full screen background image

“10 வருஷம் கழிச்சும் இந்த ஹீரோ நினைவில் இருப்பார்” – நடிகர் ஆதியின் நம்பிக்கை பேச்சு!

“10 வருஷம் கழிச்சும் இந்த ஹீரோ நினைவில் இருப்பார்” – நடிகர் ஆதியின் நம்பிக்கை பேச்சு!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.ஷரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகரும், பிரபல யூ டியூபருமான சசி பேசும்போது, “கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது. 

முதலில் இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து ஆரம்பித்து விடுகிறேன். நான் ஒரு படம் நடித்து வெளியாகிவிட்டது. அடுத்து எப்போது திரையில் என்னை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்தபொழுது ஷரவன் சார் உடைய AD என்னை அவருடைய அலுவலகத்திற்கு கூட்டிக் கொண்டு போய் ஒரு கதையை சொன்னார்.

இந்தப் படத்தில் ‘சக்கரை’ எனும் மிகப் பெரிய ஒரு கேரக்டரை எனக்கு கொடுத்துள்ளார் இயக்குநர். சத்யஜோதி ஃபிலிம்ஸூக்கும் எனது நன்றி. பிரசன்னா, ஆதிரா என இவர்களுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.

‘உன்னாலே உன்னாலே’ படம் வந்த சமயத்தில் நான்தான்டா வினய் என்று சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான். படத்தில் அவருடன் எனக்கு காம்பினேஷன் சீன் எதுவும் இல்லை. அதனால் டப்பிங்கில் வினய் வரும்வரை காத்திருந்து என்னுடையதை முடித்துவிட்டு சென்றேன்.

கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் இருந்த பல யூ டியூபருக்கும் ஆதி அண்ணா மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு யூ டியூபரை கொண்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயம். இந்தப் படத்தில் எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது. அதையெல்லாம் பொறுமையாக விளக்கினார். யூ டியூபில் எனக்கு ஆதரவு கொடுத்தது போலவே சினிமாவிலும் மக்கள் எனக்கு தொடர்ந்து அன்பை கொடுக்க வேண்டும். நன்றி!” என்றார்.

aathiraa

நடிகை ஆதிரா பேசும்போது, “படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ்க்கும், இந்த படத்தில் என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ஷரவன் சாருக்கும் நன்றி. ஆதி சார் சிறந்த கோ – ஸ்டார். எனக்கு படத்தில் நிறைய விஷயங்களில் உதவி செய்தார். அனைவருக்கும் நன்றி. படம் ஜூன் 2 வெளியாக இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இந்தப் படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக் கூடிய கூடிய வகையில் இருக்கும். ‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்கிறேன். 

ஆதி சாரோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி. தமிழில் இது போன்ற முதல் நேட்டிவிட்டி சூப்பர் ஹீரோ கதையை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்க்கு நன்றி. இயக்குநர் ஷரவன் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படத்தின் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.

vinay

நடிகர் வினய் பேசும்போது, “கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு சத்யஜோதி தியாகராஜன் சார் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கிறேன். மிகச் சிறந்த தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். இந்த படத்தின் இயக்குநர் ஷரவன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டபோது நான் உடனே சம்மதித்து விட்டேன்.

ஏனென்றால், சூப்பர் ஹீரோ படம் என்றால் அதை எப்படி அவர்கள் நம்பும்படி தர போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களை போல எனக்கும் இருந்தது. அடுத்து ஆதி. இனிமையாக பழகக் கூடியவர். நல்ல நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர்.

ஒரு படக் குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது இந்த ‘வீரன்’ படத்திலும் அமைந்துள்ளது. தொழில் நுட்பக் குழுவினர் தங்களுடைய சிறந்த பணியை கொடுத்துள்ளனர்” என்றார்.

sakthivelan

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பேசும்போது, “நீண்ட நாட்கள் கழித்து ரிலாக்ஸாக ஒரு படம் செய்து இருக்கிறேன். படத்தின் குழுவே புரொமோஷனல் பணிகள் உட்பட அத்தனையும் அழகாக செய்து இருக்கின்றனர்.

தினமும் கிச்சனில் சமைக்கும் அம்மாவை ஒரு நாள் ஹோட்டலுக்கு வெளியே அழைத்து போய் சாப்பிட வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுத்துள்ளது. ஒரு நல்ல படம் அதற்கான இடத்தை தானே அமைத்துக் கொள்ளும் என்பது போல ஜூன் 2-ம் தேதி குழந்தைகளுக்கான படமாக ஒரு விடுமுறை கொண்டாட்டமாக இது வெளியாக உள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு ஹிட் கொடுத்து அதை அனைத்து தலைமுறையினருக்குமாக கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த ‘வீரன்’ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே.ஷரவன் பேசும்போது, “இந்தக் கதையை நம்பிக்கையோடு அணுகிய தயாரிப்பாளர்கள் தியாகராஜன் சாருக்கும் அர்ஜூன் சாருக்கும் நன்றி. இந்தக் கதை முன்பே ஆதி சாருக்கு தெரியும்.

ஒரு சூப்பர் ஹீரோவாக இந்த படத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்கி, அவ்வளவு பொறுமையாக இன்றுவரைக்கும் எங்களுக்கு ஆதி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

இது பொள்ளாச்சியில் நடக்கும் கதை. அதற்கேற்ற ஒரு முகம் தேவைப்பட்டதால் தேடி ஆதிராவை கண்டுபிடித்தோம். அவர் மிகவும் சிரமப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டு நடித்தார். அவருக்கு வாழ்த்துக்கள்.

முனீஸ்காந்த், காளி வெங்கட், பத்ரி, சசி, சின்னி ஜெயந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் இசை மிக சிறப்பாக வந்துள்ளது என்பதை ட்ரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள். இந்த படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியம். அது நன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி.

படத்தில் அனைவரும் தங்களது சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். சில படங்கள்தான் காலம் கடந்தும் நம்முடைய நினைவில் இருக்கும். அதுபோல ‘வீரன்’ இருக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

aadhi

நடிகர் ஆதி பேசும்போது, “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி! சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

தியாகராஜன் சாருடைய இரண்டாவது மகன் அர்ஜூன் எனக்கு நல்ல நண்பர். அவர் ‘நட்பே துணை’ சமயத்தில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு படம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. அவருக்கும், சந்திக்கும் போதெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் தியாகராஜன் சாருக்கும் நன்றி.

அடுத்து இயக்குநர் ஷரவன். எனக்கு ‘இன்று நேற்று நாளை’ படத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில்தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம். கிட்டத்தட்ட இந்தப் பயணத்தில் ஆறு மாதங்கள் என்னுடனே அவரும் உடன் இருந்தார்.

வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு ஷரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன். இந்த படம் மூலம் அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும்.

இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய் அண்ணன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. இன்று தமிழ் சினிமாவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துக் கொண்டிருக்கும் காளி அண்ணனும், முனீஸ்காந்த் அண்ணனும் இந்த படத்தின் நகைச்சுவைக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறுமேயானல், அவர்களுடைய பங்கும் மிகப் பெரியது.

ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார்.

புதிய திறமைகளை ஒவ்வொரு படத்திலும் எடுத்து வருவதை நாங்கள் எங்களுடைய பாக்கியமாக கருதுகிறோம். அந்த வகையில் இந்த படத்தில் சசி, அவருடைய நக்கலைட்ஸ் டீம், டெம்பிள் மங்கி என அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி.

இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஒரு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் ‘முடியும் முடியும்’ என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு ஜான் அவர்களுக்கு நன்றி. ‘சிங்கிள் பசங்க’,  ‘கேரளா டான்ஸ்’ என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்தக் கதைக்கு அந்த மண் சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார்.

இந்த படத்தில் நான் நடித்ததைவிட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை கீர்த்தி நிறைய டிரையல் செய்து எடுத்து வந்தார்.

படத்தில் உள்ள அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறந்த பணியை கொடுத்துள்ளனர்.

என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல்தான். அந்த வகையில் எனக்கு 90’ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும்  நாஸ்டலஜியா.

இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளி போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த ‘வீரன்’ படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம். அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து ‘வீரன்’ ஒரு நினைவில் நிற்கக் கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்றுகூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்” என்றார்.

Our Score