full screen background image

வடசென்னை – சினிமா விமர்சனம்

வடசென்னை – சினிமா விமர்சனம்

நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி, பவன், டேனியல் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வெற்றி மாறன், ஒளிப்பதிவு – வேல்ராஜ், இசை சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – ஜி.பி.வெங்கடேஷ், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், ஒலிப்பதிவு – டி.உதயக்குமார், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத், ஸ்டில்ஸ் – ராபர்ட், டிசைன்ஸ் – சசி அண்ட் சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் –வெற்றி மாறன் கூட்டணி  இந்தப் படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

2012-ம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் படமான ‘கேங்ஸ் ஆப் வாஸிபர்’ படம் போல ஒரு கேங்ஸ்டர் படம் தமிழில் வந்துவிடாதா என்கிற ஏக்கத்தில் இருந்த தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைக்க வந்திருக்கும் திரைப்படம் இது.

‘கேங்ஸ் ஆஃப் வாஸிபர்’ நூறாண்டு கால ஜார்கண்ட், பீகார் மாநில சுரங்கங்களின் வளர்ச்சியையும் அதையொட்டி அங்கே நடைபெற்ற சமூக, வாழ்க்கை மாற்றங்களையும், பெருகிய குற்றங்களையும், சட்டவிரோதச் செயல்களையும், அரசியல் ரவுடித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

100 வருட கால அரசியல் இல்லையென்றாலும் 40 வருட கால அரசியலைத் தொட்டுக் காண்பித்திருக்கிறது இந்த ‘வடசென்னை’ திரைப்படம்.

படத்தின் கதை 1984, 1987, 1991, 1996, 2003 ஆகிய காலக்கட்டங்களில் நடக்கிறது. ராஜன்(அமீர்), குணா(சமுத்திரக்கனி), செந்தில்(கிஷோர்), தம்பி(டேனியல்), வேலு(பவன்), பழனி(தீனா) ஆகிய அறுவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படம் சொல்லியிருக்கிறது. இதில் ராஜனும், தம்பியும் அண்ணன் தம்பிகள். மற்றவர்கள் அதே வடசென்னை மீனவக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து நண்பர்களானவர்கள்.

1984-ல் கதை துவங்குகிறது. ராஜன் தலைமையில் மற்றவர்கள் வேலை செய்கிறார்கள். கடலுக்குள் சென்று பெரிய கப்பல்களில் இருக்கும் கடத்தல் பொருட்களை போலீஸுக்கும், கடற்படையினருக்கும் தெரியாமல் கரைக்குக் கொண்டு வரும் குருவி வேலையைச் செய்கிறார்கள்.

ராஜன் அதே பகுதியில் இருக்கும் சந்திரா என்னும் ஆண்ட்ரியாவை காதலித்துத் திருமணம் செய்கிறார். கிஷோரும், தீனாவும் திருமணமானவர்கள். கனி, டேனியல், பவன் ஆகியோர் திருமணமாகாதவர்கள்.

1984-ல் அப்போதைய போப்பாண்டவரான 2-ம் ஜான் பால் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது சென்னைக்கும் வந்தார். அப்படி சென்னைக்கு வரும்போது பெசண்ட் நகர் சர்ச்சுக்கு வந்து வழிபாடு நடத்துவதாக ஒரு திட்டம் இருந்தது.

அவர் வரும்போது அந்தப் பகுதியில் குடிசைப் பகுதிகள் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் அந்தக் குடிசையில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி அவர்களை வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அந்த மக்கள் வெளியேற மறுத்து போராட்டத்தில் குதித்தார்கள்.

இதனால் அரசுகளின் திட்டம் பலிக்கவில்லை. அதே பிரச்சினை இந்தப் படத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல்வாதியான முத்து என்னும் ராதாரவி இதற்காக அமீரின் உதவியை நாடுகிறார். ஆனால் அமீரோ தனது சமுதாய மக்களுடன் கலந்து பேசி அந்த முடிவை எதிர்க்கிறார். இதனால் அமீர் மீது ராதாரவிக்கு கோபம் வருகிறது. அமீர் இருக்கும்வரையில் அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்பதால் குறுக்கு வழியைக் கையாள்கிறார் முத்து.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அமீரிடம் கை கட்டி வேலை செய்வீர்கள்?” என்று கேட்டு மற்றவர்களை முத்து உசுப்பிவிட.. தம்பியைத் தவிர மற்றவர்கள் ராஜன் மீது கோபமாகிறார்கள். இதில் கிஷோரும், பவனும்தான் அமீரை போட்டுத் தள்ளக் குறியாய் இருக்கிறார்கள்.

அதேபோல் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஒரு நள்ளிரவில் ஹோட்டலுக்கு அமீரை அழைத்து அவரைத் தீர்த்துக் கட்டுகிறார்கள். இதில் கடைசியில் விருப்பமில்லாமல் கனியும் சேர்ந்து கொள்கிறார்.

இந்தக் கொலையை சமுத்திரக்கனியும், பவனும் மட்டுமே ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார்கள். தங்களது நண்பர்கள் உடனேயே ஜாமீனில் எடுப்பார்கள் என்று கனியும், பவனும் நினைத்திருக்க, அதற்கு மாறாக காலம் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள் வெளியில் இருக்கும் கிஷோர்.

இது தொடர்பாக அவர்களுக்குள் கடுமையாக சச்சரவுகள், சண்டைகள் எழ, ஒருவர் மாற்றி ஒருவர் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்ற ஜென்மப் பகையாளியாகிறார்கள். இதனால் இவர்களது நட்பு உடைகிறது. சமுத்திரக்கனியும், பவனும் தாங்களாகவே தங்களது முயற்சியில் சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள்.

வருடங்கள் உருண்டோட.. வெளியில் வந்த சமுத்திரக்கனியும், பவனும் அதே வடசென்னை பகுதியில் தங்களுக்கென்று தனி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஏற்கெனவே அங்கே ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் கிஷோருக்கு சிக்கலைக் கொடுக்க.. இருவருக்குள்ளும் பழி தீர்க்கும் படலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கணவரை இழந்து அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவை சென்று பார்க்கும் கனியை, ஆண்ட்ரியா பார்வையாலேயே கவர்ந்திழுக்கிறார். கைம்பெண்ணுக்கு வாழ்க்கைக் கொடுப்பதாக நினைத்து தான் கொலை செய்தவனின் மனைவியையே கரம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.

ஊரில் சாமி கும்பிடும் நிகழ்வில் நேர்த்திக் கடன் செலுத்தும் அன்று சமுத்திரக்கனியை கொலை செய்ய கிஷோர் முயல்கிறார். அதிர்ச்சியாகிப் போன கனி, தனது ஆட்களுடன் பேசி, கிஷோரை தீர்த்துக் கட்ட முயல்கிறார். இதையறியும் கிஷோர் இப்போதைக்கு தான் சிறையில் இருப்பதுதான் நல்லது என்று நினைத்து பழைய வழக்கு ஒன்றில் சரணடைந்து சிறைக்குச் சென்றுவிடுகிறார்.

அதே வடசென்னையில் தனது அம்மாவுடன் வசித்து வரும் அன்பு என்னும் தனுஷுக்கு இதுதான் வேலை என்று இல்லை. தம்பி என்னும் டேனியல் சொல்லும் வேலையை செய்வார். அவ்வளவுதான். அவருக்குள்ளும் ஒரு காதல் பிறக்கிறது.

பத்மா என்னும் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்தவுடன் லவ்வாகிறார் தனுஷ். லவ்வுக்கு கஷ்டமெல்லாம் படவில்லை. ஆள் உடனேயே படிகிறது. தனது காதலை வளர்க்கும் நேரத்தில் காதலிக்கு அடிக்கடி கிஸ் கொடுக்கவும் தயங்கவில்லை தனுஷ்.

அப்படியொரு நாள் டிவி இருக்கும் வீட்டில் சினிமா பார்த்தபடியே இருட்டில் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் கிஸ் கொடுக்கும்போது அந்த வீட்டுப் பெண்மணி பார்த்து சத்தம் போட்டுவிட… இந்த கிஸ் மேட்டர் ஊருக்கே தெரிந்துவிடுகிறது.

இதையறியும் லோக்கல் ரவுடியான பழனி என்னும் தீனா இது குறித்து தனுஷை கிண்டல் செய்து கொண்டேயிருக்கிறார். பொறுமையிழந்து போன தனுஷ் ஒரு நல்ல நாளில் தனது வருங்கால மைத்துனரின் உதவியுடன் பழனியைப் போட்டுத் தள்ளுகிறார்.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க சமுத்திரக்கனியிடம் ஓடி வருகிறார் தனுஷ். கனியைவிடவும் அவரது மனைவியான ஆண்ட்ரியா தனுஷை காப்பாற்றச் சொல்லி கனியிடம் சிபாரிசு செய்ய.. தனுஷை காப்பாற்றுகிறார் கனி.

இடையில் தனுஷ் தனது காதலியை பலத்த எதிர்ப்புக்கிடையில் கரம் பிடிக்கிறார். பின்னொரு நாளில் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக தனுஷிடம் “தற்போது சிறையில் இருக்கும் கிஷோரை போட்டுத் தள்ள முடியுமா..?” என்கிறார் கனி. இந்த அஸைண்மெண்ட்டுடன் சிறைக்கு வரும் தனுஷ், அங்கே போட்டு வைத்திருந்த திட்டப்படி கிஷோர் கோஷ்டியை அணுகுகிறார்.

தன்னிடமிருக்கும் கேரம் போர்டு ஆட்டத் திறமையை வைத்து ஒரு பிளான் செய்து கிஷோரை தாக்குகிறார். ஆனால் குறி தவறியதால் கத்தி கிஷோரின் முதுகுத் தண்டில் பாய்ந்து அவரைப் படுத்த படுக்கையாக்குகிறது. முதுகுப் பக்கம் இருந்து குத்தியதால் தன்னைக் குத்தியது தனுஷ்தான் என்பது தெரியாமலேயே போகிறது கிஷோருக்கு..!

இந்த நேரத்தில் வடசென்னை பகுதி மக்களை அங்கேயிருந்து துரத்திவிட்டு அந்த இடத்தில் தங்க நாற்கர சாலையை அமைக்க அரசுகள் திட்டம் தீட்டுகின்றன. ஆனால் மக்கள் இடம் பெயர தயாராக இல்லை. இதனால் அங்கேயே இருக்கும் ஆயுதக் குழுக்களைக் கையில் போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்களை வைத்து மக்களை காலி செய்ய வைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரும்படி சமுத்திரக்கனி தனுஷிடம் கேட்க.. முதலில் அதனை ஏற்றுக் கொள்ளும் தனுஷ் பின்பு மறுத்துவிடுகிறார். “தங்களது மக்களுடைய வாழ்வாதாரமே கடல்தான். கடலுக்கு அருகில் தங்களுடைய வீடுகள் இருந்தால்தான் தங்களால் தொழில் செய்ய முடியும் என்பதால் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது…” என்றே சொல்லிவிடுகிறார்.

இதனால் கனிக்கும், தனுஷுக்குமான மோதல் துவங்குகிறது. ஏற்கெனவே சிறையில் தன்னை தாக்கிய ஆள் யாரென்று தெரியாமல் இருக்கும் கிஷோர், இத்திட்டத்திற்கு கனிக்கு உதவ தாங்கள் தயார் என்றும், அதற்குப் பதிலாக தன்னை சிறையில் கொலை செய்ய முயற்சித்த அந்தக் கருப்பு ஆடு யார் என்பதை மட்டும் சொன்னால் போதும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

தான் சொல்லித்தான் தனுஷ் அதனை செய்தார் என்பதை சொல்லாமல், தனுஷை கிஷோரின் ஆட்களிடத்தில் காட்டிக் கொடுக்கிறார் கனி. இதனால் தனுஷை கொலை செய்ய முயல்கிறார்கள் கிஷோரின் அடியாட்கள். தனுஷ் இதிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் இந்த வடசென்னை முதல் பாகத்தின் முக்கால் கதை..!

காலம் காலமாக ஆயுதபாரிகளின் ஆயத்தக் கிடங்காக அனைத்துத் தரப்பு மக்களாலும் சுட்டிக் காட்டப்படும் வடசென்னை பகுதியின் மாந்தர்கள் இப்படிப்பட்டவர்களோ என்று சிந்திக்கக் கூடிய அளவுக்கு இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

நிறைய கற்பனைக் கதை, கொஞ்சம் உண்மைக் கதை என்று சொல்லப்பட்டிருந்தாலும் பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவையாகவே இருக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் போப் ஆண்டவரின் வருகையும் நடந்தது. அதையொட்டி பெசண்ட் நகர் மீனவர் குப்பத்தின் ஒரு பகுதியை காவல்துறை உதவியுடன் மாநில அரசு அப்புறப்படுத்தியது. அந்த மீனவர்களுக்கு வேறொரு இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டித் தரப்பட்டதும் உண்மை.

இதேபோல் எம்.ஜி.ஆரின் மரணத்தின்போது சென்னை அண்ணா சாலையிலும், வடசென்னையில் இருக்கும் வால்டாக்ஸ் ரோட்டிலும் இருக்கும் பல கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றது. பல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை போய் அடுத்த சில நாட்களில் போலீஸ் உதவியுடன் அவைகள் மீட்கப்பட்டன. அத்தனையும் மீனவக் குப்பத்து வீடுகளில் இருந்து கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

மீனவக் குப்பங்களை காலி செய்யும்படி அரசு நிர்ப்பந்திப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். இந்தப் படத்திலும் அமீரின் ஆட்சிக் காலத்திலும் நடந்தேறி 20 ஆண்டுகள் கழித்து தனுஷின் ஆட்சிக் காலத்திலும் அது வாழையடி வாழையாகத் தொடர்கிறது.

ஆதிக்கச் சக்திகள் சக்தியில்லாத மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப் போட்டு தாங்கள் மட்டும் சுகமாக வாழ நினைக்கும் அந்தக் கடலோர சாலை விரிவாக்கத் திட்டம் இப்போதும்கூட நிலுவையில் உள்ளது.

படத்தில் பெரும் குறையாகச் சொல்லப்படுவது படத்தில் நடிக்கும் அத்தனை பேரும் சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசியிருப்பதுதான். அடித்தட்டு மக்களிடையே ஆண், பெண் பேதமில்லாமல் இது போன்று பேசுவது சகஜம்தான் என்றாலும் சினிமாவில் ரியலிஸமாக இத்தனை வசனங்களை வெளிப்படையாக பேச வைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

அதிலும் ஒரு படத்தின் நாயகியே ‘மக்கு கூதி’ என்று நாயகனை பார்த்து சொல்வது தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் சம்பவமாகும்.

அனிருத்துக்கு அடுத்தபடியாக அமீர் மீது ரொம்பவே பொறாமைப்பட்டிருக்கிறார்கள் தமிழ்ச் சினிமா ரசிகர்கள். அனிருத்துக்கு தன் உதட்டைக் கொடுத்த ஆண்ட்ரியா, இந்தப் படத்தில் அமீருடன் கட்டில் காதலில் ஈடுபட்டும், மேலாடை அணியாமல் அமீருக்கு மட்டும் தன் முன் அழகைக் காட்டியும் நடித்திருக்கிறார். பின்பு பொறாமை வராமல் இருக்குமா என்ன..? இந்தக் காட்சிகள் திரையில் நீக்கப்படும் என்று இயக்குநர் வெற்றி மாறன் சொல்லியிருக்கிறார். பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்..!

படத்தின் திரைக்கதை 1984, 1986, 1991, 1996, 2003 என்று பல காலக்கட்டங்களில் நடைபெற்றதாக இருந்தாலும், அந்தந்த காலக்கட்டத்திற்கேற்ப அந்த வடசென்னையின் சூழலை குறை சொல்ல முடியாத அளவுக்குப் படமாக்கியிருக்கிறார்கள்.

அந்த மக்களின் ஸ்லாங் காலத்திற்கேற்றாற்போல மாறி வந்தாலும், அம்மக்களின் நன்றியுணர்வு, கோபம், துக்கம், பாசம், அன்பு, ஏக்கம் என்று பலவற்றையும் தொடர்ச்சியாய் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.

விட்டுவிட்டு வரும் கதையின் போக்கில் துண்டு, துண்டான சுவையான திரைக்கதையில் சொல்லப்படும் காட்சிகளை கச்சிதமாகத் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். முன், பின் நகர்த்தலாகச் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை மிக எளிதாகப் புரியும்வகையில் அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகத் தெரிகிறது.

அந்தக் காலத்தை அப்படியே விட்டுவிடாமல் அப்போது நடந்தவைகளைக்கூட வசனம் மூலமாகச் சொல்ல வைத்து சரிக்கட்டியிருக்கிறார்கள். போப் ஆண்டவரின் வருகை, எம்.ஜி.ஆரின் மரணம், ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் உடல் இருந்த பீரங்கி வண்டியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டது, அந்தச் சமயத்தில் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டது, அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்ற பிரிவு.. மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஒன்றானது.. ராஜீவ்காந்தியின் துர்மரணம்.. என்று பல காலக்கட்டத்திலும் அம்மக்களின் நிலைமை எப்படியிருந்தது.. என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் கதையின் வடிவில் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஏழை குடு்ம்பத்தினர் பெரும்பாலும் ராபின்ஹூட் டைப் தலைவர்களை ஏன் விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்குத் தேவை உடனடி ஆக்சனும், தீர்வும்தானே ஒழிய.. இப்போது அரசு நிர்வாகத்தில் இருப்பது மாதிரி காலம் கடந்து வரும் உதவியை அல்ல. இதனால்தான் இப்போதும் ரவுடிகளுக்கும், அவர்தம் தலைவர்களுக்கும் மக்கள் மத்தியில் பயத்துடன் கூடவே மரியாதையும் இருப்பது..!

படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்திற்குள் நாம் இழுக்கப்பட்டுவிடுகிறோம். தப்பிக்கவே முடியவில்லை. அடுத்தடுத்து நடப்பவைகள் எதுவும் நம் யூகத்தில் இல்லை. அரை மணிக்கொரு முறை நடக்கும் டிவிஸ்ட்டுகளால் கதையின் நகர்வு இன்னும் ஜெட் வேகத்தில் பறப்பதால் இப்படியொரு படம் இதற்கு முன்பு தமிழில் வந்ததா என்கிற கேள்விக்குறியை எழுப்பியிருக்கிறது இத்திரைப்படம்.

இடைவேளையின்போது ஏற்படும் திடீர் திருப்பமும், அதற்குப் பிறகு நடக்கும் விறுவிறு திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலம். அமீர் நடித்திருக்கும் ராஜன் கேரக்டர் படத்திற்கு மிகப் பெரிய வெயிட்டை சேர்த்திருக்கிறது. அதோடு ஆண்ட்ரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை ரகசியமாகவே வைத்திருந்து இடைவேளைக்கு பின்பு விடுவித்திருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.

அடுத்தடுத்த காட்சிகளின் லொகேஷன்கள், காட்சியமைப்புகள், வசனங்கள், நடிகர்களின் நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருப்பது என்று எல்லாவற்றிலும் இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது.

இது இயக்குநரின் படமா அல்லது தனுஷின் படமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. இரண்டுமே பாதி, பாதியாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அன்புவாக நடித்திருக்கும் தனுஷ் அவரது பேய் நடிப்பை இதிலும் காட்டியிருக்கிறார். டீன் ஏஜ் முதல் முப்பது வயதை நெருங்கும் காலம்வரை மேக்கப்பில்லாமல் வித்தியாசத்தைக்  காட்டுவதில் தனுஷை விட்டால் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஆளில்லைதான்.

சாதாரணமான ஒரு அன்புவாக.. பின்பு அடியாள் அன்புவாக.. காதலன் அன்புவாக.. கணவன் அன்புவாக.. திருமணத்திற்குப் பிறகு வாழத் துடிக்கும் நேரத்தில் தனக்குக் குறி வைத்திருப்பதை நினைத்து வருந்தும் அன்புவாக.. கடைசியில் தனது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் போராளி அன்புவாக என்று பல முகங்களைக் காட்டியிருக்கிறார்.

தையல் மிஷினுக்காக ஐஸ்வர்யாவின் பின்னாலேயே போய் கெஞ்சுகின்ற காட்சியும், தீனாவிடம் போய் “கிஸ் அடிச்சதை வெளில பேசி கிண்டல் செய்யாதண்ணே..” என்று நேர்மையாய் கேட்பதும் சாதாரண ஒரு அன்புக்கு உதாரணம்.. காதலன் அன்புவாக பெண் பார்க்கப் போன இடத்தில் அத்தனை அன்பாக தனது வருங்கால மாமனாரிடம் பவ்யமாகப் பேசும் காட்சி தியேட்டரில் கை தட்டலை அள்ளுகிறது.

வடசென்னைப் பகுதிகளில் இப்போதும் ஆங்கில வார்த்தைகளை ஸ்டைலாக பேசுவதாகச் சொல்லி கொலை செய்யும் லெவலில் பேசுவார்கள். இதையே படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். தனுஷ் தன் வாயால் player என்பதை Flayer என்று பேசும்விதம், ‘எஸ்பெட்டேசன்ஸ்’, ‘கன்பர்மேசன்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகளை அவர் பயன்படுத்தும்விதமெல்லாம் உண்மைத்தனமானவை.

கிஷோரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் தனுஷ் அதற்கான காரண காரியங்களை விளக்கும்போது வேறு தனுஷாக வெளிப்படுகிறார். கல்யாணத்திற்குப் பிறகுதான் தனது உயிர் மீதான அக்கறை வந்து சற்று பயத்தை வெளிக்காட்டும் நிஜமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் தனுஷ். படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதும் தனுஷ்தான்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு பக்கம் குப்பத்து பத்மாவாக ஜொலிக்கிறார். கர்சீப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு களேபரத்தில் தையல் மிஷினை ஆட்டையைப் போடும் காட்சியிலும், தொடர்ச்சியாய் தனுஷ் கொடுக்கும் உதட்டு முத்தத்தை வாங்கிக் கொண்டும், முத்தம் வெளியில் தெரிந்துவிட்ட அவமானத்தில்  “உனக்கென்ன ஆம்பளை.. துடைச்சிட்டு போயிருவ.. எனக்குத்தான் அவமானம்…” என்று வெதும்புவதும் சிறந்த நடிப்பு. ஐஸ்வர்யாவின் தேர்ந்த நடிப்பைக் காட்டுகிறது இத்திரைப்படம்.

ஆண்ட்ரியாவுக்கு இரண்டு, மூன்றாம் பாகங்களில் நிறையவே வேலையிருக்கும் என்று நினைக்கிறோம். அந்த அளவுக்கு அவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பாய் இருக்கிறது. பழி வாங்கும் படலத்தை இத்தனை உச்சமாக படைத்திருக்க வேண்டாம் இயக்குநரே..!?

அமீரின் மரணக் காட்சியில் அழாமலேயே வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா, உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டவுடன் அமீரின் கூலிங் கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு வெற்று நடையுடன், வெறித்த பார்வையுடன் வந்து கூலிங் கிளாஸை பிணத்துக்கு அணிவித்துவிட்டு பார்க்கிறார் ஒரு பார்வை.. இயக்குநரின் அபாரமான இயக்கத் திறமைக்கு மிகப் பெரிய சான்று இந்தக் காட்சிதான். அற்புதம் ஆண்ட்ரியா, வெற்றி மாறன்..!

தோற்றத்தில் வித்தியாசத்தைக் காண்பித்த கையோடு முதல் இரவுக் காட்சியிலும் மற்ற நடிகைகளைவிட தான் எப்போதும் வித்தியாசம்தான் என்பதை காண்பிப்பதை போல தனது முன்னழகை கடலுக்கும், அமீருக்கும் மட்டும் காண்பித்து சூட்டை ஏற்றிவிட்டிருக்கிறார்.

அதோடு கடைசியாக இந்தக் கொலைப் பழிகளில் தனது பங்களிப்பு என்ன என்பதை சொல்லும்போது அசல் வில்லியாகவே தென்படுகிறார் ஆண்ட்ரியா. அடுத்தடுத்த பாகங்களில் இவரது நடிப்பை மேலும் பார்ப்போம்.

அமீர் ‘ராஜன்’ என்கிற புத்தம் புது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அனைவருக்கும் அண்ணனாக அதே நேரம் சமயோசிதம் கொண்டவராகவும், தலைவனுக்குரிய ஆளுமைத் தன்மையுடனும் இருக்கிறார். ராதாரவியை நாசூக்காக சொல்லிக் காட்டி பகைத்துக் கொண்டும், தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வதை உணர்ந்தும், உணராமலும் பேசுவது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சின் ஸ்பெஷல்.

அவர் கொல்லப்படும் காட்சியில் அரிவாள் கீழே விழுந்தவுடன் அதைப் பார்த்துவிட்டு “டேய்.. என்னடா இது?” என்று கேட்டு அதிர்ச்சியாகும் காட்சியில் உச்சபட்ச பரிதாபத்தை இழுத்திருக்கிறார். அந்தச் சண்டைக் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அருமை.

பொத்தி, பொத்தி வைத்திருந்த கோப உணர்வுகள் மொத்தமாய் பொங்கி வரும் வேளையில் தடை போடவும் முடியாது. அணை கட்டவும் முடியாது என்பதை இந்தக் காட்சியே காட்டுகிறது. துரோகத்தின் விளைவுகளே மரணம் என்பது ஆயுதக் குழுக்களில் சகஜம் என்றாலும் இறப்பு எப்படியிருந்தாலும் இறப்புதானே..!

சமுத்திரக்கனி தனது கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். அமீரை கொலை செய்ய முயற்சிக்கும் இடத்தில் அதைத் தடுக்க முயன்று பின்பு தோற்று.. கடைசியாக அவரும் சேர்ந்து அந்தக் கொலையில் பங்கெடுக்கும் காட்சியில் பதைபதைக்க வைத்திருக்கிறார். இதேபோல் தீனாவை கொலை செய்துவிட்டு வரும் தனுஷிடம் அறிவுரை சொல்லும் காட்சியிலும் கனியை அண்ணனாகவே பார்க்க முடிகிறது.

கிஷோரை போட்டுத் தள்ளும் அஸைண்மெண்ட்டை தனுஷிடம் ஒப்படைக்கும்போது அவர் பேசும் அனுசரணையான பேச்சு அப்படியே சுப்ரமணியபுரத்தில் சசிகுமாருடன் ஹோட்டலில் பேசும் நைச்சியமான பேச்சுதான். படத்தின் டைட்டில்தான் மாறியிருக்கிறது. இந்த இடத்தில் “முடிச்சிருவேண்ணே.. செஞ்சிருவேண்ணே…” என்று நன்றிப் பெருக்கோடு தனுஷ் சொல்லும் பதிலும் கச்சிதம்..!

கிஷோரைவிடவும் அவரது மனைவியாக நடித்திருப்பரின் நடிப்பு ஏ ஒன். அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஸன்களால் அதிகம் கவரப்பட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்..! என்னே ஒரு அருமையான நடிப்பு. கிஷோருக்கு ஜெயிலில்தான் அதிகம் நடிப்புக்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவரும் அவரது நண்பர் சுப்ரமணியம் சிவாவும் அமைதியின் திருவுருவாகவே நடித்திருக்கிறார்கள்.

மேலும் பவன் ஒரு பக்கம். குணாவுக்கும், செந்திலுக்கும் இடையே பஞ்சாயத்து செய்தே ஓய்ந்து போகும் டேனியலின் நடிப்பும் ஒரு பக்கம் ஈர்க்கிறது.

ரெண்டே முக்கால் மணி நேர படத்தை கொஞ்சமும் அலுப்பின்றி விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

வட சென்னை மக்களின் முழுமையான வாழ்வியல் மற்றும் நிலப்பரப்பு இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை துவக்கத்திலேயே இயக்குநர் சொல்லியிருந்தாலும் படம் என்னவோ முழுக்க, முழுக்க ஆயுதபாரி ஆட் குழுக்களையே சுற்றிச் சுற்றி வருகிறது.

சிறைச்சாலையில் அனுமதிக்கப்படாத செல்போன், கஞ்சா உட்பட அனைத்து பொருட்களும் எப்படி சிறைக்குள் வருகின்றன. யாரால் கொண்டு வரப்படுகின்றன. எப்படி மறைக்கப்படுகின்றன.. என்பதை மிக எளிதாக புரியும்வகையில் படமாக்கியிருக்கிறார்.

அரசும், அரசியல்வியாதிகளும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து சொந்த மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்.. அந்த வஞ்சகக் கும்பலின் நெட்வொர்க் எப்படிப்பட்டது.. எதுவரைக்கும் அது போகும்.. சிறைக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகட்டும் என்றெண்ணும் ஜெயிலின் உயரதிகாரிகளின் வஞ்சம் தீர்க்கும் பணி.. இப்படி பல்வேறு விஷயங்களையும் கிடைத்த இடைவெளிகளில் தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குநர்.

1990-களின் காலகட்டத்திற்காக கலை இயக்குநரும், சிகை அலங்கார நிபுணரும், மேக்கப் மேனும், உடையலங்கார நிபுணர்களும் நிரம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

தனுஷின் மேக்கப், உடைகள் எல்லாம் மாறி மாறி அப்போதைய காலக்கட்டத்தை காட்டுவதுபோலவே அமைந்திருக்கிறது. ஃபுல் பேகிஸ் பேண்ட், டபுள் பெல்ட், பெல்பாட்டம் பேண்ட், ஹிப்பி தலைமுடி, பரட்டைத் தலை.. என்று பல காலத்தின் எச்சங்களையெல்லாம் பார்த்து, பார்த்து படத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். இதற்காகவே அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

எதிர்பாராதவிதமாக இதுவொரு முக்கியமான அரசியல் படமாகவும் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக இதுவொரு தலித் அரசியல் பேசும் படம் என்றும் சொல்லலாம்.

’சிங்காரச் சென்னை’ என்ற மேல்தட்டு வர்க்கத் திட்டத்திற்காக சென்னையின் குடிசைப் பகுதியிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய் கண்ணகி நகரிலும், செம்மஞ்சேரியிலும் வீசியெறிந்த அவலங்களையும் அதற்குத் துணை நின்று, மக்களை விலைக்கு விற்பனை செய்த அரசியல் அயோக்கியர்களையும் தோலுரித்திருக்கிறது இந்த ‘வடசென்னை’ திரைப்படம். 

ஒரு சில படங்களில் மிகைப்படுத்தப்பட்டு, பக்குவமில்லாமல்  பேசப்பட்ட இந்த இட மாற்றல் பிரச்சினையை மிக அமைதியாக ஆனால், அழுத்தமாக பேசியிருக்கிறது இந்த ‘வடசென்னை’ திரைப்படம்.  

1980-களின் காலக்கட்டத்தில் வட சென்னையின் முக்கிய பகுதியான ராயபுரம் பகுதியில் ஏராளமான சிங்காரவேலர் மன்றங்களும், அம்பேத்கார் மன்றங்களும், ரெட்டை மலை சீனிவாசனின் மன்றங்களும் இருந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன.

படத்தில் அவற்றையும் சில இடங்களில் மட்டும் காட்டியிருக்கிறார்கள். அமீரின் பூதவுடல் சிங்காரவேலர் மன்றத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் அயோத்திதாசரின் புகைப்படத்தையும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனாலும் எக்காரணம் கொண்டும் இது தலித்திய படமாக மட்டுமே பெயராகிவிடக் கூடாது என்கிற நினைப்பில் பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்ட வடசென்னையின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறோம் என்றே மழுப்பியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஏகப்பட்ட சம்பவங்கள். அவையத்தனையையும் அட்டகாசமாக ஒன்றிணைத்திருப்பதில்தான் இயக்குநர் வெற்றி மாறனின் திறமை வியக்க வைக்கிறது.  

இதுவரையிலும் தமிழில் வெளிவந்த ‘வடசென்னை’ சம்பந்தப்பட்ட தமிழ் சினிமாக்களில் பேசப்பட்ட ‘வடசென்னை’யின் மொழியையெல்லாம்  ஒரே அடியில் பல மடங்கு தூரத்திற்கு பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இப்படத்தின் வசனங்கள். அவ்வளவு அசலான ‘வடசென்னை’ மொழியை இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல், தனுஷ் உள்ளிட்ட எல்லாருமே அசலான ‘வடசென்னை’ தமிழ் வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறார்கள். பல இடங்களில் அது மாதிரியான வசனங்களே நகைச்சுவையையும் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாக தனுஷ் ஐஸ்வர்யாவைப் பெண் கெட்டு செல்லும்போது, தர மாட்டேன் என்று சலம்பல் செய்யும் ஐஸ்வர்யாவின் அப்பாவை அவரது மகனே மண்டையில் தட்டி.. ”ங்கொம்மால நானும் பாத்துனே கீறேன்….”  என்று திட்டும்போது எழுந்த கை தட்டல் தியேட்டரை அதிரத்தான் வைக்கிறது. இத்தனை நகைச்சுவையை ஒத்தை வசனத்தால் கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இது மாரல் இல்லாத வார்த்தைகள்தான். இப்போதுதான் குடும்ப அமைப்பியலே சிதறிப் போய்விட்டதே.. இனிமேல் இதைப் பற்றி வருத்தப்பட்டு என்ன புண்ணியம்..?

ஒவ்வொரு நடிகருமே கொஞ்சமும் பிசிறில்லாமல் பேசியிருக்கிறார்கள். “ங்கொம்மால..”, “தேவடியா புள்ள..” உள்ளிட்ட சில அப்பட்டமான ஆபாச வசைச் சொற்களும் படத்தில் புழங்கியிருக்கிறது.

‘ஏ’ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை.. பேசப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளை நீக்க மாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். நாளைய தமிழகத்தில் இங்கு பேசப்பட்ட கெட்ட வார்த்தைகளே நல்ல வார்த்தைகளாக மாறப் போகிறது என்பது மட்டும் உண்மை.

படத்தில் பேசப்பட்டிருக்கும் சில நல்ல வசனங்கள்கூட அந்த மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையை வெகுஜன மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது..!

“பொழைக்கறதுக்கு வேற ஊருக்கு போறதே.. திரும்பி வந்தா இங்கதான் மறுபடியும் தங்குவோம்ங்கற நம்பிக்கைலதான்..” என்கிற ஒரு வசனம் உலகம் முழுவதும் இருக்கும் நாடோடிகளுக்கு பொருத்தமானது.

“இது எங்க மண்ணு.. இத விட்டுட்டு நாங்க எங்கேயும் போக முடியாது. எங்கயோ போய் அனாதையா சாவுறதுக்கு, இந்த மண்ணுக்காக சண்ட போட்டு இந்த மண்ணுலயே செத்துப் போறோமே..?” என்றும் கேட்கிறார் தனுஷ். நியாயம்தானே..?!

1987-ல் அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்பது தெரிந்த பின்பு அவர் புகைப்படத்திற்கு மாலை போட்டுவிட்டு அமீர் தனது நண்பர்களுடன் அ.இ.அ.தி.மு.க.வின் அடுத்தக் கட்ட நகர்வு பற்றி உரையாடுகிறார்.

ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு என்று பல பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிபோட்டாலும் “ஜெயலலிதாதான் சி.எம்.மாக வருவார்…” என்று உறுதியாகச் சொல்கிறார் அமீர். காரணம் கேட்பவர்களிடம்,  “டிவில பார்த்தீங்கள்ல.. பீரங்கி வண்டில ஏறப் போனப்ப.. அவரை கீழ பிடிச்சு தள்ளிவிட்டுட்டாங்க. இதனால் நம்ம மக்களோட மொத்த அனுதாபமும் அந்தம்மா மேலதான் இருக்கும். நிச்சயம் அவங்கதான் வருவாங்க. வேண்ணா பாருங்க. கீழ விழந்தவங்கதான் மேல வருவாங்க..” என்று உறுதியாகச் சொல்கிறார். இதுதான் சாதாரண மனிதர்களின் எண்ணவோட்டம்..!

இந்தக் காட்சியை காட்டும்போது நிஜமாகவே எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கையும் காட்டுகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை பீரங்கி வண்டியிலிருந்து கீழே இறக்கிவிட்ட காட்சியை மட்டும் சென்சாரில் ஆட்சேபித்து நீக்கிவிட்டார்களாம். அதனால் என்ன.. இப்போதும் யு டியூபில் அப்படியே இருக்கிறதே..! அதை நீக்க முடியுமா என்ன..?

வேல்ராஜின் ஒளிப்பதிவு அபாரம். காட்சிக்குக் காட்சி கேமிரா காட்டும் கோணத்தில் மிக வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். அமீர் கொலை செய்யப்படும் காட்சியும், அமீரின் உடலைப் பார்க்க ஆண்ட்ரியா வரும் காட்சியிலும் ரசிகர்களை பதைபதைக்கும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இதேபோல் தனுஷ்-ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் எபிசோடில் பிரேம் பை பிரேம் காதல் நிரம்பி வழிகிறது வேல்ராஜின் புண்ணியத்தில். நிலாவொளியில் அமீர்-ஆண்ட்ரியா முதல் இரவுக் காட்சியை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ்.

தனுஷ்  தனது மைத்துனருடன் சென்று தீனாவை கொலை செய்யும் காட்சியில் சண்டை இயக்கம் அபாரம். நின்றபடியே தனது சாவை எதிர்கொள்ளும் தீனாவின் நடிப்பும், இயக்கமும் ‘ஐயையோ’ என்றும் சொல்ல வைத்திருக்கிறது.

டேனியலின் மகள் பூப்புனித நீராட்டு விழாவின்போது தன்னைக் குத்தியவன் யார் என தன் மனைவி மூலமாகக் கேட்கும் கிஷோரின் பேச்சும், அப்போதைய பேச்சுவார்த்தை காட்சிகளையும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார்கள். இதற்கும் வேல்ராஜின் உதவி பெரிதும் உதவியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களே தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு கதையும், திரைக்கதையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது என்றாலும், தனுஷ்-ஐஸ்வர்யா காதலைக் காட்டும் பாடலும், அமீர் ஆண்ட்ரியா கல்யாண காட்சியின் பாடலும், ஊர்த் திருவிழா பாடலும் கேட்க இனிமையாய் இருந்தன.

இரண்டே முக்கால் மணி நேர படத்தை அதன் சுவாரஸ்யம் கெடாமல் பாதுகாத்து, போரடிக்காத வண்ணம் தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளர் ஜி.பி.வெங்கடேஷின் பணி மெச்சத்தகுந்தது.

முன் பின் காலம் மாறி வரும் காட்சிகளில் ஒரு சிறிய குழப்பம்கூட நேராத வண்ணம் காட்சிகளை அமைத்திருப்பது இயக்குநரின் பணியாக இருந்தாலும் அதனை நேர்ப்பட செய்திருப்பதற்கு படத்தின் தொகுப்பாளரையும் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

‘கேங்க்ஸ் ஆஃப் வாஸிபரு’க்கு போட்டி என்று சொல்லாமல் சொல்லி வந்திருக்கும் இத்திரைப்படம் அடுத்த இரண்டு பாகங்களுக்கு இப்போதே அடித்தளம் அமைத்திருக்கிறது. அந்த அளவுக்கு அழுத்தமான கதை முதல் பாகத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால் அன்புவின் எழுச்சி அடுத்தப் பாகத்தில் எப்படியிருக்கும் என்பதை பார்க்க இப்போதே ஆவலோடு இருக்கிறோம்.

‘பாகுபலி-2’ படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க எத்தனை, எத்தனை ஆர்வம் இருந்ததோ, அதே அளவு ஆர்வம் இத்திரைப்படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. இதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி..!

அடுத்து அன்புவின் எழுச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்..!

Our Score