அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல்’ என்ற வெப் சீரிஸை தயாரித்துள்ளது.
இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.
நேற்று உலகம் எங்கும் ஸ்ட்ரீமிங் ஆன இந்த சுழல் வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது..?
கொங்கு மண்டலத்தில் இருக்கிறது சாம்பலூர் என்ற கிராமம். அக்கிராமத்தில் ஒரு பேக்டரி இயங்கி வருகிறது. அந்தப் பேக்டரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் பார்த்திபன் தனது தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்துகிறார். அவர் போராட்டம் நடத்திய பிறகு அந்தப் பேக்டரிக்கு தீ வைத்து விடுகிறார்கள்.
இதற்கு காரணம் பார்த்திபன்தான் என இன்ஸ்பெக்டர் ஆன ஸ்ரேயா ரெட்டியும், எஸ்.ஐ ஆன கதிரும் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன்தான் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.
இந்நேரத்தில் பார்த்திபனின் 15 வயது மகள் காணாமல் போகிறார். அதற்கு காரணம் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டியின் மகன்தான் என்பது தெரிய வருகிறது. அதிலும் ஒரு ட்விஸ்ட் வர.. ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்குள் என்ட்ரி ஆகிறார்.
பேக்டரியை கொளுத்தியது யார்? பார்த்திபன் மகளை கடத்தியது யார்? அடுத்தடுத்து என்ன நடந்தது? என்பதற்கான பதில் எல்லாம் இந்த ‘சுழல்’ வெப் சீரிஸில் இருக்கிறது
படத்தின் லீட் ரோலில் கதிர் அருமையாக நடித்துள்ளார். சாம்பலூர் என்ற கிராமத்தில் ஒரு எஸ்.ஐ. இருந்தால் எப்படி இருப்பாரோ… அப்படியே கதிர் திரையில் பிரதிபலிக்கிறார். ஆக்ஷன் சீக்வென்ஸ் பெரிதாக இல்லாவிட்டாலும் இருக்கும் சிறிய சீக்வென்ஸிலும் பெரிதாக ஸ்கோர் பண்ணுகிறார்.
எமோஷ்னல் காட்சிகளிலும், தான் காதல் வயப்பட்டிருப்பதை தனக்கு திருமண நிச்சயமாகியுள்ள பெண்ணிடம் மறைக்கும் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவர் போலவே நடிப்பில் கடும் டப் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
எட்டாவது எபிசோடில் ஐஸ்வர்யா பொங்கி வெடிக்கும்போது சீரிஸ் பார்க்கும் அனைவருக்கும் மனம் பொங்கிவிடும். பார்த்திபன் தனது அனுபவத்தால் அவரது கேரக்டரை அழகாக தாங்கிப் பிடித்துள்ளார்.
மகள்களை நினைத்து அவர் உடையும் இடங்கள் எல்லாம் அல்டிமேட் நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரேயா ரெட்டிதான் செம்ம சர்ப்ரைஸ். வில்லி ரோலில் ஓவர் சவுண்ட் விடுவார் வேறு என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால் இன்ஸ்பெக்டர் கேரக்டரை அவ்வளவு கச்சிதமாகச் செய்துள்ளார். கம்பீர இன்ஸ்பெக்டர் என்பதைத் தாண்டி ஓர் அன்பான அம்மாவாகவும் ஒரு சில காட்சிகளில் ஈர்க்கிறார்.
மேலும் நிலா என்ற கேரக்டரில் நடித்துள்ள பெண்ணும் சிறந்த தேர்வு. நடிகை லதாராவ் ஒரு கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார். இந்த சீரிஸின் பெரிய பலமே காஸ்டிங் தேர்வு. துண்டு ரோலில் வருபவர்கள்கூட மனதில் துண்டு போட்டு இடம் பிடிக்கிறார்கள்.
நடிகர்களின் தேர்வும் பெர்பாமன்ஸும் எப்படி பலமோ அதேபோல், டெக்னிக்கல் பணியிலும் இந்த சீரிஸ் வீரியத்தோடு இருக்கிறது. முகேஷின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. குறிப்பாக மயானக் கொல்லை நடக்கும் காட்சிகளில் எல்லாம் முகேஷின் லைட்டிங் வொர்க், அட்டகாசம். விதவிதமான ஆங்கிளில் மயானக் கொல்லை காட்சியை படமாக்கியுள்ளார். சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் தரமாக இருக்கிறது. அதற்கான மெயின் காரணம் படத்தின் மேக்கிங்.
அந்த மேக்கிங் + கன்டென்ட் இந்த இரண்டும் சாம் சி எஸ்ஸை உறங்க விடாமல் செய்திருக்கும் போல. அவரும் அடித்து ஆடியிருக்கிறார். பரபர காட்சிகளை எல்லாம் அவரது பேக்ரவுண்ட் ஸ்கோர் இன்னும் பரபரப்பாக்குகிறது. படத் தொகுப்பாளரின் உழைப்பை க்ளைமாக்ஸ் காட்சிகளில் காண முடிகிறது. அவரும் அசத்தியிருக்கிறார். கலை இயக்குநரின் பணியும் பாராட்டுக்குரியது.
இந்த வெப்சீரிஸின் சிறப்பம்சமே தொய்வே இல்லாத திரைக்கதைதான். ஒவ்வொரு எபிசோடிலும் மிகச் சிறப்பான ஒரு கீ பாயின்ட்-ஐ வைத்து ரசிகர்களை அடுத்து எபிசோடை பார்க்க வைத்து விடுகிறார்கள்.
வசனங்களில் ஆங்காங்கே அரசியல் நெடி இருப்பதும் சீரிஸுக்கு பலம் சேர்த்துள்ளது. கதிர் இன்வெஸ்டிகேஷன் பண்ணும் காட்சிகளில் எல்லாம் எந்தச் சினிமாத் தன்மையும் இல்லாமல் இருப்பது ஆறுதல்.
சிறிய, சிறிய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், மேக்கிங், என்கேஜிங் இரண்டிலும் இந்த ‘சுழல்’ நம்மை சுழல விடாமல் நிறுத்தி வைக்கிறது.
இந்து மதத்திற்குள் இருக்கும் வேற்றுமையையும், தீண்டாமையையும் மைல்டாகச் சொல்லாமல் ஸ்ட்ராங்காகச் சொல்லியிருப்பதும் சிறப்புமிக்க ஒன்று.
இந்த வார ஓடிடி ரேஸில் முதல் இடம் இந்த சுழலுக்குத்தான்..!