full screen background image

ஜல்லிக்கட்டிற்காக ஜனவரி 20-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்..!

ஜல்லிக்கட்டிற்காக ஜனவரி 20-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்..!

உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு தடையை மீறி தமிழகத்தில் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அலங்காநல்லூரில் மாணவர்களும், இளைஞர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்ததையடுத்து, அவர்களை விடுவிக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் போராட்டம் சூடு பிடித்தது.

ஜல்லிக்கட்டை முறையாக நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரையிலும் எங்களுடைய போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று காலை எட்டு மணியில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் விடிய விடிய தொடர்ந்து இன்றைக்கும் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போராட்டம் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வருவதால் மேலும் ஏராளமான இளைஞர்கள் மெரீனாவில் குவியத் தொடங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களோடு, இளைஞர்களும் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். குறிப்பாக மதுரையிலும், சென்னையிலும் இந்த போராட்டம் தீவிர மடைந்தது வருகிறது.

இந்த் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பொன்வண்ணன், “இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம்.. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை.

கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறு தழுவுதல் இருந்து வருகிறது. அதை நடத்தவிடாமல் பல வருடங்களாக நீதிமன்றங்கள் மூலம் தடைகளும், அதை நாம் மீட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.

கடந்த மூன்று வருடங்களாக அதுவும் நடக்காமல் தமிழர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். ‘பொறுத்தது போதும்’ என்று இன்று தமிழர்கள் பொங்கி அதற்கு நிரந்தர தீர்வுக்காக எழுந்துள்ளனர். குறிப்பாக மண்ணின் மைந்தர்கள், மாணவர்கள், இளைஞர்கள் இன உணர்வை வெளிபடுத்த தமிழகமெங்கும் களமிறங்க போராடி வருகிறார்கள். 

1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப் பெரிய மாணவர்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த ஒற்றுமை எங்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நமது உணர்வை வெளிபடுத்தும்வகையில் மௌன அற வழி போராட்டத்தை அறிவிக்கிறோம்.

மாணவர்களின் பின்னால் இருந்து மத்திய அரசுக்கும், சட்டத் துறைக்கும் அழுத்தம் தந்து, ஜல்லிகட்டுக்கு நிரந்திர தீர்வை பெறும் வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறோம்..!” என்றார்.

Our Score