full screen background image

வீராபுரம் 220 – சினிமா விமர்சனம்

வீராபுரம் 220 – சினிமா விமர்சனம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் நாயகனாக அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – பிரேம்குமார், இசை – ரிதேஷ் & ஸ்ரீதர், படத் தொகுப்பு – கணேஷ் குமார், சண்டை பயிற்சி – எஸ்.ஆர்.முருகன், இணை தயாரிப்பு – சுந்தர்ராஜன், கண்ணியப்பன், எழுத்து, இயக்கம் – செந்தில்குமார்.

மணல் கொள்ளையால் நடக்கும் கொலைச் சம்பவங்கள்தான் படத்தின் கதைக் கரு. ஆனால் இதற்கு பின்புலத்திற்கு காதல், நட்பு, துரோகம் எல்லாவற்றையும் இணைத்திருக்கிறார்கள்.

நாயகன் மகேஷூம் அவரது தந்தையும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஓட்டலுக்கு நேர் எதிரே நாயகி மேக்னாவின் ப்யூட்டி பார்லர் உள்ளது. மேக்னாவை காதலிக்க வைக்கத் துடிக்கிறார் மகேஷ். இந்தக் காதல் தூதுக்கு அவரது தந்தையும் உதவி செய்கிறார்.

இன்னொரு பக்கம் மகேஷ் மற்றும் நண்பர்கள் ஜாலியாக தண்ணி அடித்து ஊர் சுற்றி வருவது வழக்கம். இவர்களின் விளையாட்டுத்தனத்தால் இவர்கள் நண்பர்களில் ஒருவனின் திருமணம் நின்று விடுகிறது. இதனால் இந்த நண்பன் இவர்களுக்கு ஜென்ம விரோதியாகிறான். இவர்களது தண்ணீர் கேன் தொழிலும் போட்டிக்கு வந்து தொழிலைக் கெடுக்கிறான்.

இந்தக் காலக்கட்டத்தில் அந்த ஊரில் விடியற்காலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மர்மமான மரணங்களும் ஏற்படுகின்றன. விபத்து நடக்கும் சமயத்தில் ஊர் தலைவர் சரியாக வந்து காப்பாற்றுவதும் வழக்கமாக உள்ளது. இது அடிக்கடி தொடரவே இந்த விஷயம் ஒரு மர்மமாகவே ஊர் மக்களுக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகேஷின் தந்தையும் இது போன்ற ஒரு விபத்தில் இறக்கிறார்.

தன் தந்தை இறந்த பிறகு இந்த விஷயத்தில் தலையைக் கொடுக்கிறார் நாயகன் மகேஷ். தன் தந்தையின் மரணம் விபத்து அல்ல.. கொலை என்பதை கண்டறிகிறார் மகேஷ். அவரை யார் கொலை செய்திருப்பார்கள் என்று தேடுகிறார். அந்தத் தேடுதல் வேட்டையின் முடிவென்ன..? யார் கொலை செய்தார்கள்..? எதற்காகக் கொலை செய்தார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

அங்காடி தெரு’ படத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க படங்களில் நடிக்காமல் ஏமாற்றி வந்த மகேஷ், இந்தப் படத்தில்தான் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே அழகாக தெரிந்தவர் பின்பு போகப் போக துணை கதாபாத்திரம்போல் காட்டப்படுகிறார். ஒரு சில காட்சிகளில் நன்றாக இருக்கிறார். வேறு சில காட்சிகளில் குண்டாகவும் தெரிகிறார் மகேஷ். படத் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் மகேஷின் உடலையும் பளுவாக்கிவிட்டதுபோலும்..!

காதல் உணர்விலும், ஆக்ரோஷத்திலும் புதுமுக நடிகருக்கும் மேலேயே ஸ்கோர் செய்திருக்கிறார் மகேஷ்.

நாயகி மேக்னாவின் முகமே குழந்தைத்தனம். அதிலும் அவர் கண்கள் நின்று பேசுகின்றன. ஆனாலும், இவருக்கேற்ற ஒரு நல்ல கேரக்டரை தமிழ்ச் சினிமா இன்றுவரையிலும் கொடுக்கவில்லை. இந்தப் படத்திலும் இப்படியே..

ஒரு சில காட்சிகளில் இயக்குநரையும் மீறி நடித்திருக்கிறார். செத்துப் போன பாட்டிக்கு மேக்கப் போட அழைத்து வரப்பட்டு அங்கே ஜெர்க் ஆகும் காட்சியைச் சொல்லலாம். மற்றபடி வழமையான நாயகியாகவே வந்து போயிருக்கிறார்.

மகேஷின் நண்பர்கள் சில, பல காட்சிகளில் மகேஷைவிடவும் அழகாக தென்படுகிறார்கள். நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.  வில்லன் சதீஷின் வில்லத்தனம் ஓகே ரகம்.

காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்வதால் நடிகர்களின் நடிப்பை முழுமையாக எடை போட முடியவில்லை. நாயகன்-நாயகி காதல் காட்சிகளை மட்டுமே முழுமையாக படமாக்கியிருக்கிறார்கள். மற்றவைகளெல்லாம் பாதியிலேயே கட் செய்ததுபோல இருக்கிறது.

இரட்டையர்கள் ரித்தேஷ்-ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குத்துப் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஒரு பாடல் முடிந்த சில நிமிடங்களில் அடுத்த பாடல் காட்சியையும் வைத்திருப்பதெல்லாம் இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது. 

அந்தக் கிராமத்தை மட்டும் அழகாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். படத்தின் பட்ஜெட் ஒளிப்பதிவிலேயே தெரிகிறது.

படத் தொகுப்பாளர் தனக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளை மட்டும் இங்கிட்டு ஒண்ணு.. அங்கிட்டு ஒண்ணு என்கிற போக்கில் வெட்டி ஒட்டியிருக்கிறார் போலும். தொடர்பே இல்லாமல் திடீர், திடீரென்று காட்சிகள் பறக்கின்றன.

மணல் கடத்தல்தான் படத்தின் மெயினான கதை. ஆனால் இது தொடர்பாக  படத்தில் 10 காட்சிகள் மட்டுமே வருகின்றன. பின்பு அது எப்படி ரசிகனின் மனதில் உட்காரும்..?

எதை பெரிதாக்க வேண்டுமோ அதையெல்லாம் விட்டுவிட்டு காதல், நண்பர்களுக்குள் மோதல் என்று கதையை திருப்பிவிட்டுவிட்டு கடைசி நேரத்தில் மணல் கடத்தலை முன் வைத்தால் எப்படி அது சரியாகும்..?

இப்படி கதைக் கருவையே முழுமையாகச் சொல்லாததால் இந்தப் படம் நம் மனதில் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை.

RATINGS – 1.5 /5

Our Score