full screen background image

நட்சத்திரங்களுக்கு மேனேஜர்கள்தான் தவறான வழியைக் காட்டுகிறார்கள்-கேயார் குற்றச்சாட்டு..!

நட்சத்திரங்களுக்கு மேனேஜர்கள்தான் தவறான வழியைக் காட்டுகிறார்கள்-கேயார் குற்றச்சாட்டு..!

தான் நடிக்காத படங்களின் பட விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதியின் நல்லெண்ணத்தை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டுமென்கிறார் தயாரி்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

சமீபத்தில் நடந்த ‘அலையே அலையே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது கேயார் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இன்று இந்தப் பட விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருந்திருக்கிறார்.விஜய் சேதுபதி யதார்த்தமான நடிகர். இப்போதுள்ள நடிகர்களில் இயல்பான நடிப்பில் விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும். இன்று தங்கள் படங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கே நடிகர்கள் வரத் தயங்குகிறார்கள். பல பெரிய நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டுக்கு வருவதில்லை.

அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதி, தான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளுக்கும் வந்து கலந்து கொள்வது வாழ்த்துவது பாராட்டுக்குரியது. இன்னொரு படத்தோட ப்ரமோஷனுக்கு வந்திருந்து அவர் பெருந்தன்மையுடன் உதவுவதை வரவேற்க வேண்டும். இதை மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

இந்த விஷயத்தில் உலக நாயகன் கமல் அவர்களும் இப்படி மற்றவர் படங்களின் ப்ரமோஷனுக்கு வருகிறார். வாழ்த்துகிறார். சின்ன படம் பெரிய படம் என்று பார்க்காமல் முறையாக அழைப்பு விடுத்தால் கமல் வந்து வாழ்த்துகிறார். அது அந்தப் படத்துக்கு எவ்வளவு பெரிய விளம்பரம் தெரியுமா? இது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா..? அதே போல சகோதரர் சூர்யா அவர்களும் வருவது பாராட்டுக்குரியது..” என்றவர் கடைசியாகச் சொன்னதுதான் இவரது பேச்சின் ஹைலைட்..!

“இன்று பெரிய நடிகர்கள், நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளை மதிப்பதே இல்லை அதற்கு அவர்களது மேனேஜர்கள்தான் குறுக்கே நிற்கிறார்கள். அவர்கள்தான் நடிகர், நடிகைகளுக்கு இப்படி தவறான வழியைக் காட்டுகிறார்கள்…” என்றார்.

அந்த மேனேஜர்களை கட் செய்துவிடுங்கள் என்றுதா்ன் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள், ரொம்ப வருஷமா கதறிக்கிட்டிருக்காங்க ஸார்.. அதையும் கொஞ்சம் கவனிங்களேன்..!

Our Score