‘கரகாட்டக்காரன்’ படத்தில் வருவதைப் போல “ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு.. இன்ணொன்னு எங்கே?” என்று கேட்டு காமெடியாகி நொந்து போயிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்..
இந்தக் காமெடியை வெளியில் சொன்னவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். ‘அலையே அலையே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயார்.. “சென்ற ஆண்டு 180 பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை நினைத்து பாராட்டுவதா, பயப்படுவதான்னு தெரியலை. சேட்டிலைட் சேனல்கள் சின்ன படங்களைக் கண்டு கொள்வதில்லை. சின்ன படங்களை வரவேற்பதில்லை. இன்று இத்தனை சேனல்கள் வந்திருக்கின்றன? வளர்ந்திருக்கின்றன..! இவை எல்லாமே சினிமாவைப் பின்னணியாக வைத்துதான் வளர்ந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் சின்ன படங்களை கவனிப்பதில்லை. அவர்கள் எல்லாருமே சிறு படங்களை ஆதரிக்கணும்..
சென்ற ஆண்டு 164 படங்கள் வந்தன. 200 படங்கள் சென்சார் சர்டிபிகேட் வாங்கியும் இன்னமும் வெளிவர முடியாமல் கிடக்கின்றன. கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் விபரமும் மிக மோசமாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார். அந்தத் தயாரிப்பாளருக்கு வெளியான முதல் நாளே தியேட்டர் மேனேஜர் போன் செய்தார். ‘ஸார், நம்ம படத்துக்கு இரண்டே பேர்தான் வந்திருக்காங்க.. காட்சியை நிறுத்தட்டுமா.. ஓட்டட்டுமா..?’ என்றிருக்கிறார். அதே சமயம் தியேட்டரில் இருந்து தயாரிப்பாளரின் பிரதிநிதியும் அவருக்கு போன் செஞ்சிருக்கார். ‘ஸார்.. தியேட்டர்ல நம்ம படத்தை பார்க்க ஒரு ஆள்கூட இல்லை’ என்று… அப்போது தயாரிப்பாளர் கேட்டாராம், ‘என்னப்பா.. ரெண்டு பேர் இருக்கிறதா இப்போ மேனேஜர் சொன்னாரே?’ன்னு..! ‘அவர் சொன்ன, அந்த இரண்டு பேர் நாங்கதான் ஸார்’ என்றாராம் தயாரிப்பாளரின் ஆள். இப்படி இருக்கிறது இன்றைய தமிழ்ச் சினிமாவுலகின் நிலைமை..” என்றார் கேயார்..
இது சென்ற வாரம் வெளியான ‘காதலில் யாரடி’ படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாமென்று நினைக்கிறோம். ஏனெனில் தேவி காம்ப்ளக்ஸில் Second Show-வாக மட்டுமே திரையிடப்பட்ட அந்தப் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் முதல் நாளே ‘ஷோ’ கேன்சலாகும் சூழல் வந்திருக்கிறது.
உடனேயே படத்தின் தயாரிப்பாளர் ஒரு நாள்.. இயக்குநர் ஒரு நாள்.. கேமிராமேன் ஒரு நாள் என்று படத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளைக்கு என்று பேசி வைத்து, தாங்களே 25 சீட்டுக்களை தங்களது கைக்காசு போட்டு வாங்கி, ஆட்களை அழைத்து வந்து ‘ஷோ’வை ஓட்டியதாக தேவி காம்ப்ளக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!
சின்ன பட்ஜெட் படங்கள் இது போன்ற நிலைமையை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை..