full screen background image

“மாதத்தில் 3 வாரங்கள் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸாக வேண்டும்” – இயக்குநர் விக்ரமன் கோரிக்கை..!

“மாதத்தில் 3 வாரங்கள் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸாக வேண்டும்” – இயக்குநர் விக்ரமன் கோரிக்கை..!

‘எடால்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான விக்ரமன் இசையை வெளியிட இயக்குநர் ரமேஷ் கண்ணா அதைப் பெற்றுக் கொண்டார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “எடால்’ என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ‘எடால்’ என்றால் எலிப் பொறி என்று அர்த்தமாம். படத்தின் தலைப்பை போலவே இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

9W5A7803

இந்தப் படத்திற்கு ஜோ – ஸ்மித் இருவரும் இசை அமைத்திருக்கிறார்கள். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.  இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் அறிமுகங்களாக இருந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எப்படி புதுமுகங்கள் நடித்த பல படங்கள் ‘ஒரு தலை ராகம்’ காலத்திலிருந்து வெற்றி பெற்றிருக்கிறதோ, அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைக்கு திரைப்பட சூழல் சிரமமாக இருக்கிறது. சின்ன படம் எடுப்பது மிக எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் வெளியிடுவது மட்டும்தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களென்றால் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் ரிலீஸ் தேதி சரியாக அமைவதில்லை. ஒரே நேரத்தில் 15 சிறிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்.

பல முறை நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.  இதை திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எல்லோரும் கலந்து ஆலோசித்து சிறிய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வழியை செய்ய வேண்டும் என்று இந்த தருணத்தில் நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

IMG_1282

அதாவது மாதத்தில் மூன்று வாரங்களாவது சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும். பண்டிகை காலங்களில் மட்டும்தான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக வேண்டும் என்ற விதிமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் சிறிய படங்கள் பிழைக்க முடியும்.

என்னதான் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றாலும்கூட சினிமா தோன்றிய காலம் தொட்டு தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பது எல்லாமே சிறிய படங்கள்தான். சிறிய படங்கள்தான் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்கிறது. அதனால் இந்த சிறிய படங்கள் ஜெயிப்பது நமது தமிழ்த் திரையுலகத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். எனவே ‘எடால்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களை மக்கள் பெரிதும் ஆதரிக்க வேண்டும்…” என்றார் இயக்குநர் விக்ரமன்.

நிறைவாக இயக்குநர் ஸ்ரீஜர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர் N.V.நிர்மல் குமார், படத்தின் கதாநாயகன் வெங்கட், கதாநாயகி யுவா, இசையமைப்பாளர் ஸ்மித், இயக்குநர் கிருபா சரவணன், இயக்குநர் அருள்ராசன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

Our Score