எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாகவே இருக்கும் அவர்களது வாழ்வியல் தொடர்பான மரபு தொடர்ச்சியை மையப்படுத்தி ‘மரபு’ என்ற பெயரிலேயே ஒரு புதிய படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் விக்டர் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்த்பாபு, கருத்தம்மா ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – வேல்முருகன், இசை – செளந்தர்யன், கலை இயக்கம் – என்.எம்.மகேஷ், சண்டை இயக்கம் – ஜாகுவார் தங்கம், நடன இயக்கம் – அக்சய் ஆனந்த், உடைகள் – எஸ்.ரவி, புகைப்படங்கள் – அசோக், இயக்கம் மேற்பார்வை – என்.ஜோதி, டிசைனர் – சதீஷ் – மக்கள் தொடர்பு – ப்ரியா, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – விக்டர் இம்மானுவேல்.

இந்த மரபு படம் பற்றி இயக்குநர் விக்டர் இம்மானுவேல் பேசும்போது, “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும் உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன.
இந்தப் பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்க வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை, தலைமுறையாக சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்றும் சுருக்கமாக கூறலாம்.

அதேவேளை ‘மரபு’ என்ற சொல்லும் இதன் காரணப் பெயராகப் பலரால் பாவிக்கப்படுகிது.
அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ… அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதலுக்குப் பெயர்தான் ‘மரபு’ என்பதாகும்.
ஆனால், தற்போது தனது மரபு சார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக தடம் மாறும் மனிதர்களின் கதையைச் சொல்லும் படம்தான் இந்த ‘மரபு’ திரைப்படம்…” என்றார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.