‘வலிமை’ படத்தின் அப்டேட் ‘மாநாடு’ பட மீட்டிங்கில் வெளியானது

‘வலிமை’ படத்தின் அப்டேட் ‘மாநாடு’ பட மீட்டிங்கில் வெளியானது

வலிமை’ படத்தின் அப்டேட் என்ன என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்போதைய முதல்வர் எடப்பாடியிடமே இதைக் கேட்டு சிரிக்க வைத்தார்கள். மேலும் பா.ஜ.க. பிரமுகர் வானதி சீனிவாசனிடமும் தேர்தல் களத்தில் இதைக் கேட்டு நச்சரித்தார்கள்.

அஜீத் போகும் இடமெல்லாம் இதே புலம்பல்தான். டிவிட்டரில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு மண்டகப்படி சார்த்தாத குறையாக அப்டேட் கொடுக்காததற்காக அவரைத் திட்டித் தீர்த்தார்கள் அஜீத் ரசிகர்கள்.

தற்போது இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போதுகூட கேலரியில் இருந்து சிலர் வலிமை அப்டேட் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத்தும், தயாரிப்பாளர் போனி கபூரும் எந்தச் செய்தியையும் வெளியில் விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா போனால் போகிறதே என்று வலிமை படத்தின் அப்டேட்டை மாநாடு படத்தின் கலந்துரையாடலின்போது வாய் தவறி சொல்லிவிட்டார்.

“வலிமை’ படத்தில் அஜீத் அறிமுகமாகும் பாடல் அமர்க்களமாக இருக்கிறது. அவருக்கு அது ஒரு டிரேட் மார்க் பாடலாக அமையும். மேலும் படத்தில் ஒரு அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்றும் உள்ளது. அதுவும் நிச்சயமாக அனைத்துத் தரப்பினரையும் கவரும்..” என்று சொல்லியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதையெல்லாம்விட எடுத்தவரைக்கும் புகைப்படங்களையாவது வெளியில்விட்டால் நன்றாக இருக்குமே என்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

Our Score