Focus Studios சார்பில் தயாரிப்பாளர் விநாயக் துரை தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வல்லவன் வகுத்ததடா’.
இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – Focus Studios, தயாரிப்பாளர் – விநாயக் துரை, இயக்குநர் – விநாயக் துரை, ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து, இசை – சகிஷ்னா சேவியர், படத்தொகுப்பு – அஜய், சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யூ, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்–சிவா (AIM),
Focus Studios சார்பில் விநாயக் துரை இப்படத்தை தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதி படத்தை இயக்கியுள்ளார்.
5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர் லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
–பகவான் ஸ்ரீ கிருஷணர்
‘பகவத் கீதையின் சாரம்’ என்று சொல்லப்படும் இந்தத் தத்துவ விசாரங்களை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெறும் 5 விதமான கதைகளுக்கும் இந்தக் கீதா சாரத்தில் இருந்து பொருத்தமான வசனங்களைத் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஐந்துவிதமான மாந்தர்கள்.. ஐந்துவிதமான கதைகள்.. இவைகள் அனைத்தும் ஒரு புள்ளியில் ஒரு நாள் இணைகின்றன. அந்தப் புள்ளி எது..? இவர்களுக்குள் என்னவிதமான தொடர்பு என்பதுதான் இந்தப் படத்தின் சுவாரசியமான சங்கிலி தொடரான திரைக்கதை.
அனன்யா மணி தனக்குப் பிராக்கெட் போடும், வலை வீசும் அத்தனை நபர்களையும் காதலிக்கிறார். ஒருவருக்கொருவர் தெரியாமல் அனைவரிடமும் காதல் பேச்சையும், காமப் பார்வையையும் வீசி பணம் பறிக்கிறார். அவரது அப்பா இழந்த நிலம் என்று யாரோ ஒருவரின் நிலத்தைக் கை காட்டி தொடர்ந்து அனைத்து காதலர்களிடமும் பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.
கால் டாக்சி டிரைவராகப் பிழைப்பு நடத்தி வரும் சுவாதி மீனாட்சிக்கு ஒரு நாள் அந்த வேலையும் பறி போய்விடுகிறது. அந்த நேரத்தில் அவரது சகோதரி வாயும், வயிறுமாக சீமந்தத்திற்கு வீட்டுக்குத் திரும்பி வருகிறார்.
மகளின் சீமந்த செலவுக்குக் கடன் கேட்டு அல்லாடி வருகிறார் வாட்ச்மேன் வேலை பார்க்கும் இவர்களின் தந்தை. ஒரு கட்டத்தில் அனன்யா வந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகி சீரியஸாக மருத்துவமனையில் கிடக்கிறார் அப்பா. அப்பாவின் ஆபரேஷன் செலவுக்காகப் பணம் கேட்டு அல்லாடி வருகிறார் சுவாதி மீனாட்சி.
இன்ஸ்பெக்டர் நீதிமணியான ராஜேஷ் பாலச்சந்திரன், நகரின் மிகப் பெரிய கந்துவட்டிப் பார்ட்டியான விக்ரம் ஆதித்யாவிடம் 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்காக ஸ்டேஷனுக்கு வரும் அனைத்து அப்பாவிகளிடமும் மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். இவரையும் வழக்கமான கடன்காரன் போல பாவித்து விக்ரம் ஆதித்யா கடன் கேட்டு மிரட்ட.. விக்ரமை காலி செய்ய தேஜ் சரண்ராஜை பயன்படுத்த நினைக்கிறார் ராஜேஷ்.
நாயகன் தேஜ் சரண்ராஜும், அவரது நண்பரான ரெஜின் ரோசும் இணை பிரியாத திருடர்கள். சுவாதி மீனாட்சி ஓட்டி வந்த காரை திருடி புதிதாக பாலீஷ் போட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரனின் மனைவியிடமே விற்று விடுகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் செய்யச் சொன்ன அஸைண்மெண்ட்டை முடித்தால் வழக்கிலிருந்து விடுதலை பெறலாம் என்ற நிபந்தனையின் பேரில் ஒரு மிகப் பெரிய திருட்டில் இறங்குகிறார்கள்.
நகரின் மிகப் பெரிய கந்துவட்டி ஆளான விக்ரம் ஆதித்யா பணம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கடனைக் கொடுத்துவிட்டு கடனைத் திருப்பித் தராமல் சிக்கும் நபர்களை கொலை செய்து அவர்களது உடல் உறுப்புக்களை அபேஸ் செய்து அதில் காசு பார்க்கும் கொடூர மனம் படைத்தவர்.
இவருடைய காதலிதான் அனன்யா மணி. அனன்யாவிற்கு விலையுயர்ந்த நெக்லஸை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அனன்யா மணி இவரிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தைக் கறந்துவிட்டு தனது முதல் காதலனோடு தப்பியோட எண்ணுகிறார்.
இப்படி இவர்கள் அனைவருக்கும் ஒரு ஹைப்பர் லிங்க் தொடர்பு கடைசிவரையிலும் இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த்த் தொடர்பினால் இவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினைகள் என்னென்ன..? அந்தப் பிரச்சினைகள் தொடங்கி, படர்ந்து, நடந்து எங்கே போய் முடிகின்றன..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
நாயகன் தேஜ் சரண்ராஜூக்கு வில்லன் வேடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் இவரது நண்பர் ரெஜின் ரோசும் இணைந்து செய்யும் கொள்ளைகளும், வழிப்பறியும், கார் திருட்டும் சுவாரசியமானது.
கடைசியில் இவர்களின் நட்புக் கெடலுக்கு அதே பணமே காரணமாக அமைந்துவிடுவது முரணான விஷயம். இதில் ரெஜின் ரோஸூக்கு இருக்கும் ஒரு கனவு நியாயமானது. அதனாலேயே இவரது மரணம் நமக்குள் ஒரு அச்சச்சோவை ஏற்படுத்துகிறது.
நாயகிகளில் அனன்யா அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார். பார்க்க பாந்தமாக, குடும்பப் பாங்கான தோற்றத்தில், கவர்ச்சியான முகவெட்டுடன் இவரிடம் சிலர் காதலைச் சொல்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த சாந்தமான முகத்தை வைத்துக் கொண்டு அனைவரையும் அனன்யா ஏமாற்றி வருவதுதான் ரசிகர்களை அதிர்ச்சியாக்குகிறது.
மற்றுமொரு முக்கியமான கேரக்டரான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரனின் கதாப்பாத்திரம் சிரிப்பு. இடையிடையே அவர் சிரிக்கும் சின்னத்தனமான சிரிப்பே நம்மை ஈர்க்கிறது. துளிகூட தயக்கமில்லாமல் ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம் பணத்தைப் பிடுங்குவதும், அதற்கொரு நியாயத்தை ஏட்டுவிடம் சொல்வதும் இப்படியொரு ஆள்கிட்ட யாருமே மாட்டிக்கக் கூடாதுடா சாமி என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சுவாதி மீனாட்சி தனது குடும்பச் சூழலுக்காக கார் ஓட்டி பிழைப்பு நடத்தினாலும் அதிலும் ஒரு நேர்மையானவராக 5 ரூபாயைக்கூட திருப்பிக் கொடுக்கும் நல்லவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.
அவருக்கும் வரும் சோகத்தைத் தாங்கும் மனப்பக்குவத்தையும், அப்பாவைக் காப்பாற்றத் துடிக்கும் அவரது வேகத்தையும் கண்ணீர்விட்டு அழது நடிப்பைக் கொட்டி காண்பித்திருக்கிறார்.
கந்து வட்டிக்காரராக பயங்கரமான தாதாவாக நடித்திருக்கும் விக்ரம் ஆதித்யாவின் நடிப்பும் ஏற்கக் கூடியதுதான். ஆனால், இவருக்கான கேரக்டர் ஸ்டெக்ச்சுதான் லாஜிக் தாங்காமல் பலமாக இடிக்கிறது.
கார்த்திக்கின் ஒளிப்பதிவு கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைக்கிறது. சகிஷ்னா சேவியரின் இசையும், பாடல்களும் அந்தந்த சிச்சுவேஷனுக்கேற்றவையாக அமைந்து நமக்குக் கொஞ்சம் ரிலாக்ஸை தருகின்றன.
படத்தின் தலைப்பு “வல்லவன் வகுத்ததடா உலகம்” என்பதை சொல்ல வந்திருக்கிறது. ஆனால், கடைசியில் “அந்த வல்லவனுக்கும் இன்னொரு வல்லவன் இருப்பான்டா..” என்று சொல்லி முடித்திருக்கிறது.
இருந்தாலும் ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி பரிகாரமாகாது. யாருடைய பணத்தையோ எடுத்து அப்பாவின் மருத்துவச் செலவுக்கு சுவாதி மீனாட்சி பயன்படுத்தவது ஏற்புடையதல்ல. இது கடவுள் கொடுத்தது என்று அவர் நினைத்தால் அது நிச்சயம் முட்டாள்தனம். ஒருவகையில் நாயகன் தேஜ் சரண்ராஜ் செய்ததற்கும், சுவாதி செய்ததற்கும் வித்தியாசமே இல்லை எனலாம்.
படத்தில் இருக்கும் ஐந்து கதாபாத்திரங்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும், திரைக்கதையிலும் அடைக்க முடியாத லாஜிக் ஓட்டைகளை வைத்திருக்கிறார் இயக்குநர்.
கடனுக்காகப் பத்திரங்களை யார் வாங்கி வைத்துக் கொண்டாலும் அதை வைத்தோ, வெற்று பேப்பரில் கையெழுத்தை வைத்து எதையும் செய்துவிட முடியாது. இப்போது சொத்துப் பரிவர்த்தனைகூட நேரில் சென்று வீடியோவில் முகம் காட்டினால்தான் நடக்கும்.
மேலும் “நான் பணத்தைத் திருப்பி தராவிட்டால் என்னுடைய உறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்..” என்று எழுதி வாங்கிக் கொண்டு பணம் தருகிறாராம் விக்ரம் ஆதித்யா. இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
அப்படி கடன் கொடுக்காதவர்களைக் கொலை செய்துவிட்டு ஸ்பேர் பார்ட்ஸ்களை யாரிடம் கொண்டுபோய் விற்க முடியும்..? அந்தக் கொலை வழக்காக மாறாதா..? கொலை செய்யப்பட்டவர்களை யாரும் தேட மாட்டார்களா..? பில்டப்புக்கு ஒரு அளவு வேண்டாமா இயக்குநரே!?
இது மட்டுமில்லை. அனைத்து கேரக்டர்களுக்குமே ஒவ்வொரு லாஜிக் எல்லை மீறலையும் வைத்திருக்கிறார் இயக்குநர்.
லோக்கல் இன்ஸ்பெக்டரை இப்படியொரு லோக்கல் கந்து வட்டிக்காரர் அடிக்க முடியுமா..? மிரட்ட முடியுமா..? அந்த இன்ஸ்பெக்டர் நினைத்தால் அந்த 13 லட்சம் கடனை ஆபீஸ் லோன் போட்டே அடைத்துவிட முடியும். அல்லது ஏதாவது ஒரு கேஸை வைச்சு ஒரே நாளில் சம்பாதித்துவிட முடியும். இதெல்லாம் சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு..?
பல திரைப்படங்களில் காட்டுவதைப் போலவே இந்தப் படத்திலும் தனியார் மருத்துவமனை.. ஆபரேஷன்.. லட்சக்கணக்கில் பணம் தேவை என்றே திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போதுதான் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிறப்பாக நடந்து வருகிறதே..அங்கே போயிருந்தால் இந்த அலைச்சல்கூட சுவாதி மீனாட்சிக்குத் தேவையிருக்காதே..!?
நல்ல நண்பர்களான நாயகனும், அவரது நண்பரும் கடைசி நேரத்தில் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதை சட்டென ஏற்க முடியவில்லை. இது திரைக்கதைக்காக எழுதப்பட்ட கதையாகவே நமக்குத் தோன்றுகிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் ரெஜின் ரோஸ் பணத்தை எடுத்து பேக் செய்யாமல் டிரெஸ்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருப்பதும், தப்பித்து ஓட வேண்டிய நேரத்தில் தாமதித்துக் கொண்டிருப்பதும் காமெடியாகிவிட்டது.
படத்தின் பட்ஜெட் மிகக் குறைவு என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இருந்தாலும் அறிமுகம் இல்லாத நடிகர், நடிகையரை வைத்து ஒரு நேர்த்தியான திரைக்கதையில் புதியவர்களெல்லாம் இணைந்து ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முனைந்திருப்பது நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஒரு முறை நிச்சயமாகப் பார்க்கலாம்தான்..!
வல்லவன் வகுத்ததடா – வருவதை எதிர்கொள்ளடா என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்கள்..!
RATING : 3.5 / 5