படத்தை எழுதி, இயக்கி இருப்பது பாலாஜி தரணிதரன். தயாரிப்பு – முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயன், அஜித் தார்தாரே. இசை – சாய் அபயங்கர், ஒளிப்பதிவு – எஸ்.கே. செல்வகுமார். படத்தொகுப்பு – ஆர். கலைவாணன்.

பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் இணைந்து தந்திருக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு முன்பேயே ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.

படத்தின் கதை, நீங்கள் எதிர்பார்க்காத, நிச்சயமாக யாருமே ஊகிக்க முடியாத ஒரு கதை. அந்த வகையில் ஒரு சிறந்த கதையை தேர்வு செய்ததற்காக முதலிலேயே இந்த இயக்குநர் பாராட்டை பெற்றுவிட்டார்.

இந்த கதை 1996-களில் நடக்குது. அப்போது ஜெயலலிதாவின் கொடுமையான முதல் ஆட்சிக் காலம் முடிந்து கலைஞர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்த நேரம்.

மதுரை அருகேயிருக்கும் ஒரு கிராமப் பகுதியில் நடக்கும் கதை இது. ‘பத்தா’ அப்படிங்கிற விஜய் சேதுபதி அந்த ஊரிலேயே மிகப் பெரிய ரவுடி. அந்த ஊரில் யார் தன்னை எதிர்த்தாலும் உடனே போய் அடிச்சு நொறுக்கி விடுவார் விஜய் சேதுபதி. 

இவருடைய மனைவி லிஜாமோல் ஜோஸ் இவர்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்க. அந்த பொண்ணு ஆறாம் வகுப்பு படிக்கிறாங்க.

பொண்ணு மேல பயங்கர பாசம் இவருக்கு, அதே மாதிரி மனைவி மேலயும் பாசம். ஆனால், மனைவிக்கோ இவர் பண்ற அடிதடி, அடாவடி கட்டப் பஞ்சாயத்து, சண்டை.. இதெல்லாம் பிடிக்காமல் இருக்கு.
 
இதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார் மனைவி. ஆனாலும் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்கது செய்து கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் தண்ணியடிச்சுட்டு வீட்டில் வந்து சலம்பல் பண்றது.. சாப்பாடு பிடிக்கலை என்று சொல்லி தட்டைத் தூக்கியெறியும் ஆணாதிக்க வேலையையும் கச்சிதமா செஞ்சுட்டுத்தான் இருக்காரு.
 
அதே ஊர்ல இருக்கும் ஒரு சின்ன பையன் சபரி. மூன்றாம் கிளாஸ் படிக்கிறான். அவங்க வீட்டுக்கு ஒரே பையன். அவன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் டீக்கடையில ஒரு நாள் விஜய் சேதுபதி டீ குடிச்சிட்டு இருக்கும்போது, மொட்டை மாடியிலிருந்து அவரை பயத்துடன் எட்டிப் பார்க்கிறான்.

அந்த சமயம் மேலிருந்து ஒரு சின்ன செங்கல் விஜய் சேதுபதியின் காலில் விழுந்து ரத்தம் வருகிறது. உடனேயே “எவன்டா அவன்.. வெட்டிருவோம்; குத்திருவோம்..” என்று சொல்லி விஜய்யின் அடியாட்கள் மேல ஓடி வர… சபரி ஓடி போய் ஒழிந்து கொள்கிறான். அப்பவே அவன் மனதில் விஜய் சேதுபதி மேல மிகப் பெரிய பயம் ஏற்பட்டுவிடுகிறது.

ஸ்கூல்ல படிக்கிற பசங்க எல்லாருக்குமே அந்த பத்தா அப்படிங்கிற விஜய் சேதுபதி மேல ஒரு தனிப்பட்ட பயம். அவரைப் பத்தி பல்வேறு கற்பனை கதையையெல்லாம் சொல்லி சபரியை மேலும் பயமுறுத்துறாங்க.

இந்த நேரத்தில், ஆண்டு இறுதித் தேர்வில் சபரி தேர்வு எழுதும்போது, அவங்க அப்பா வாங்கி கொடுத்த ஒரு விளையாட்டு பொருளை வச்சு விளையாடுகிறான். இதைப் பார்த்த டீச்சர் அதை வாங்கிட்டு அவனை வீட்டுக்கு அனுப்பிடுறாங்க. அந்த விளையாட்டுப் பொருளையும் அவன்கிட்ட கொடுக்காம அவங்களோட டீச்சர்ஸ் ரூம்ல இருக்கிற கபோர்ட்ல வைச்சுர்றாங்க. அதோட பைனல் எக்ஸாம் முடிஞ்சு ஸ்கூலுக்கு 2 மாதம் லீவு விட்டாச்சு.

சபரிக்கு அந்த விளையாட்டுப் பொருளை எடுக்க வேண்டுமென்று ஆசை. பள்ளியில் பல கதவுகள் பூட்டப்படவில்லை என்று ஊர்க்காரர்கள் பேசும் பேச்சு அவன் காதில் விழுகிறது.

இதனால் அந்தப் பொருளை எடுக்க பள்ளிக்குள் செல்கிறான். அதை எடுத்துவிட்டு வந்தவன் கக்கூஸூக்கும் போய்விட்டு வெளியில் வந்தவன்.. அந்தக் கதவை வெளியில் பூட்டிவிட்டு வருகிறான்.

அந்த நேரத்தில் கக்கூஸின் உள்ளேயிருந்து எவன்டா கதவைப் பூட்டுனது என்று குரல் கேட்க.. திக்கென்ற உணர்வுடன் கதவருகே வந்து கேட்கிறான் சபரி. “டேய் நான் பத்தாடா.. எவன்டா கதவைப் பூட்டினது.. இப்போ திறக்கல வெளில வந்து வெட்டிருவேன்..” என்று உள்ளேயிருந்து கத்துகிறார் விஜய் சேதுபதி. இதைக் கேட்டவுடன் பயந்து போன சபரி ஐயா சாமின்னு விழுந்தடிச்சு வீட்டுக்கு ஓடி வருகிறான்.
 
இப்போது ஊரே பத்தாவைத் தேடுகிறது. விஜய்யின் வீட்டிலும் ஆள் வைத்துத் தேடுகிறார்கள். போலீசுக்கும் புகார் செல்கிறது. அவர்களும் தேடுகிறார்கள். பத்தாவின் எதிரிகள் அனைவரிடமும் போய் கேட்கிறார்கள். பதில் இல்லை.
 
சபரிக்கும் பத்தாவை எல்லாரும் தேடுகிற விஷயம் தெரிந்து பயப்படுகிறான். விஜய் சேதுபதியை பாத்ரூமுக்குள்ள வச்சு பூட்டி இருக்கோமே… இப்ப அவர் என்ன பண்ணுவாருன்னு தெரியலயே.. என்று கலக்கமடைகிறான்.
 
சபரி அடுத்து என்ன செய்யப் போகிறான்? விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பித்தாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
 
ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஒரு கதைதான். ஒரு மிகப் பெரிய ரவுடி. அடிதடி, வெட்டுக் குத்துக் கொலைக்கு அஞ்சாத மனுஷன். ஆனா, ஒரு ரூமுக்குள்ள அடைச்சு வச்சதால வெளியில் வர முடியல. 
 
வர முடியாத பொழுது தன்னைப்பற்றி நினைச்சு பார்க்கிறான். நீ இவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் இப்போ என்ன பண்ண முடியும்? கதவை உடைக்க முடிஞ்சதா உன்னால.. அந்த சுவரை உடைக்க முடிஞ்தா.. தப்பிக்க முடிஞ்சதா.. கதவைப் பூட்டினவன்கிட்ட நைசா பேசி அந்த கதவை திறக்க வைக்க முடிந்ததா?
 
இப்படியான ஒரு கேள்விகளை அந்த ரவுடியின் மனதில், ஏற்படுத்தும்விதமாக இந்தப் படத்தின் கதைக் கருவை எழுதியுள்ளார் பாலாஜி தரணிதரன். அதற்காகவே இந்த படத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு பாலாஜிக்கு.
 
ஏனெனில் எல்லா படங்களிலும் ரவுடிகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். கடைசியாக கத்தியால் அல்லது துப்பாக்கியால்தான் சாவாங்க என்றுதான் அந்தக் கதை முடியும்.
 
ஆனால்  இந்தப் படத்தில் ஒரு சின்ன பையன் சாவுக்கு இணையான ஒரு மன உணர்வை பத்தாகவுக்கு உணர்த்துகிறான். “நீ இப்போ ஒண்ணுமே இல்ல.. சும்மா கையில ஆயுதம் இருக்கறதுனால நீ ஒரு பெரிய ஆள் அவ்வளவுதான். மத்தபடி உனக்கும் ஒரு தோல்வி உண்டு…” என்பதை பத்தாவே ஏற்றுக் கொள்ளும் மாதிரியான ஒரு சிச்சுவேஷனில் சபரி கொண்டு வந்து நிறுத்துகிறான்.
 
விஜய் சேதுபதி… சும்மா சொல்லக் கூடாது. ஏற்கனவே தெரியும் அற்புதமான நடிகர்தான். இந்தப் படத்திலும் அவருடைய முகத் தோற்றம் ஒரு ரவுடி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கிறது. அவருடைய முகத் தோற்றமும் அதற்கு பொருத்தமாக இருப்பதால் ரவுடி கதாப்பாத்திரக்கை அனாயசமாக செய்கிறார் விஜய் சேதுபதி. இப்போது முழுக்க, முழுக்க ரொமான்ஸ் ஹீரோவாக நடிக்க முடியாது என்பதால் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில்தான் நடித்தாக வேண்டும். இதையும் ரொம்பவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. 
 
“முதல் பாதியில் அந்த ரவுடித்தனம், தண்ணி அடிச்சுட்டு வந்து வீட்டில் மனைவியிடம்  கெஞ்சுவது, கொஞ்சவது.. மகளிடம் கொஞ்சுவது மாதிரியான காட்சிகளில் எல்லாம் ஒரு இயல்பான ஒரு மனிதராக தன்னுடைய நடிப்பை காட்டியிருக்கிறார்.
 
பாத்ரூமுக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது.. அந்த நேரத்தில் தன்னுடைய மனைவியை நினைத்து அழுவது… தன்னுடைய மகளை நினைச்சு வருத்தப்படுவது.. எப்படியாவது வெளியே போகணுமே என்று அவர் துடிக்கின்ற துடிப்பு, பொற போட வந்தவனிடம் திடீர்னு கெஞ்சுறது, அதுக்கப்புறம் தன்னுடைய வழக்கமான குணத்தில், ‘டேய் வெளில வந்தா வெட்டிருவேன்டா’ என்றெல்லாம் பேசி கடைசியில் அவன் ஓடும்போது, போகாதடா போகாதடான்னு கெஞ்சுவது… இப்படி ஒரு மனிதன், இப்படி ஒரு இக்கட்டில் சிக்கினால் என்ன மாதிரியிருப்பானோ அதை அப்படியே செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. பாராட்டுக்கள்.
 
அதுக்கு அடுத்த இடம்னு பார்த்தா அந்த பையன்தான்.. சபரி. முகத்தில் அப்படியொரு நடிப்பைக் காண்பித்துள்ளான். விஜய் சேதுபதியைவிடவும் இவனைத்தான் நடிக்க வைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கணும். அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்கான் அந்த பையன். அந்த பையனுக்கு எதுவுமே தெரியாது. சிச்சுவேஷனை மட்டும்தான் சொல்லி இப்படி நடிப்பான்னு சொல்லி இருப்பார் இயக்குநர். அவ்வளவுதான்.
 
தன்னால் முடிஞ்சதை செய்திருக்கிறான். தன் முகத்துல காட்டியிருக்கும் அந்த பயம், திகைப்பு, அதிர்ச்சி, பரிதாபம், ‘மாட்டிக்கிட்டோமே’ என்று அவ்வப்போது முழிப்பது.. எப்படியாவது விஜய் சேதுபதிகிட்ட உண்மையை சொல்லிவிடலாம் என்று தவிக்கிற தவிப்பு, கடைசியாக அந்த உண்மையைச் சொல்லும்போது அவனுடைய நடிப்பைப் பார்த்து நமக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அப்படியே தூக்கிக் கொஞ்சலாம் போல இருந்தது. அவ்வளவு அழகான நடிப்பை கொடுத்திருக்கான் அந்தப் பையன். 
 
இந்த லிஜோமோள் ஜோஸ் என்ற நடிப்பு பிசாசு, அவ்வளவு அழகாக நடிச்சிருக்கு. பல காட்சிகளில் குளோசப் ஷாட்டில் விஜோமோளின் நடிப்பு நம்மைக் கட்டிப் போடுகிறது. விஜய் சேதுபதியிடம் சண்டை போடுவதெல்லாம் டாப். அவ்வளவு அழகான ஒரு நடிப்பு. இந்தப் படத்தை ரொம்பவும் தாங்கிப் பிடிச்சிருக்காங்க.
 
விஜய் சேதுபதியுடன் இருக்கிற ரெண்டு நண்பர்கள்.. அதுல ஒரு நண்பர் ரொம்ப அழகா கடைசிவரைக்கும் இடையில இடைல லேசா காமெடியைக் கொடுத்திருக்கிறார். சபரியோட அம்மா, அப்பாவா நடிச்சவங்க. இஸ்மத் பானுன்னு மத்தவங்களும்  சொல்லக் கூடிய அளவுக்கு நடிச்சிருக்காங்க.
 
இயக்குநர் பாலாஜி தரணிதரன் குறையே வைக்காமல் மிகச் சிறந்த நடிப்பை தன்னுடைய நடிகர்களிடமிருந்து வரவழைத்திருக்கிறார். அந்த வகையில் அனைத்து பாராட்டுக்களும் அவரையே போய் சேரும்.
 
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வகுமாரின் அழகான ஒளிப்பதிவில் 1996-ம் ஆண்டில் நடக்கின்ற கதை என்பதால் எந்தவொரு நாகரிகப் பூச்சும் தெரியக் கூடாது என்பதற்காக உள் கிராமப் பகுதிகளில் மட்டுமே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்கள்.
 
காட்சிகளில் கலர் டோனில் காட்சிக்குக் காட்டி வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். விஜய் சேதுபதியின் வீட்டுக்குள் நடக்கும் காட்சிக்கு ஒரு கலர்.. சபரியின் வீடு வேறொரு கலர்.. பள்ளிக்கு வேறொரு கலர் என்று காட்சிக்கு காட்சி பல கலர்களைக் காட்டியிருப்பதால் படத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகமாகிக் கொண்ட போகிறது.
 
சாய் அபியங்கரின் இசையில் மகளே, மொழியே என்ற இரண்டு பாடல்களும் கேட்கக் கூடிய பாடல்கள். ஒரு சோகப் பாடலில் மாண்டேஜ் ஷாட்களில் மெலிதான சோகத்தில் ஒலிக்கிறது. கொண்டாட்டமான பாடல்களையும் சிறப்பாகத்தான் போட்டு இருக்காரு.
 
சாய் அபயங்கர் பாலாஜி தரணிதரனின் கையில் சிக்கியதால் பின்னணி இசையும் கொஞ்சம் அடக்கமாத்தான் அமைந்துள்ளது. சபரி ஸ்கூல்ல இருந்து ஓடி வரும்போது தடதடன்னு ஒரு மியூசிக்கை போட்டுவிட்டு நம்மைப் பயமுறுத்திவிட்டார். இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதி மேடையில் பாடலைப் பாடி அனைவரையும் கவரும்போது எழும் எமோஷனை கூட்டும் வகையில் இருந்த பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்றச் செய்துள்ளது. அந்த வகையில் சாய் அபயங்கர் முதல்முறையாக நம்மிடமிருந்து பாராட்டை பெறுகிறார்.
 
படத் தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் இது எமோஷன்ஸ் கலந்த ரவுடி கதை என்பதை உணர்ந்த அந்த உணர்வுகளைத் தருவதுபோலவே படத்தை சிறந்த முறையில் தொகுத்தளித்திருக்கிறார்.
 
1996-ம் ஆண்டின் சாயல் தெரிய வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு படத்தின் கடைசி காட்சிவரையிலும் கலை இயக்கத்தை சிறப்பாக செய்திருக்கும் கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
 
அந்தக் காலத்திய உடைகளை தேர்வு செய்து வடிவமைத்துக் கொடுத்த வடிவமைப்பாளருக்கும், அனைவரின் மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தை கச்சிதமா செய்திருக்கும் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
 
இந்தப் படத்திலும் லாஜிக் மிஸ்டேக் என்றெல்லாம் பேசினால், கடைசியாக இதுபோன்ற நல்ல படங்களும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனால் இந்தப் படத்தில் குறைகளைத் தேடாமல் இயக்குநர் பாலாஜி தரணிதரன் தன்னுடைய சிறந்த இயக்கத்தில், ஒரு நல்ல கதையில், விறுவிறுப்பான திரைக்கதையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவோம்.
 
“ஒரு சின்ன பையன் என்னைப் பார்த்து பயந்திருக்கான்னா… நான் எந்த அளவுக்கு கேவலமா இருந்திருக்கேன்..” என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஒரு  ரவுடி தள்ளப்படுகிறான். அதன் பிறகு “நான் இப்படி வாழ விரும்பவில்லை…” என்று சொல்லி ரவுடி தொழிலிலிருந்து திருந்தி ஒரு நல்ல மனிதனாக வாழனும்னு நினைக்கிறார் பாருங்கள்.., இதுதான் படம். ஒரு திரைப்படம் இப்படித்தான் இருக்கணும்.
 
இதுதான் ஒரு சிறந்த கதை.. திரைக்கதை.. அந்த வகையில் பாலாஜி தரணிதரனின் இந்தப் படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

வீட்ல சின்னப் பசங்க இருந்தா அவங்களோடு சேர்ந்து போய் அவசியம் பாருங்க.!