மேடின் இந்தியா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாஸ்கர் சீனிவாசன் தயாரித்துள்ள படம் ‘வேதபுரி.’
இந்தப் படத்தில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக தேவதா, யோகா நடித்துள்ளனர். மற்றும் கராத்தே ராஜா, பைரவ், லொள்ளு சபா மனோகர், தினா, பாஸ்கர் சீனிவாசன், ஜெகன், ஜே.பி.ஆர்., பேபி நிலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விமல் முருகன், இசை – சுரேஷ் ஷர்மா, பாடல்கள் – வெங்கட், சிவராமன், கலை – ஆதவன், எடிட்டிங் – ஆர்.ஜி.தங்கராஜ், சண்டை பயிற்சி – M.M.A. சரவணன், நடனம் – சரவணன், ஷாஜகான், இணை தயாரிப்பு – M.M.A. சரவணன், தயாரிப்பு -பாஸ்கர் சீனிவாசன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அக்னி ஆதவன்.
படம் பற்றி இயக்குநர் அக்னி ஆதவன் பேசும்போது, “இது ஒரு கமர்ஷியல் திரில்லர் படம். நரிக்குறவர் வம்சத்தை சேர்ந்த நாயகனும், அவரது உறவினர்களும் ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துகிறார்கள்.
அப்படி அவர்கள் செல்லும்போது வேதபுரி என்ற ஊரில் தஞ்சம் அடைகிறார்கள். அப்போது அந்த ஊரில் நடக்கும் அசம்பாவிதம் மூலம் அவர்கள் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். அதனால் ஊர்க்காரர்கள் அவர்களை விரட்டி அடிகிறார்கள். இறுதியில் நரிக்குறவர்கள் அந்த பிரச்சனையை எப்படி சமாளித்து வெற்றி கண்டார்கள். தங்கள் மேல் சுமத்திய பழியை எப்படி போக்கினார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
44 வருடங்களுக்கு பிறகு முழுக்க முழுக்க நரிக்குறவர்கள் நடித்திருக்கும் படம் இது. அவர்கள் எங்களுக்கு அவர்களது பாஷையை சொல்லிக் கொடுத்து நிறைய உதவிகளை செய்தார்கள். அவர்களுக்கு நான் நன்றியை கூறிக் கொள்கிறேன்..” என்றார்.









