full screen background image

“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு

“SPB-யின் மனதில் எப்போதும் நான் இருந்திருக்கிறேன்” – இளையராஜா அஞ்சலி பேச்சு

சென்ற வருடம் இதே நாளில்தான் பிரபல பின்னணிப் பாடகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

சென்னையில் திரைப்பட இசைக் கலைஞர்கள்  சங்க வளாகத்தில் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா, இசை ஞானி’ இளையராஜா, பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளையராஜா எஸ்.பி.பி.யின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இந்த விழாவில் இளையராஜா பேசும்போது, ‛‛எனக்கும், பாலுவுக்கும் இடையேயான நட்பு அனைவருக்குமே தெரியும். அவர் அனைவரிடமும் சர்வசாதாரணமாக பழகக் கூடிய ஒரு உன்னதமான மனிதர்.

எங்கள் நட்பில் எப்போதும் எந்த விரிசலும் இல்லை. தொழில் விஷயத்தில் சில பிரச்சினைகள் வந்ததுண்டு. சில நேரங்களில் “என்ன இப்படி பாடுற..?” என்று நான் பேசியிருக்கிறேன், அவரும் “இன்னிக்கு சரியாக வரலை…” என்று பேசியிருப்பார். இது மாதிரி எங்களிடையே இருந்த பழக்கத்தில் தொழில் வேற.. நட்பு வேறாகத்தான் இருந்தது.

எங்கள் நட்புக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். பாலு மருத்துவமனையில்  இருந்தபோது நான் ஒரு வீடியோவில், “பாலு சீக்கிரம் எழுந்து வா… உனக்காக காத்திருக்கிறேன்…” என பேசியிருந்தேன். இந்த வீடியோவை பாலுவுக்கு நினைவு திரும்பிய சமயத்தில் அவரிடம் காண்பித்துள்ளார் அவரது மகன் சரண்.

அதைப் பார்த்ததும் கண் கலங்கி என் வீடியோவிற்கு முத்தமிட்டுள்ளார் பாலு. “யாரையாவது பார்க்கணுமா..?” என அவரிடம் கேட்டபோது “ராஜா வந்தா வர சொல்லுன்னு…” பாலு சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு வார்த்தை போதாதா..? அவருடைய மனசுல எனக்கு எந்த இடம் கொடுத்துள்ளார் என்று…! அந்த மாதிரியான நட்பு எனக்கும், அவருக்கும் உண்டு.

நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் அவரும் இருக்கிறார், நானும் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. இது என்றும் மாறாது. அவர் மறைந்து ஓராண்டு என்பது ஒரு நிமிடம் போல் நடந்துவிட்டது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நடக்க வேண்டிய நேரத்தில், நடப்பவைகள் நடந்து கொண்டேதான் இருக்கும்…”  என்றார் இசைஞானி இளையராஜா.

Our Score