full screen background image

திண்டுக்கல்லில் நடந்த விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் மோதல்..!

திண்டுக்கல்லில் நடந்த விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் மோதல்..!

நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற படப்பிடிப்புன்போது பொதுமக்களுடன் நடிகர் விஜய் சேதுபதிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

காலை முதல் நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பைக்கில் பேருந்து நிலையத்திற்கு வருவதுபோலவும், அங்கேயிருக்கும் ரவுடிகளுடன் அவர் மோதுவது போலவும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன.

அந்த சண்டைக் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனங்களுக்கும், படப்பிடிப்புக் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

விஜய் சேதுபதியின் பாதுகாப்புக்காக அழைத்து வரப்பட்டிருந்த கருப்பு கலர் பனியன் அணிந்திருந்த சிலர், பொது மக்களை விரட்டியதால் கோபப்பட்ட பொதுமக்கள் “எப்படி பொது இடத்தில் நீங்கள் எங்களை விரட்டலாம்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதனால் படக் குழுவினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா காலக்கட்டத்தில் படக் குழுவினர் மாஸ்க் அணியாமல் இருப்பதையும், கூட்டமாக இருப்பதையும் சுட்டிக் காட்டி சிலர் வாக்குவாதம் செய்ய.. பிரச்சினை பெரிதானது.

இதையடுத்து விஜய் சேதுபதியே பொது மக்களிடம் சமாதானம் செய்ய வந்தார். அப்போது தான் பேசுவதைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர் தடுத்தார். ஆனாலும் சிலர் செல்போனில் அவரை புகைப்படம் எடுக்க அதை அவரது பாதுகாப்புக்காக வந்தவர்கள் தடுக்க.. பிரச்சினை மேலும் பெரிதானது.

இதையடு்த்து காவல் துறை அதிகாரிகள் படப்பிடிப்புத் தளத்திற்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினருக்கும், படப்பிடிப்புக் குழுவினருக்கும் இடையே சமாதானம் செய்தனர். மேலும் பிரச்சினை வலுத்ததால் இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனால் இந்தப் படத்தின் நேற்றைய படப்பிடிப்பு மதியத்தோடு முடிவடைந்ததாம்..!

Our Score