‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை இனிமேல் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கப் போவதாகத் தெரிகிறது.
‘பிக் பாஸ் சீசன்-5’ விஜய் டிவியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் முதன் முறையாக ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸை’ தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே ஒடிடி-யிலும் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் திடீரென்று இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லிவிட்டார் கமல்.
தொடர்ச்சியான சினிமா ஷூட்டிங் காரணமாக நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்ததாலேயே இந்த முடிவு என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட கமல், “இது தற்காலிக இடைவெளிதான். விரைவில் விஜய் டிவியில் தொடங்கவிருக்கும் ‘பிக் பாஸ் சீசன் 6’-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அப்படியானால் ‘பிக் பாஸ் அல்டிமேட்’டின் அடுத்த ஆங்கர் யார் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எட்டிப் பார்த்தது. இதற்காக முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பெயர்தான் அடிபட்டது.
‘பிக் பாஸ் சீசன்-5’ சமயத்தில், கமலுக்கு கொரோனா வந்தபோது சில எபிசோடுகளை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியதால் இந்தப் பேச்சுகள் எழுந்திருக்கலாம்.
ஆனால், தற்போது சிம்புதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
“சிம்புவின் தேர்வு என்பது வனிதாவுக்காக…” என்கிறது பிக்பாஸ் வட்டாரம். ஏனெனில் விஜய் தொலைக்காட்சிக்காக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கென்று ஸ்பெஷலாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும், வனிதாவுக்கும் இடையில் பெரிய சண்டையே நடந்தது. இருவரும் ஒருவரையொருவர் பொதுவெளியில் தாக்கிப் பேட்டியளித்தனர்.
இந்த நிலையில் வனிதா ‘பிக் பாஸ்’ வீட்டில் இருக்க ரம்யா கிருஷ்ணன் வந்து தொகுத்து வழங்கினால் அது நன்றாக இருக்காது என்று ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதியுள்ளனர். இதன் விளைவாகவே ரம்யா கிருஷ்ணனைத் தவிர்த்துவிட்டு சிம்புவைத் தேர்வு செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.