full screen background image

மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகை கே.பி.ஏ.சி.லலிதா காலமானார்

மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகை கே.பி.ஏ.சி.லலிதா காலமானார்

மலையாள சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகையான KPAC லலிதா நேற்று இரவு 10 மணிக்கு கேரளாவில் காலமானார். இவருக்கு வயது 73.

மகேஸ்வரி அம்மா என்ற இயற் பெயரைக் கொண்ட லலிதா மலையாளப் படவுலகில் மிக மூத்த நடிகையாவார். இதுவரையிலும் பல்வேறு மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கேரளாவின் காயங்குளத்தில் இருந்த கம்யூனிஸ்ட் நாடகக் குழுவான கே.பி.ஏ.சி.வில்தான் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதனாலேயே இவருக்கு K. P. A. C. என்ற அடைமொழியும் கிடைத்தது.

ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது திரை வாழ்க்கையில், பல்வேறு மொழிகளில் 550- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கூட்டுக் குடும்பம் படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படமாகும். 1978 ஆண்டு அவர் திரைப்பட இயக்குநர் பரதனை மணந்தார்.

அவரது சினிமா வாழ்க்கையின் இரண்டாவது சுற்று இயக்குநர் பரதனின் காற்றத்தே கிளிக்கூடு படத்துடன் (1983) தொடங்கியது.

மலையாளப் படவுலகின் நகைச்சுவை குணச்சித்திர நடிகர் இன்னசென்ட்டுதான் இவரது ராசியான ஜோடி நடிகராவார். இந்த ஜோடி இணைந்து நடித்த அத்தனை படங்களும் இன்றும் நகைச்சுவைக்கென்றே பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் லலிதா.

லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 4 முறை மாநில அரசின் கலை விருதுகளையும் வாங்கியவர். கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

இயக்குனர் பரதன் இயக்கிய அமரம் (1991) திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய சாந்தம்’(2000) படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார்.

மலையாளம் தவிர, தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’,  ‘காற்று வெளியிடை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘காதலுக்கு மரியாதை’யில் ஷாலினியின் அம்மாவாக அவரது நடிப்பு விமர்சகர்களின் வெகுவான பாராட்டைப் பெற்றது.

இவருக்கு சித்தார்த் என்கிற மகனும், ஸ்ரீகுட்டி என்கிற மகளும் உள்ளனர்.

லலிதாவின் உடலுக்கு மலையாளத் திரையுலகத்தினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவருடைய இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மதியம் கேரளாவில் நடைபெற்றது.

Our Score