நடிகை வனிதா விஜயகுமார் தன் பெயரை மீண்டும், மீண்டும் லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார்.
சமீபத்தில்தான் விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பத்ரகாளி வேடமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் பாதியிலேயே வெளியேறுவதாக ஒரு செய்தியை வெளியிட்டார்.
இந்தச் செய்தியின் முடிவில் அவருக்கும், அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால்தான் இது நிகழ்ந்ததாக மறைமுகமாகச் சொல்லியிருந்தார். இதை உறுதிப்படுத்தும்வகையில் அந்த டிவி வெளியிட்ட அந்த நிகழ்ச்சியின் புரமோவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அந்த நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக செய்யப்பட்ட செட்டப் என்கிறது டிவி மீடியா உலகம்.
அதேபோல் நேற்றைக்கு மேலும் ஒரு செய்தி புகைப்படத்துடன் வெளியானது. வனிதாவுக்கு 4-வது முறையாக திருமணமாகப் போவதாகவும், அவருடைய வருங்கால கணவரின் பெயரின் முதல் எழுத்து S என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக வனிதாவே ஒரு வீடியோ செய்தியில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து யார் அந்த 4-வது இளிச்சவாய கணவர் என்று அனைவரும் தேடத் துவங்க.. 2 மணி நேரம் கழித்து ஒரு புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார் வனிதா. அந்தப் புகைப்படத்தில் வனிதாவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணக் கோலத்தில் நின்றிருக்கிறார்கள். இதே புகைப்படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனும் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்தப் புகைப்படம் வந்ததும் ஒருவேளை இது நிஜமோ என்றெண்ணி ஒரு கணம் திகைத்துப் போய்விட்டார்கள் இணையத்தளவாசிகள். பின்பு கொஞ்சம் சுதாரித்து இது ஒரு சினிமா விளம்பரத்துக்காக செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து கொஞ்சம் மூச்சுவிட்டார்கள்.
வனிதா தற்போது நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் பிரமோஷனுக்காகத்தான் இது மாதிரி டிராமா போடுகிறார்கள் என்பதுதான் உண்மை. என்ன இருந்தாலும் இது உண்மையாக இருக்காது என்பதை பத்திரிகையாளர்கள் ஏற்கெனவே ஊகித்துவிட்டார்கள். ஏனெனில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருக்கிறார்கள். பின்னிர மாட்டாங்க..?
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க வனிதா விஜயகுமாரும்-பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நாளை மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்களாம்.
ஆக மொத்தத்தில் பத்திரிகையாளர்களை, பைத்தியக்காரர்கள் என்றே நினைக்கிறார்கள் திரைப்பட உலகத்தினர்..!