விஜய் சேதுபதியின் தயாரிப்பில் ஹாலிவுட் இயக்குநர் அறிமுகம்..!

விஜய் சேதுபதியின் தயாரிப்பில் ஹாலிவுட் இயக்குநர் அறிமுகம்..!

இன்னமும் 3 வருடங்களுக்கு கால்ஷீட்டே இல்லை என்று டைரியை குப்புறப்போட்டு கவுத்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த அளவுக்கு அவருக்கான படங்கள் காத்திருக்கின்றன. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ முதல் நேற்றைய ‘பண்ணையாரும் பத்மினியும்’வரையிலும் அவருடைய ஒவ்வொரு படங்களும் வித்தியாசமானவைதான்..

அனைத்துத் தரப்பினராலும் பேசப்படும் நடிகராக தலையெடுத்திருக்கும் விஜய்சேதுபதிக்கு இப்போது எல்லாருக்கும் வரக்கூடிய ஆசை வந்துவிட்டது. அது தானே தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்பது. ஏற்கெனவே ஒரு முறை நண்பரான இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தைத் துவக்கி, இதற்காக கெடா மீசையெல்லாம் வளர்த்து காரைக்குடியில் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடித்தார். ஆனால் அதற்குப் பின் அதனை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மறுபடியும் நடிக்கப் போகிறேன்னு சொல்லிவிட்டுப் போனார்..

இப்போது அதைவிட பெரிய பிராஜெக்ட்டுடன் தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம் விஜய் சேதுபதி. தமிழில் அவர் தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது பிஜூவிஸ்வநாதன் என்ற ஹாலிவுட்-இந்திய இயக்குநர்.. இதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..

இந்த பிஜூவிஸ்வநாத்தின் பயோடேட்டாவே ஒரு மைல் நீளத்திற்கு உள்ளது. இவர் ஆங்கிலம், ஹிந்தி, ஜப்பான், ஐரீஷ், இத்தாலி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். இவருடைய பல படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் உலக சினிமா இயக்குநராக இருக்கும் இவரை முதல்முறையாக விஜய்சேதுபதி தமிழுக்கு இழுத்து வருகிறார்.. கூடவே இந்தப் படத்திற்கான கதையை விஜய் சேதுபதியே எழுதப் போவதாகவும் தகவல்..

நல்ல, தரமான படைப்புகளில் தான் இருக்க வேண்டும் என்கிற ஒரேயொரு குறிக்கோளோடு திரையுலகில் வலம் வரும் விஜய் சேதுபதியின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்..! 

Our Score