“விமர்சனம் மட்டுமே செய்யாதீர்கள்; திறனாய்வும் செய்யுங்கள்” – விஜய்சேதுபதியின் வேண்டுகோள்

“விமர்சனம் மட்டுமே செய்யாதீர்கள்; திறனாய்வும் செய்யுங்கள்” – விஜய்சேதுபதியின் வேண்டுகோள்

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகை தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த திரைப்படம் நல்லபடியாக  வெளியாக வேண்டும். என்னுடைய தாய் தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் இந்த ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

திரைப்படம் என்பது சாதாரண பொழுது போக்குக்காக மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது.  மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சிகூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் பல கோடி ஆண்டுகளுக்கும் பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.

திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்…” என்றார்.

 
Our Score