full screen background image

பெப்ஸி தொழிலாளர்களுடன் மோதிய பத்திரிகையாளர்கள்..!

பெப்ஸி தொழிலாளர்களுடன் மோதிய பத்திரிகையாளர்கள்..!

அமைதியாகப் பேசி முடித்திருக்க வேண்டிய விஷயத்தில் ஆணவத்துடன் நடந்து கொண்டு அனர்த்தமாக்கி முடித்திருக்கிறார்கள் பெப்ஸி அமைப்பின் கீழ் வரும் தயாரிப்பு உதவியாளர்கள் சங்கத்தினர்..!

சென்னையில் எங்காவது கேமிராவுடன் யாராவது நின்றிருந்தாலே சில சினிமா சங்கத்தினர் திடீர் அரசியல்வாதிகள்போல் ஆஜராகி, யார்.. என்ன..? சினிமாவா..? என்ன படம்..? யார் புரொடெக்சன்.. என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெப்ஸியின் கீழ் இருக்கும் இந்தச் சங்கங்கள் அவரவர் உறுப்பினர்களை மட்டுமே பயன்படுத்தி தமிழ்ச் சினிமாக்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள். புதிய ஆட்களை வைத்து எடுக்கும் ஷூட்டிங்கை நிறுத்தி.. கலாட்டாக்கள் செய்த வகையில் பலவித முன்னுதாரணங்கள் இங்கே உண்டு.

அந்த வகையில் இன்று காலையில் பிரசாத் லேப்பில் நடந்த சம்பவமும்  ஒன்று. பிரபல சின்னத்திரை நடிகர் கெளசிக்கின் இயக்கத்தில் ‘ஆதியும், அந்தமும்’ என்ற படம் தயாராகியிருக்கிறது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. 9 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் எப்போதும்போல் பத்திரிகையாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

DSC_0249

இந்த நேரத்தில் திடீரென்று வெள்ளையும் சொள்ளையுமாய் வந்த 10 பேர் கொண்ட கும்பல் உள்ளே வந்தது. எடு்தத எடுப்பிலேயே, “இங்க யாரும் சாப்பிடக் கூடாது.. டேய்.. உன் சாப்பாட்டை எடுத்திட்டு கிளம்பு.. நீ டிபன் போடக் கூடாது..” என்று டிபன் கொடுத்துக் கொண்டிருந்த தனியார் ஹோட்டல் ஊழியர்களை பார்த்து குரலை உயர்த்தி பேசினார்கள்.

DSC_0250

சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது “நாங்க பெப்ஸி ஸார். ஸ்டூடியோக்குள்ள டிபனோ, சாப்பாடோ பரிமாறணும்னா அதை நாங்கதான் செய்யணும். பெப்ஸி அமைப்பில் இல்லாதவங்களுக்கு இங்கே அனுமதியில்லை..” என்றார்கள்.

DSC_0251

“நாங்க வருஷக்கணக்கா இதே இடத்துல, இதே கடை சாப்பாட்டைத்தான் சாப்பிட்டிக்கிட்டிருக்கோம். இப்ப வந்து சொல்றீங்க. நீங்க எதா இருந்தாலும் தயாரிப்பாளர்கிட்ட போய் பேசுங்க..” என்று பத்திரிகையாளர்கள் சொன்னதற்கு அவர்கள் கைகளில் இருந்த தட்டுக்களை பறித்து.. “இங்க எவனும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். நீ என்ன சாப்பிடுறது..? மீடியான்னா என்ன பெரிய இதா..? உங்களுக்கும் சேர்த்துதான் சொல்றோம்..?” என்று கேட்டு அநாகரிகமாக நடந்து கொண்டனர்..

DSC_0252

அதிர்ச்சியான பத்திரிகையாளர்கள் வந்தவர்களிடம் சமாதானமாகப் பேசத் துவங்க.. “எங்களை மீறி எவனும் இங்க இருக்கவே முடியாது.. எவனாவது சாப்பிட்டுட்டு வெளில வந்திருவீங்களா..? கேட்டைகூட தாண்ட முடியாது.. ஒரு போன் அடிச்சோம்ன்னா போதும்.. நாளைக்கு எவனும் இங்க வந்துக்க மாட்டீங்க..?” என்றெல்லாம் காட்டுத்தனமாக கத்திய பின்பு பத்திரிகையாளர்களும் பதிலுக்கு நியாயமான வாதங்களால் காட்ட.. அனல் பறந்தது இரண்டு பக்கமும்..!

DSC_0255 

அவர்கள் பெப்ஸி, ஸ்டூடியோ, சட்டம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க.. பத்திரிகையாளர்களோ, “அதை சாப்பிடுற இடத்துல காட்டாதீங்க. பெப்ஸில போய் சொல்லுங்க.. ஸ்டூடியோ ஓனர்கிட்ட போய்ச் சொல்லுங்க..” என்று மல்லுக்கட்டி நிற்க.. சாப்பிட வந்த நேரத்தில் பொங்க வேண்டிய கடமையை ஆற்றிவிட்டு மீடியாக்கள் மறித்து நின்றதால், வந்தவர்கள் வேறு வழியில்லாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்கள்..!

DSC_0256

உண்மையில் இந்தப் பிரச்சினைக்கும் மீடியாவுக்கும் சம்பந்தமேயில்லை. வந்தவர்கள் நேராக தயாரிப்பாளரிடமோ, அல்லது பி.ஆர்.ஓ.விடமோ பேசிவிட்டு போயிருந்தால் பிரச்சனை பெரிசாகியிருக்காது..

அதுலேயும் இது போன்ற சம்பவங்களில் பிரச்சினையிருக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு உதவியாளர்கள் சங்கத்தினர் தங்களுடைய கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி அமைப்பு, பி.ஆர்.ஓ.க்கள் யூனியன் போன்றவைகளுக்கு கடிதம் அனுப்பி பேசித் தீர்க்க வேண்டும். இதைவிட்டுவிட்டு இப்படி ஒரு சினிமா நிகழ்ச்சி நடக்கும்போது வந்து அதற்கு இடையூறு செய்பவர்கள், எந்தக் காலத்திலும் திரையுலகக் குடும்பம் என்று வார்த்தைக்குள் அடங்குபவர்களாக இருக்கவே முடியாது..!

மீடியாக்காரர்களை வசவு மொழியில் திட்டித் தீர்த்ததால் கோபப்பட்டு பெப்ஸியை புறக்கணிக்கும் முடிவை பத்திரிகையாளர்கள் ஒருமித்தக் குரலில் எடுத்திருப்பதை பெப்ஸி அமைப்புக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். இப்போது வெகு விரைவில் இந்தப் பிரச்சினைக்கு மீடியாவின் திருப்திக்குட்பட்டவகையில் தீர்வு காண்பதாக பெப்ஸியின் தலைவர் அமீர் கூறியிருக்கிறாராம்..!

நிரந்தரமான, தொலை நோக்குப் பார்வையுடனான சட்டவிதிமுறைகள் இல்லாமல்.. இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் சங்கங்கள் செயல்படுவது அத்துறைக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. பெப்ஸி இந்த விஷயத்தில் உறுதியான முடிவெடுத்து செயல்பட்டால்தான் தயாரிப்பாளர்களுக்கும், மற்றவர்களுக்கும்  பலனுள்ளதாக இருக்கும்..!

இந்தச் சண்டை நடக்கும்போது  ஆடியோ ரிலீஸை பார்ப்பதற்காக வந்திருந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவருமே அங்கேதான் இருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பலர் அதிர்ச்சியுடன் பார்த்தபடியே நின்றிருந்தார்கள்.. தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எப்படியிருந்திருக்கும்..? 

இதுதான் சங்கங்கள் காட்டுகின்ற நன்றியின் லட்சணம்..! 

Our Score