full screen background image

HIT-3 – THE THIRD CASE – சினிமா விமர்சனம்

HIT-3 – THE THIRD CASE – சினிமா விமர்சனம்

பயங்கர குற்றங்களைக் கண்டு பிடிக்கும் விசாகப்பட்டிணம் போலீஸின் சிறப்புப் பிரிவின் அஸிஸ்டெண்ட் கமிஷனர் நானி. இன்னும் திருமணமாகதவர். இரத்த அழுத்த நோய் உள்ளவர். தினமும் அதைக் குறைக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் விசாகப்பட்டிணத்தின் காட்டுப் பகுதியில் ஒருவனை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்வதோடு, அதை வீடியோவிலும் பதிவு செய்கிறார். இதே கொலையை தனது போலீஸ் டீமோடு வந்து மீண்டும் விசாரிக்கவும் செய்கிறார் நானி.

இதேபோல் வேறொரு நாளில் மற்றொரு ஆளை இதேபோல் கொலை செய்ய முயல்கிறார் நானி. அப்போது நானியுடன் வேலை செய்து வரும் இன்னொரு பெண் போலீஸ்  அதிகாரி குறுக்கே வந்து தடுக்கப் பார்க்கிறார். அதையும் மீறி நானி அந்தக் கொலையைச் செய்துவிடுகிறார்.

நானி ஏன் இந்தக் கொலைகளை செய்கிறார்.. யாருக்காக செய்கிறார்.. அவர் நோக்கம் நிறைவேறியதா.. அதன் பின்னணி என்ன என்பதுதான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படத்தின் கதை.

காவல்துறை அதிகாரியாக, நானி படம் முழுவதும் கம்பீரமாக வலம் வருகிறார். துவக்கத்தில் வரும் ஸ்ரீநிதி ஷெட்டியுடனான காதல் காட்சியில் நிறையவே ரசிக்க வைத்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில், வெறி பிடித்த மனிதராக ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸில்.. கடைசி அரை மணி நேரக் காட்சியில், தியேட்டரையே ரத்தத்தில் நனைத்து எடுத்த மாதிரி ரத்தத்தில் திரையைக் குளிப்பாட்டியிருக்கிறார்.

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி காதல் காட்சியில் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்.  குறிப்பாக ட்ரெயினில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ரசனயோ ரசனை. படத்தில் கடைசிவரையிலும் வர வேண்டும் என்பதற்காக இவரையும் போலீஸ் அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என்று ஒட்டு மொத்த தெலுங்கு முகங்களின் நடிப்பும் சிறப்புதான். அதிலும் மெயின் வில்லனாக நடித்தவரும், அவருடைய தம்பியாக நடித்தவரும் சைக்கோத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ்தான். படம் மொத்தத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை, திரைக்கதையை பரபரப்பாக்குகிறது.

படக் காட்சிகளை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் தொகுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ். குறிப்பாக நானி செய்யும் கொலைக் காட்சிகளும், மற்றவர்கள் செய்யும் கொலைக் காட்சிகளும்.. இவை ஒன்றன் பின் ஒன்றாகக் காண்பிக்கப்படும்விதமும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது!

பெரும் வன்முறையான, கொடூரக் காட்சிகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு சைக்கோ, க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் படத்தினை கொடுத்துள்ளார் இயக்குநர் சைலேஷ் கோலானு.

இந்த அளவுக்கு வன்முறை வேண்டுமா.. தேவையா இயக்குநரே என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

குடும்பத்தோடு பார்க்கவே கூடாத, முடியாத திரைப்படம்.

இளகிய மனதுடையவர்களும், குழந்தைகளும், இளைஞர், இளைஞிகளும் பார்க்கவே கூடாத திரைப்படம்.

மொத்தத்தில் இந்த ‘ஹிட் – த தேர்ட் கேஸ்’ வன்முறை வெறியாட்டம்!

 

Our Score