு அர்த்தமே எனக்கு தற்போதுதான் தெரிந்தது. பீட்டாவை நான் எப்போதுமே ஆதரிக்கவில்லை. பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதைப் போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும்.

ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன். ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து வருகிறேன். இங்கே இளைஞர்கள் போராடுவது கண்டிப்பாக மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறேன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும், பீட்டாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக கூறி கொள்ள விரும்புகிறேன்..” என்றார் விஷால்.

Our Score