சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ‘வேலையில்லா பட்டதாரி 2’ படப்பிடிப்பு இன்று துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படத்தைத் துவக்கி வைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு சவுந்தர்யா இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி 2’-வில் நடிக்கவிருப்பதாக சென்ற மாதமே அறிவித்திருந்தார் தனுஷ்.
இயக்குநர் சமுத்திரக்கனி, அமலாபால், விவேக், ரிஷிகேஷ் என முதல் பாகத்தில் உள்ள நடிகர்களே, இந்த 2-ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். முதல் பாக முடிவிலிருந்து, 2-ம் பாகம் துவங்குவது போன்று கதை எழுதியிருக்கிறாராம் தனுஷ்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணுவின் கலைப்புலி இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்திற்கு கதை, வசனத்தை தனுஷே எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி படத்தை இயக்கப் போகிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் அனிருத்தின் இசையில் இடம் பெற்ற தீம் மியூஸிக் இந்த இரண்டாம் பாகத்திலும் இடம் பெறவிருப்பதால் இசையமைப்பாளர் அனிருத்தின் பெயரும் இந்தப் படத்தில் இடம் பெறவுள்ளதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த கையோடு, கிளாப் அடித்து படத்தையும் துவக்கி வைத்துள்ளார். மேலும், ‘வேலையில்லா பட்டதாரி 2’ படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார் ரஜினி.