full screen background image

அரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்

அரசியல் தலைவர்களோடு இணைத்து போஸ்டர் அடிக்க வேண்டாம்-நடிகர் விஜய் வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்களும் போட்டியிடலாம் என்று விஜய் மறைமுகமாக பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அவரது ரசிகர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த மறைமுகமான அறிவிப்பை விஜய் அரசியலுக்கு வருவதற்கான முதல் படியாக அவரது ரசிகர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும் பலவிதமான போஸ்டர்களை அடித்து மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.

ஒரு போஸ்டரில் 2021-ல் உள்ளாட்சி; 2027-ல் நல்லாட்சி என்று எழுதப்பட்டுள்ளது.

இன்னொரு போஸ்டரில் பெரியார், காமராஜர், அண்ணா புகைப்படங்களை வைத்து அடுத்து விஜய்தான் என்பதுபோல் தமிழக அரசியல் வாரிசே என்று எழுதப்பட்டிருக்கிறது.

இன்னுமொரு போஸ்டரில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு தமிழக அரசியலின் மறு உருவமே என்று விஜய்யின் புகைப்படத்தை வைத்து அச்சடித்திருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. விஜய் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் ஆளும் கட்சியினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தகவல்களை அறிந்த விஜய் தனது மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மூலமாக ஒரு அறிக்கையை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு இன்றைக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கை இது :

அன்புடைய இயக்கத் தோழர்களுக்கு வணக்கம்..!

சமீப காலமாக,  இயக்கத் தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வக் கோளாறால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர்களை வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள் / இயக்கத் தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் நான் கண்டித்துள்ளேன். இயக்கத் தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது.

இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இப்படிப்பட்ட  விஷயங்கள் இனியும் தொடரும்பட்சத்தில்,  தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்

புஸ்ஸி N. ஆனந்து

பொதுச் செயலாளர்

அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்

புஸ்ஸி ஆனந்து இப்படி எழுதி அனுப்பியிருந்தாலும் இது சும்மா கண் துடைப்புக்காகத்தான் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆளும் கட்சி மற்றும் ஆளும் அரசிடமிருந்து தப்பிப்பதற்காக தற்போதைக்கு இப்படியொரு சமாளிப்பு கடிதத்தை அனுப்பியிருப்பதாக விஜய் ரசிகர்களே சொல்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் உள்ளூர் மக்களின் பல்ஸை பார்த்துவிட்டு அடுத்தடுத்து அரசியல் மூவ்மெண்ட்டை தொடரலாம் என்பது விஜய்யின் எண்ணமாம். இதற்காகத்தான் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாடகம் நடத்தப்படுவதாக தெரிகிறது.

Our Score