சரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’

சரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’

நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரித்திருக்கும் படம் ‘வேலன் எட்டுத் திக்கும்.’

2014-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படம் தெலுங்கில் Janda Pai Kapiraju என்கிற பெயரில் உருவாகி 2015-ம் ஆண்டில் வெளியானது. அந்த தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் இது.

தமிழில் ஜெயம் ரவி செய்த கதாபாத்திரத்தில் நானி நடித்தார். மற்ற கதாபாத்திரங்களில் தமிழில் நடித்தவர்களே தெலுங்கிலும் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாகவும். அமலா பால் நாயகியாகவும் நடித்துள்ளார்.

மேலும், நாசர் பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன், சமுத்திரக்கனி, சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், பாடல்கள் – கானா பாலா, கவிதா தண்டபாணி, படத் தொகுப்பு – எஸ்.என்.பாசில், எழுத்து, இயக்கம் – பி.சமுத்திரக்கனி.

படம் பற்றி இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, “இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை.  எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப்படுகிறான்.  இப்படி உள்ள சூழ்நிலையை மாற்றப் போராடும் நாயகன் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பதுதான் கதை.

படத்தில் சரத்குமார் ஏற்றிருக்கும் வித்தியாசமான வேடம் ரசிகர்களால் நிச்சயமாக பாராட்டப்படும். ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளோடு வித்தியாசமான திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார். 

Our Score