full screen background image

16 வயதினிலே படத்தில் நடித்தது பற்றி கமல்ஹாசன்..!

16 வயதினிலே படத்தில் நடித்தது பற்றி கமல்ஹாசன்..!

தமிழ்ச் சினிமா வரலாற்றில் ’16 வயதினிலே’ படம் ஒரு டிரெண்ட் செட்டர் என்றே அழைக்கப்படுகிறது. இதற்குப் முன்பான தமிழ்ச் சினிமாக்கள்.. இதற்கு பின்பான தமிழ்ச் சினிமாக்கள் என்றுதான் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

அப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இப்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களும், இப்போதும் இந்திய சினிமாவிலேயே தலைசிறந்த கலைஞர்களாக இருந்து வருகிறார்கள். இயக்குநர் பாரதிராஜா, ‘சப்பாணி’ கமல், ‘பரட்டை’ ரஜினி, ‘மயிலு’ ஸ்ரீதேவி, கவுண்டமணி, ‘இசைஞானி’ இளையராஜா, பின்னணி பாடகர்கள், கவிஞர்கள் என்று, இந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே புகழ் பெற்றவர்கள்தான்..

அப்படிப்பட்ட இந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கமல்ஹாசன் தானாகவே விரும்பிச் சென்று பெற்று நடித்தார் என்பதுதான் மிகச் சிறப்பானது.. அவர் மட்டும் “என்ன… கோவணத்தைக் கட்டிக்கிட்டு நான் நடி்ககணுமா?” என்று யோசித்திருந்தால், அந்தப் படம், இன்றைக்கு இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்..

அந்தப் படத்தின் கதையை பாரதிராஜா தன்னிடம் முதல்முதலாகச் சொன்ன நேரத்தையும், அதன் பின் நடந்தவைகளையும் பற்றி கமல்ஹாசன், சமீபத்தில் நடந்த நடிகை ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழாவில் பாரதிராஜாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.

கமல் பேசும்போது ” இங்ககூட பிரசாத் லேப்பில், இந்தப் பையன மாதிரி சுருட்டை முடியோடு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் வந்து என்கிட்ட கதை சொன்னார். அப்போ நான் தொடர்ந்து ஷூட்டிங்ல நடிச்சிட்டு ரெஸ்ட் இல்லாம, உடம்பு சரியில்லாம.. வாந்தி எடுத்துட்டுப் படுத்திருந்தேன். அப்போ என் வயிற்றைத் தடவிக்கிட்டே ‘மயிலு’ன்னு ஒரு கதையை சொன்னார். இவர்தான்.. ‘மயிலு’ கதை என் மனதில் அப்படியே பதிஞ்சுடுச்சு. அந்த ‘மயிலு’தான் பின்னாடி ‘பதினாறு வயதினிலே’ன்னு படமாக வந்தது. அப்போ இவர்கிட்ட நாலஞ்சு கதைகள் இருந்தது. கொஞ்சநாள் கழித்து திரும்பவும் என்கிட்ட கதை சொல்ல வந்தாரு. ரெண்டு, மூணு கதையைச் சொல்லிட்டு சரியில்லாம, இன்னொரு கதையை ஆரம்பிச்சாரு. ‘என்ன மயிலு கதையா?’ன்னு கேட்டேன். ஆச்சரியமா பார்த்துட்டு, ‘உங்களுக்கு எப்படித் தெரியும்..?’னு கேட்டார். அந்தக் கதையின் பாதிப்பு அப்படி..!அன்னிக்கே முடிவு செஞ்சிருந்தேன். நிச்சயமா இந்தப் படத்துல நாமதான் நடிக்கணும்னு.. அதுதான் நடந்துச்சு..” என்றார்.

நல்ல கதைகளைத் தேடிப் பிடித்து, விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது உண்மையான ஒரு கலைஞனி்ன் விருப்பமாகத்தான் இருக்கும்.. அந்த வரிசையில் கமல், ஒரு உண்மையான கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை..!

Our Score