2010-ம் ஆண்டு ஹிந்தியில் Band Baaja Baaraat என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் இது. ரன்வீர் சிங் மற்றும் அனுஷ்கா சர்மாவின் ரொமான்ஸில் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட படம் இது. இதன் தமிழாக்கம்தான் இந்த ‘ஆஹா கல்யாணம்’..
‘கெட்டி மேளம்’ என்ற வெற்றிகரமான வெட்டிங் பிளானர் கம்பெனியை நிர்வகித்து வருகிறார்கள் ஸ்ருதி சுப்ரமணியம் என்ற ஹீரோயினும், சக்தி என்ற ஹீரோவும். அப்போது அவர்கள் இருவருக்குள்ளேயும் இருக்கும் லவ்வை மறைக்கிறார்கள்.. ஒரு சந்தோஷத் தருணத்தில் இருவரும் ஒருமித்து கலவியில் சேர்கிறார்கள். அது தொடர்பான பேச்சு மோதலாக வெடித்து பிஸினஸில் இருந்தும் பிரிகிறார்கள். ஆனால் வியாபார விஷயமாக மீண்டும் இருவரும் ஒரு கட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் வருகிறது.. இணைந்து வேலை செய்கிறார்கள். இந்த ஒரு வேலைக்கு மட்டுமா..? அல்லது தொடர்ந்தா என்ற கேள்வி அவர்கள் முன் வர… அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் அவர்களது காதலும் ஜெயித்ததா என்பதையும் மிக மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்..
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படம் என்பதால் ஹீரோவாக நானி ஓகே.. ‘ஈ’ படத்தின் வெற்றி தமிழகத்திலும் ருசிக்கப்பட்டதால் மிக எளிதாகத் தேர்வாகியிருக்கிறார். இந்தக் கேரக்டருக்கு கச்சிதமான பொருத்தம்.. தெரியாத கல்யாணத்தில் தெரிந்தவர்போல் சென்று சாப்பிட ஆரம்பித்து, ஹீரோயினுடன் அறிமுகமாகும் அந்த காட்சியில் துவங்கி இறுதிவரையிலும் மனிதர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். சந்திரலேகாவுடன் சட்டென்று மோதுவது.. படவா கோபியிடம் தனியாக கடை போட்டிருப்பதைச் சொல்லி தன் பக்கம் இழுப்பது.. ஸ்ருதியுடனான மோதலின்போது தனது ஈகோவை காண்பிக்காமல் மோதிவிட்டுப் போகும் அந்தக் கோபம்.. இறுதிக் காட்சியில் கன்னத்தில் அறைந்த பின்புதான் புரிந்து கொண்டு தன் மேல் உள்ள காதல்தான் ஸ்ருதியை அப்படி பேச வைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் தருணம்.. என்று எல்லாமே நானியின் புரிந்து கொள்ளாமையில்தான் இருக்கிறது என்பதை அவரே வெளிக்காட்டிக் கொள்கிறார்.. தெரியாததை தெரியாதது போல் காட்டுவதுதானே நடிப்பு.
ஹீரோயின் ஸ்ருதியாக நடித்திருக்கும் வாணி கபூர் அற்புதமான தேர்வு. ஹாலிவுக்கு மீண்டும் ஒரு வாட்டசாட்டமான ஹீரோயின். அசத்தல் நடனம்.. அற்புதமான நடிப்பு.. குளோஸப் காட்சிகளிலும், வசன உச்சரிப்புகளிலும் பின்னியிருக்கிறார். ஹிந்தி படங்களில் தேர்வாகி ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். தயாரிப்பாளரான ஆதித்ய சோப்ரா மலைவிழுங்கி மகாதேவன்.. மிக்க் கச்சிதமாக பொருத்தமான ஆளைத் தேர்வு செய்திருக்கிறார்.
தேர்வு செய்ததோடு இல்லாமல் ஷூட்டிங்கிற்கு முன்பாகவே ஹீரோயினுக்கு தமிழ் உச்சரிப்புக்காகவும், நடிப்புக்காகவும் பெரிய அளவுக்கு டிரெயினிங்கும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனை செய்ததன் பலன் ஸ்கிரீனில் மிக அழகாகத் தெரிகிறது.. ஒரேயொரு இடத்தில் மட்டுமே அழுகிறார். அதுதான் படத்தின் பெரிய டர்னிங் பாயிண்ட். அந்தக் கூடலை மிக சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு ஜஸ்ட் தேட் என்று ஹீரோ சொல்லிவிட்டுப் போகும்போனவுடன் இவருடைய முகத்தில் தெரியும் எக்ஸ்பிரஷன் நிச்சயம் கைதட்டல் வாங்கும்.. அதுவரையில் ‘வா’.. ‘போ’ என்று அழைத்தவள்.. ‘வாங்க.. போங்க..’ என்று கூப்பிடுவதைக்கூட நம்ம ஹீரோ புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறானே என்று நமக்கே எரிச்சலை மூட்டிவிட்டது இயக்குநரின் திறமை..! இறுதிவரையிலும் ஹீரோயின் வரும் காட்சிகளிலெல்லாம் கண்களைவிட்டு அகலவில்லை அந்த முகம்.. இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஹீரோயின் என்று சொன்னாலும் தப்பில்லை..
ஆட்டமும், பாட்டமும் இளமை துள்ளலுமாக இருவரும் இணைந்து ஆடும் ஆட்டங்களும், 2 டூயட் காட்சிகளும் அழகோ அழகு.. கிளைமாக்ஸ் பாடலுக்கு எத்தனை செலவு செய்திருந்தாலும், அத்தனைக்கும் பலன் ஸ்கிரீனில் தெரிகிறது.. வெல்டன் டைரக்டர்.. பொதுவாக ஹிந்தி படங்களில் மிகக் குறைவான பட்ஜெட்டில்கூட ரிச்னெஸ்ஸாக எடுத்துக் காட்டுவார்கள். அது அவர்களுக்கே உரித்தான ஸ்டைல். அது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் பொருந்தும்..!
சிம்ரன் சகலாகலாவல்லி சந்திரலேகாவாக ஒரு சில காட்சிகளில் வருகிறார். படவா கோபி, ஹீரோயினின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் எழுத்தாளர் பா.கிருஷ்ணன்.. ஹீரோவின் நண்பன் என்று அனைவருமே அளவாக நடித்திருக்கிறார்கள்..
ஒரு புதுமுக இயக்குநர் ஒரு பெரிய தயாரிப்பாளரின், மிகப் பெரிய பிராஜெக்ட்டை ஒப்புக் கொண்டு, அதனை வெற்றிகரமாக இயக்கியும் காண்பித்திருக்கிறார் என்றால் அவருக்கு எத்தனை தைரியமும், துணிச்சலும், அறிவும், திறனும் வேண்டும். விஷ்ணுவர்த்தனின் சீடர் தம்பி, கோகுல்கிருஷ்ணனுக்கு ஒரு சல்யூட்..!
இரண்டரை மணி நேர புல் அண்ட் புல் எண்ட்டெர்டெயின்மெண்ட்.. எந்த இடத்திலும் சறுக்கவில்லை.. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.. ஒரு சின்ன வார்த்தை விளையாட்டை வைத்துக் கொண்டு கதையை நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்தக் கால இளைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும்வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.
ஸ்ருதி மீது இருக்கும் ஈர்ப்பை, காதலை மறைத்துக் கொண்டு எப்போதும் அவர் கூடவே இருப்பதற்காகவே அந்த கெட்டி மேளத்தை விரும்பத் தொடங்கும் சக்தி, இறுதியில் அதுவே அவரது தொழிலாக மாறிவிட்டதை சில காட்சிகளியே உணர்த்திவிட்டார் இயக்குநர்.. இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது என்பதை மட்டும் தொடாமலேயே சென்றவர் அந்த இரவில் மட்டும் அதனைச் சுட்டிக் காட்டுகிறார்.. என் விருப்பப்படியே எல்லாம் போய்க்கிட்டிருக்கு என்று ஸ்ருதி சொல்வதே, அவள் விருப்பப்படிதான் அந்தக் கூடலும் நடந்திருக்கிறது என்பதை காட்டத்தான். ஆனால் ஹீரோவின் மரமண்டைக்கு அது ஏறவில்லை என்பதையும் அடுத்தடுத்த வார்த்தை விளையாட்டுகளில் சொல்லியிருக்கிறார்.
மிக அழகான காதல் முத்தத்தை.. இது போன்ற ஆழமான முத்தத்தை தமிழ்ச் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாச்சு. கடைசியா ‘குருதிப்புனலில்’ பார்த்தது.. அதற்கடுத்து இதுதான்.. எப்படி சென்சார் விட்டாங்கன்னு தெரியலை..?
எல்லாம் இருந்தும் கொஞ்சம் நேட்டிவிட்டியை கலந்து கொடுத்திருந்தால் சென்னை தவிர மற்ற பகுதிகளிலும் மக்கள் ஓடி வந்து ரசித்துப் பார்க்க வசதியாக இருந்திருக்கும்.. பார்க்கும் முகங்களில் முக்கால்வாசி அவாள்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும் இருப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது..
ஒளிப்பதிவுக்கு தனி மரியாதை கொடுக்க வேண்டும். அத்தனை ஆடம்பரம்.. அத்தனை வெளிச்சம்.. திருமண வீடுகளை மிக அழகாக காட்டியிருக்கிறார். இதனைவிட ஹீரோயினை அவர் காட்டிய விதமும் கவர்ச்சியானது.. ஒளிப்பதிவாளருக்கு அடுத்து கலை இயக்குநர். உண்மையில் கெட்டிமேளத்திற்கு என்றாலும், எத்தனை, எத்தனை வகையான பொருட்களை படத்தில் பட்டியிட்டிருப்பதையெல்லாம் பார்த்தால் அறிவுத்திறன் மிக்க ஒருவரை, இயக்குநர் நன்கு வேலை வாங்கியிருக்கிறார் எனத் தெரிகிறது..
இசை தரண்குமார்.. ஆர்ப்பாட்டமான திருமண பாடல்களைவிட காதல் பாடல்களே கேட்க வைக்கின்றன.. அந்த கிளைமாக்ஸ் பாடலும் ஆட்டமும், இசையும் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம்…
எந்த இடத்திலும் நம்மை போரடிக்கவிடக்கூடாது என்பதில் இயக்குநர் மிக உறுதியாகவே இருந்திருக்கிறார் போலும். ராஜீவ் ராஜாராமின் வசனங்கள் பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது.. அது மிகப் பெரிய பலமும்கூட.. இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகச் சொல்லியிருந்தால் படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்க முடியாது.. என்பதால் நானியின் கேரக்டரில் வசனங்கள் மூலமாகவே பிரச்சினைகளை உருவாக்கி.. அதை அப்படியே தொடரச் செய்து கிளைமாக்ஸில் வெடிக்க வைத்திருக்கிறார்கள் வசனத்தின் மூலமாகவே..! ஒரேயொரு இடத்தில் மட்டுமே வசனத்திற்கு தடா போட்டிருக்கிறார்கள். மிச்சம், மீதியெல்லாம் இளமை பட்டாசு…
படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேரின் வயதும் 26-க்குள்தானாம்.. அதனாலேயே இந்தப் படம் இளமையும், துள்ளலுமாக இருக்கும் என்று இயக்குநர் முன்கூட்டியே சொல்லியிருந்தார். நான்கூட அதை முதலில் சந்தேகப்பட்டேன். இப்போது முழுமையாக அது நீங்கிவிட்டது.. நன்று கோகுல்கிருஷ்ணா.. உங்களது குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டீர்கள்.. தொடருங்கள்..!
ஆஹா கல்யாணம் – அவசியம் பார்க்க வேண்டிய படம்..!