full screen background image

குட் பேட் அக்லி – சினிமா விமர்சனம்

குட் பேட் அக்லி – சினிமா விமர்சனம்

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் நவீன் எர்நேனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, சுனில், அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா, சிம்ரன், டினு ஆனந்த், கார்த்திகேயன், சாயாஜி ஷிண்டே, உஷா உதூப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பினை செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு – ஜி.எம்.சேகர், உடை வடிவமைப்பு – அனு வர்த்தன், ராஜேஷ் குமரேசு, சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான அஜித் குமாரை ஹீரோவாக வைத்து அவரது ரசிகர் மன்ற தலைவரே ஒரு படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ… அதுதான் இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.

இந்தியாவின் மிகப் பெரிய டான் ஏ.கே. என்ற அஜித் குமார். ரெட் டிராகன் என்ற ரவுடி கும்பலின் மாபெரும் தலைவன். திரிஷாவை திருமணம் செய்யும்பொழுது நல்லவர் போல் நடித்து ஏமாற்றுகிறார் ஏ.கே. கடைசியாக கணவரின் சுய ரூபம் தெரிந்து திரிஷா தன் கணவர் மீது மிகுந்த கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்துவிட, திரிஷா ஏ.கே. உடன் வாழ முடியாது என்று மறுக்கிறார். இதனால் ஒரு அமைதியான வாழ்க்கையை தன் குடும்பத்துடன் வாழ விரும்பும் ஏ.கே. போலீஸிடம் சரண் அடைகிறார். மும்பை சிறையில் கடந்த 17 வருடங்களாக இருந்து வருகிறார் ஏகே.

திரிஷா தன்னுடைய தந்தை பிரபு வசிக்கும் ஸ்பெயின் நாட்டிற்கு தன் பையனுடன் சென்றுவிட்டார். இப்பொழுது அந்தப் பையன் 17 வயது வாலிபன். ஏ.கே. சிறையில் இருப்பது அவருடைய மகனுக்கு இப்போது வரையிலும் தெரியாது. திரிஷா தன் மகனிடம் அவனுடைய அப்பா பல வெளிநாடுகளில் நாடு நாடாக சுற்றி பிசினஸ் செய்து வருவதாக பொய் சொல்லி இருக்கிறார்.

.கே. மும்பை  சிறையில் இருந்து விடுதலையாக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றது. இந்த நேரத்தில் தன்னுடைய பள்ளி வாழ்க்கை முடியும் கன்வோகேஷன் நிகழ்வில் தன் அப்பா நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று மகன் எதிர்பார்க்கிறார். ஆனால் ஏ.கே.வால் செல்ல முடியவில்லை.

அந்த நேரத்தில் மகனின் பாச உணர்ச்சிகளுக்குக் கட்டுப்படும் ஏ.கே. சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகி ஸ்பெயினுக்கு வருகிறார்.

இவர் ஸ்பெயினுக்கு வருகின்ற நேரத்தில் அவருடைய மகன் கார்த்தி போதை பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக ஏ.கே. நினைக்கிறார்.

அதுபோலவே தன் மகனை சிறையில் அடைக்கும்படியான சூழலை உருவாக்கியது யார்.. அந்த பொய் வழக்கில் சிக்க வைத்தது யார் என்று தன் விசாரணையை துவக்குகிறார் ஏ.கே. நேர்மையான, அமைதியான, வழியைக் கையாண்டால் இந்த விஷயத்தில் ஒரு ஸ்டெப்கூட ஏ.கே.வினால் முன்னெடுக்க முடியவில்லை.

இதனால் தன்னுடைய ஒரிஜினல் முகமான ரெட் டிராகன் தலைவன் அவதாரத்தை எடுத்து தன் மகனுக்காக மீண்டும் அந்த டான்களின் உலகத்தில் பிரவேசிக்கிறார் ஏ.கே.

இதன் பிறகு என்ன நடந்தது..? அவருடைய மகன் யாரால் சிக்க வைக்கப்பட்டான்? அவருடைய மகனை அவர் சிறையில் இருந்து மீட்டாரா?.. இல்லையா?.. கடைசியாக குடும்பத்தினருடன் சேர்ந்தாரா?.. இல்லையா?.. என்பதுதான் இந்த குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை.

அஜித்தின் ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்த படம் ஒரு மிகப் பெரிய மாஸான என்டர்டைன்மெண்ட்தான். அதில் சந்தேகம் இல்லை. அஜித்தை எந்தெந்த வகையில் எல்லாம் பார்ப்பதற்கு அவர் ரசிகர்களுக்கு பிடிக்குமோ, அந்தந்த வகைகளிலெல்லாம் அவருடைய நடிப்பை வெளிக் கொணரும் வகையில் கதை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அஜீத் ரசிகர் மன்றத்தின் தலைவரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அதிகமாக ஸ்லோ மோஷன் காட்சிகளும், பில்டப் காட்சிகளும் அஜீத்துக்கு கெத்தை கூட்டியிருக்கின்றன. அஜித் நடந்து வந்தால் தரையை பொளந்து விடும்.. வானம் இடிந்து விடும்.. ஆகாயம் விழுந்து விடும் என்றெல்லாம் பில்டப் காட்சிகளை ஏற்றிக் கொண்டே போயிருக்கிறார்கள்.

அஜித்தும் சும்மா இல்லை.. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு வெறியேற்ற முடியுமோ, உசுப்பேத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் தன்னுடைய நடிப்பை கொட்டியிருக்கிறார். அவர்களுக்கு எப்படியெல்லாம் பிடிக்குமோ அப்படி எல்லாம் அவரும் திரையில் வந்து, போயி, பேசி, அடித்து, சிரித்து, மகிழ்ந்து, அழுது, கொஞ்சி, குலாவி இருக்கிறார்.

பாடல் காட்சிகளிலும், நடன காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் எங்க தலைக்கு தல நிகர்தான் என்று சொல்வதைப் போல தன்னுடைய ஒவ்வொரு ஸ்டெப்பிலும் ஒரு மாஸ் ஹீரோ இருக்கிறான் என்பதை நிரூபித்திருக்கிறார் அஜித்.

அஜித் மட்டும் எப்படி அன்று போல் இன்று இளமையாக இருக்கலாம் என்று நீங்கள் கேள்வி கேட்கும் அதே நேரம் திரிஷாவையும் அதேபோல் நீங்கள் கேள்வி கேட்டாக வேண்டும். அவரும் இந்தப் படம் முழுக்க அப்படியேதான் இருக்கிறார். அவரும் தனக்குக் கிடைத்த இடங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார் அஜித்தை இன்னும் கொஞ்சம் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே த்ரிஷாவை கேள்வி கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இடையில் ஒரு சர்ப்ரைசிங் அட்டாக்காக சிம்ரனின் வருகையும் அமைந்திருக்கிறது. அவருடைய அறிமுகக் காட்சியை அட்டகாசம் என்று சொல்லலாம். சிம்ரன், திரிஷா, அஜித் மூவரும் பேசுகின்ற செல்போன் காட்சிகள் வெகு ரசனையாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் மூவரின் நடிப்புமே சிம்ப்ளி சூப்பர்.

படத்தில் அத்தனை பேரையும்விட மிகச் சிறப்பாக நடித்திருப்பவர் அஜித்தின் மகனாக நடித்திருக்கும் கார்த்திகேயன்தான். மிக மிக சிறப்பான நடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவை கோர்ட்டில் சந்திக்கும் தருணத்தில் தன்னுடைய நடிப்பை உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறார்.

வில்லனாக ஜானி, ஜாமி என்ற இரண்டு இரட்டை கதாப்பாத்திரங்களில் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸூக்கு இந்த முறை அவருடைய குரல் எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை. அவருடைய அறிமுகக் காட்சி அபாரம் என்று சொல்ல வேண்டும். அதிலும் அந்த ஒத்த ரூபா தாரேன் என்ற பாட்டுக்கு உடன் ஆடியிருக்கும் அந்த வெளிநாட்டு அழகிகளின் நடனம், தியேட்டருக்கு ஓடி வந்திருக்கும் இளைஞர்களை நிச்சயம் ஜொள்ளுவிட வைத்திருக்கும்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் பிரபு, பிரசன்னா, ஜாக்கி ஷெராப் மற்றும் எண்ணற்ற டான்கள் என்ற அனைவருமே ஏ.கே. என்ற அஜித் குமாருக்கு பக்க வாத்திய கோஷ்டியினராவே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் தன்னுடைய அத்தனை வித்தைகளையும் இதில் காட்டி இருக்கிறார் போலிருக்கிறது. அவ்வளவு அட்டகாசமான ஸ்கிரீன் பிரசன்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் சண்டை காட்சிகளும் அதனுடைய வெளிப்புற காட்சிகளும் அழகோ அழகு. அதேபோல் பாடல் காட்சிகளில் அத்தனை பல வண்ண விளக்குகளை ஒளி பாய்ச்ச செய்து, மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் புலி என்ற ஒரு பாடல் மட்டுமே கேட்கும்படியாக உள்ளது. மற்ற மூன்று பாடல்களுமே இசைஞானி இளையராஜாவின் சாகா வரம் பெற்ற பாடல்கள். அந்தப் பாடல்களை மிகச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் கச்சிதமாக பொருந்தி வருவதைப் போல ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

கோடிகளில் இவ்வளவு சம்பளம் வாங்கியும் ஜி.வி.பிரகாஷ் மட்டுமல்ல… எந்த ஒரு இசையமைப்பாளரும் இசைஞானியை நெருகவே முடியாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்றாகிவிட்டது.

சண்டைக் காட்சிகளையும், நடனக் காட்சிகளையும் கச்சிதமாக நறுக்கி கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி. அதேபோல் படத்தின் பல காட்சிகளில் பிரம்மாண்டமான செட் போட்டுக் கொடுத்திருக்கும் கலை இயக்குநரையும் மனதார பாராட்ட வேண்டும்.

உடை வடிவமைப்பு செய்திருக்கும் அனுவர்த்தனின் உடையலங்காரத்தில் காட்சிக்குக் காட்சி ஜொலிக்கிறார் அஜீத். அவருடைய கம்பீரமான தோற்றத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது உடை வடிவமைப்பு.

ஒரு ரசிகனுக்குத் தான் கடவுளாக நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாஸ் நடிகனை இயக்கும் பொறுப்பு கிடைத்துவிட்டால் அவன் என்னென்ன செய்வானோ அதையெல்லாம் இந்தப் படத்தில் செய்து தன்னுடைய குரு பக்தியை காண்பித்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவரைவிடவும் இன்னொரு மிகச் சிறந்த ரசிகர் மன்ற தலைவன் அஜித்திற்கு கிடைப்பாரா.. இல்லையா.. என்பதை நிச்சயமாக சந்தேகம்தான்.

தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை வைத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய ஒரு நல்ல பெயரை தட்டிச் சென்றுவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த வகையில் அவரை மனதாரப் பாராட்டுகிறோம்.

RATING : 3.5 / 5

Our Score