full screen background image

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம் புலி,  பவர் ஸ்டார்’ சீனிவாசன்,  அனு மோகன்,  பாஸ்கி,  சாம்ஸ்,  ‘லொள்ளு சபா’ மனோகர், அபிஷேக், பேபி சவி என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

ஒளிப்பதிவு – M.V.பன்னீர்செல்வம், இசை – ராஜ் ஆர்யன், கலை இயக்கம் -R.ஜனார்த்தனன், படத் தொகுப்பு – பிரீத்தம், வசனம் – சாய் ராஜகோபால், சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ், நடன இயக்கம் – நோபல், பாடல்கள் -ஷக்தி சிதம்பரம், ஏக்நாத், தயாரிப்பு மேற்பார்வை – ஷங்கர்.ஜி, மக்கள் தொடர்பு  – மௌனம் ரவி – மணவை புவன், தயாரிப்பு – விக்னேஷ் ஏலப்பன், கதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்,

இரண்டு வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த அனபெல் சேதுபதி’ படத்தின் இன்னொரு வகைதான் இந்த பேய் மாமா’ திரைப்படம்.

அனபெல் சேதுபதி’ படத்தில் வீட்டுக்குள் இருக்கும் பேய்களை விடுவிக்க அந்தப் பேய்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அந்த வீட்டுக்குள் வர வேண்டும். இந்த ‘பேய் மாமா’ படத்திலும் அதேதான். என்னவொரு வித்தியாசம் எனில், இந்தப் படத்தில் தங்களை கொலை செய்தவர்களை பேய்கள் வீட்டுக்குள் அழைத்து தீர்த்துக் கட்டுகின்றன. அவ்வளவுதான்..!

நடிகர் வடிவேலுவுக்காகத்தான் முதலில் இந்தக் கதையை எழுதியிருந்தார் ஷக்தி சிதம்பரம். அதுவும் இரட்டை வேடங்களில் வடிவேலுவை நடிக்க வைக்கத் தயாராகவும் இருந்தார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ஆனால், வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடையால் அது முடியாமல் போனது.

அப்போதுதான் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. ஆனால், கடைசியில் அதுவும் நடக்கவில்லை. ஆனால், அதைக் கேள்விப்பட்ட பிறகு, நாம் ஏன் யோகிபாபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்குத் தோன்றியதால் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ என்று  சொன்னதும் யோகி முதலில் தயங்கியிருக்கிறார். பிறகு இயக்குநரின் சமாதானத்திற்குப் பிறகுதான் ஓகே சொல்லி நடித்திருக்கிறார். 

இதில், கொரோனா வைரஸ் மாதிரியான ஒரு விஷயமும் உள்ளது. வெளிநாட்டு  மருத்துவக்  கம்பெனியுடன் இணைந்து இங்கேயிருக்கும் சிலர், ஒரு  வைரஸை  மக்களிடையே  பரப்புகிறார்கள்.  அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம்தான் இருக்கும். ஆனால், அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவ வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தலைமுறை, தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக் குழு அந்த சித்த மருத்துவக் குடும்பத்தையே கொலை செய்து விடுகிறார்கள்.

அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழி வாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள்  என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

இதன் படப்பிடிப்பு 2018 நவம்பர் மாதமே முடிந்திருந்தாலும்  வெளியிட சரியான நேரம் பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். 2020 பிப்ரவரி, மார்ச்சில்தான் கொரோனாவே வந்தது. இப்போது இருக்கிற நிலைமையும் படத்தின் கதைக் களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆனைமலை அருகில் உள்ள பத்துமடை பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் தோட்டத்தைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்கத் துடிக்கிறார், அதை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஒருவர். அந்த இடத்தையும், அங்கு கிடைக்கும் மூலிகைகளையும் வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் இன்னொருவர், அதை வாங்க வருபவர்களை அந்த வீட்டில் பேய் இருப்பதாகக் கூறி விரட்டி அடிக்கிறார்.

இதனால் திருட்டையே தொழிலாகக் கொண்ட யோகிபாபு மற்றும் அவரது குடும்பத்தினரை அந்த வீட்டில் இருக்கும் பேய்களை விரட்டியடிக்க அனுப்புகிறார் தற்போதைய வீட்டு ஓனர்.

யோகிபாபு அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பேய்கள், அந்த பங்களாவைப் பற்றியும், தாங்கள் எப்படி கொல்லப்பட்டோம் என்பதையும், அந்த வீட்டைச் சுற்றியிருக்கும் 100 ஏக்கர் தோட்டத்தில் கிடைக்கும் அரிய வகை மூலிகைகளைப் பற்றி உண்மையையும் சொல்கிறார்கள்.

மேலும், தங்களை கொலை செய்தவர்களை தாங்கள் பழி வாங்க உதவும்படி கேட்கிறார்கள். இதனால் பேய்களிடம் மனமிரங்கிய யோகிபாபு, அப்பேய்களுக்கு உதவ முன் வருகிறார்.

யோகி பாபு டீம் என்ன செய்தது..? அவர்களுக்கு உதவி செய்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதி கதை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஷக்தி சிதம்பரத்தின் படங்கள் எல்லாம் காமெடிக்காகவே வெற்றி பெற்றன. அந்தக் காமெடி காட்சிகள் தற்போதும் தொலைக்காட்சிகளில் ஹிட் அடித்து வருகின்றன. அதற்காக அதே காமெடியை இந்த 2021-லும் கொடுத்து நம்மை பெரிதும் சோதித்திருக்கிறார் இயக்குநர்.

யோகி பாபுதான் படத்தின் நாயகன் என்றதும் படம் முழுவதும் சிரிக்க வைப்பார் என்று நினைத்தால் அது நிச்சயமாக ஏமாற்றம்தான். ஒரேயொரு வசனத்தை மட்டும் நகைச்சுவையாகப் பேசிவிட்டால் போதும்.. படம் முழுக்க அதை வைத்தே ஓட்டிவிடலாம் என்பது இனி நடக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் யோகி பாபு நாயகி மாளவிகா மேனனுடன் ரொமான்ஸ் செய்தவற்குப் பதில், மாளவிகாவின் தாயாருடன் ஒரு ரொமான்ஸ் பாடலை பாடுகிறார். என்ன கொடுமை சரவணா இது..?

“நான் காமெடியன், ஹீரோ இல்லை. விஜய், அஜித் கூட நடிப்பது மிஸ் ஆகக் கூடாது” என்று மைண்ட் வாய்ஸையே வசனமாகப் பேசி படத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் யோகி பாபு.

காட்டெருமை’, ‘பன்னி மூஞ்சி வாயன்’, ‘பன்னிக் குட்டி’ என்று யோகி பாவுவைச் சுற்றியே உருவ கேலிகளும் தொடர்கின்றன. அவரின் முடி குறித்த கிண்டலும் நீள்கிறது. “பேய்க்காவது உன்னைப் பிடிச்சிருக்கே” என்று யோகி பாபுவின் தாய் வசனம் பேசி காமெடி என்கிற பெயரில் காயப்படுத்துகிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இவரை உருவ கேலி செய்வார்கள் என்று தெரியவில்லை. அதை இவர் ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறார் என்றும் புரியவில்லை.

நாயகியான மாளவிகா மேனன் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’ படங்களில் நடித்த இவர் இப்போது யோகி பாபுவுக்கு நாயகியாக நடித்துள்ளார். தனியாக ஸ்கோர் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. ஓரிரு காட்சிகளைத் தவிர கூட்டத்தில் ஒருவராக வந்து போகிறார்.

இவரை வைத்து யோகிபாபு பேசும் ஒரேயொரு டயலாக் மட்டுமே படத்தில் குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. மாளவிகாவைக் காட்டி, “நல்ல பொண்ணு.. நல்லாவும் நடிக்குது. ஆனால் படமே கிடைக்க மாட்டேங்குது…” என்று ஒருவர் சொல்ல அதற்குப் பதில் அளிக்கும் யோகிபாபு “அப்பன்காரன் கூடவே வந்தால் எப்படி கிடைக்கும்..?” என்று யதார்த்தமாக சொல்லும் அந்த ஒரு பதில்தான் சிரிப்பை வரவழைக்கிறது.

ஒரு கட்டத்தில் நாம் பேய்ப் படம்தான் பார்க்கிறோமா, அல்லது சினிமாவை பகடி செய்யும் ஸ்பூப் படம் பார்க்கிறோமா என்கிற குழப்பமும் வருகிறது.

புன்னகை மன்னன்’, ‘பாகுபலி’, ‘பேட்ட’, ‘பிகில்’, ‘பம்பாய்’, ‘தலைநகரம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘சந்திரமுகி’, ‘பிக் பாஸ்’, ‘லலிதா ஜூவல்லரி’, ‘சரவணா ஸ்டோர்ஸ்’, ‘சரவண பவன்’, ‘புளூ சட்டை மாறன்’, ‘ரஜினியின் அரசியல்’, ‘தல – தளபதி’ என்று இஷ்டத்துக்கும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். ஸ்பூஃப் படமாக அறிவித்திருந்தால்கூட மனதைத் தேற்றியிருக்கலாம். ஆனால், இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இடைச் செருகலாக இருப்பதால் ரசிக்கவே முடியவில்லை.

அதிலும் மொட்டை’ ராஜேந்திரனையும், ரேகாவையும் வைத்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடல் காட்சிகளை அப்படியே ரீமிக்ஸ் செய்திருக்கிறார். இந்தக் காட்சி முடிந்து ஆசுவாசப்படுத்தக்கூட நேரம் தராமல், அங்கிருந்து அப்படியே ‘கோலமாவு கோகிலா’ பாடலுக்கு இருவரும் ஜம்ப் ஆகிறார்கள்.

இந்தப் படத்துக்கு எதற்கு இவ்வளவு பேர் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் சிலர் செட் பிராப்பர்ட்டி போல் இருக்கின்றனர். சிலர் திடீர், திடீரென்று காணாமல் போகின்றனர்.

நடிகர் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படப்பிடிப்பின்போதே திடீரென்று இறந்து போனதால் அவரது கேரக்டர் திடீரென்று வருகிறது.. போகிறது. கதையில் அவர் யார்.. எங்கேயிருந்து வந்தார் என்பதற்கெல்லாம் விளக்கமே இல்லை.

கோவை சரளா, சிங்கம் புலி, அனுபமா குமார், மனோ பாலா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, லொள்ளு சபா மனோகர், கிருஷ்ணமூர்த்தி, ‘மொட்டை’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, ரேகா, ரேஷ்மா, நமோ நாராயணா, ராகுல் தாத்தா, கணேஷ் என ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமே தனித்து நிற்கிறார். அவரது குரலும், நடிப்பும் மட்டுமே நிஜமான அந்த இயற்கை மருத்துவத்தை அந்தக் கணம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். ராஜ் ஆர்யன் இசை பேய்ப் படத்துக்கான த்ரில்லை கூட்டவில்லை. அந்த பட்டுமலை பங்களாவின் பலவித காட்சிகள் திரும்பத் திரும்ப காண்பிக்கப்பட்டு நம்மை பெரிதும் சோதிக்கிறது.

பழைய சினிமாக்கள், விளம்பரங்கள், யு டியுப் விமர்சகர்கள் என பலரையும் கிண்டலடிக்கிறார் இயக்குர். சினிமாவை மட்டும் யாரும் கிண்டல் செய்து விமர்சிக்கக் கூடாது, ஆனால், சினிமாவில் நாங்கள் மட்டும் பலரையும் கிண்டல் செய்து விமர்சிப்போம் என்பது எந்த ஊர் நியாயம் எனத் தெரியவில்லை.

இயற்கை மருத்துவம், கொரானோ தாக்கம், பேய் பங்களா என சமீபத்தில் நிஜத்திலும், சினிமாவிலும், டிவியிலும், வாட்சப்களிலும் தற்போது பகிரப்படும் பல விஷயங்களை வைத்தே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஷக்தி சிதம்பரம் முதல் பாதிவரையிலும் தன் இஷ்டத்துக்கு படத்தை எடுத்து எடிட்டரிடம் கொடுத்திருக்கிறார் போலும்.. அவரும் கதையே இல்லாத படத்தை வைத்துக் கொண்டு ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒட்டிக் கொடுத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கதைதான் நகராமல் நடு வீட்டில் நாற்காலி போட்டு கம்மென்று அமர்ந்துவிட்டது. கதையின் அவுட் லைனுக்கும் ஷக்தி சிதம்பரம் பெரிதாகக் கவலைப்படவில்லை. அரண்மனை’, ‘காஞ்சனா’ பாணி கதையை மிக்ஸியில் அரைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் நகைச்சுவையில் கரை கண்ட இயக்குநர் இப்படி ஏமாற்றுவார் என்று நாம் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

பட்டுமலை சித்தர்’ என்ற பில்டப்பில் பெரிய பின்னணி இருப்பதாக நினைத்தால் அதிலும் ஏமாற்றத்தை அள்ளித் தெளித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். படத்தில் இருக்கும் எமோஷன்ஸ் சுத்தமாக எடுபடவில்லை.

இந்தக் கொடுமையான கொரோனா காலத்தில் கவலை மறந்து சிரிக்கலாம், ரசிக்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு வந்த பார்வையாளர்களுக்கே பேய் பிடிக்க வைத்திருக்கிறது இந்த பேய் மாமா’ திரைப்படம்.

RATINGS – 3 / 5

Our Score