full screen background image

“டூயட் காட்சிகளின்போது ஒளிப்பதிவாளரை காக்கா பிடிச்சு வைச்சுக்கணும்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் சுவையான அறிவுரை..!

“டூயட் காட்சிகளின்போது ஒளிப்பதிவாளரை காக்கா பிடிச்சு வைச்சுக்கணும்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் சுவையான அறிவுரை..!

விஜய் டி.வியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் சிறந்த பாடகராக ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்தப் பாடலை எழுதியவர் திரைப்பட இயக்குநர் செல்லத் தங்கையா.

அதற்கு பிறகு இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. இந்தப் பாடலை யூ டியூப்பில் இன்றுவரை 13  மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழு இப்போது ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறது. இந்தப் படத்தில் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் யோகிராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குநர் செல்லத் தங்கையாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – எழில் பூஜித், படத் தொகுப்பு – பன்னீர் செல்வம், கேசவன், கலை இயக்கம் – நித்தியானந்த், நடன இயக்கம் – சங்கர் R, சண்டை இயக்கம்  –   திரில்லர் முருகன், தயாரிப்பு நிர்வாகம் – சுப்ரமணியம், எழுத்து, பாடல்கள், இயக்கம் – செல்லத் தங்கையா.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதியன்று தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதிகள் இருவரையும் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக, அறிவித்தார்.

samuthirakani

நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, “செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாவதற்கு முன்பாக, அவர் பாடிய அம்மா பாடல் ஒன்றை யூ டியூபில் கேட்டேன். அந்த பாட்டு என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி, பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களையும் கேட்ட போது, ராஜலட்சுமி பாடிய அப்பா பாடல் ஒன்று, என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி.

உடனே, அவங்க போன் நம்பரை வாங்கி, இருவரிடமும் பேசினேன். அதில் இருந்து எங்களுக்கிடையிலான சகோதர உறவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நானே, அவர்கள் இருவரையும் என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அதற்குள் செந்தில் கணேஷ் ‘கரிமுகன்’ படத்தில் ஹீரோவாகிவிட்டார்.

நிச்சயமாக எனது படத்தில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் நடிப்பாங்க, அது என் அடுத்த படமான ‘கிட்னா’வாகவும் இருக்கலாம். இந்த ‘கரிமுகன்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” என்றார்.

amrish

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசுகையில், “செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய ‘சின்ன மச்சான்..’ பாடலை ‘சார்லி சாப்ளின்’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறோம். அந்த பாடல் ஏற்கனவே மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்பாடலை கெடுத்துவிடாமல் கையாள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அதேபோல் பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. பாடலாசிரியர் செல்லத் தங்கையாவின் வரிகளும் அதற்கும் முக்கியமான காரணம். இந்த ‘கரிமுகன்’ பாடல்களும் ரொம்ப நல்லா இருக்கு, அதுபோல் படமும் நிச்சயம் நல்லாவே இருக்கும் என்று நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

t.siva

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய ‘சின்ன மச்சான்..’ பாடலை ‘சார்லி சாப்ளின்’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்தது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 3 கோடி பேர் அந்த பாடலை பார்த்திருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் இந்த சினிமா துறையின் இன்னும் பல வெற்றிகளை பெறுவார்கள். ‘கரிமுகன்’ படத்தை நான் முழுவதுமாக பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருக்கு.

ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதோடு, ஒரு கமர்ஷியல் ஹீரோவிடம் என்ன எதிர்ப்பார்ப்போமோ அதை செந்தில் கணேஷ் செய்திருப்பதோடு, பல சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.

என்ன, கொஞ்சம் காத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவு செய்து படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருக்கலாம், என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் படத்தில் இல்லை. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

சமுத்திரக்கனி சொன்னது போலதான், ராஜலட்சுமி பாடிய அப்பா பாடலை கேட்ட பிறகு அவரை நான் மகளாகவே பார்க்க தொடங்கிவிட்டேன், இவர்கள் இந்த சினிமா துறையில் இன்னும் மேலும், மேலும் வளர என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்…” என்றார்.

senthil ganesh

படத்தின் நாயகனான செந்தில் கணேஷ் பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநரான செல்லத் தங்கையாதான் என்னுடைய 8 வயது முதல் என்னுடைய ஆசானாகத் திகழ்ந்து என்னை வழி நடத்தி வருகிறார். எனக்கு முகவரி கொடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும், இன்னும் அதிகமாகச் சென்றடைய உதவிய ’சார்லி சாப்ளின்-2’ படக் குழுவினருக்கும் எங்களது பெரிய நன்றி. எங்களது பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்…” என்றார்.

chella thangaiah

படத்தின் இயக்குநரான செல்லத் தங்கையா பேசும்போது, “இந்த ’கரிமுகன்’ படத்தின் மூலம் செந்தில் கணேஷுக்கு எப்படி தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கப் போகிறதோ அது போல், அவர் மூலமாக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இருளில் வாழ்கிற நாட்டுப்புறக் கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் உதவி செய்திருக்கும் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

Karimugan_Audio_Launch_Stills-018

இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ் பேசும்போது, “திரையில் தனது கணவரைப் பார்த்து மகிழ்ந்த ராஜலட்சுமியைப் பார்த்தபோது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவில் டூயட் காட்சிகளின்போது, ஒளிப்பதிவாளர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மையும் கொஞ்சம் பளிச்சென்று காட்டுவார்கள்.

சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் வாய்ப்புக் கேட்டு என் அலுவலக வாசலில் நின்றதாகச் சொன்னார்கள். அதே வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் என் அலுவலக வாசலில் காத்திருப்போர் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு வார்த்தை பேசியாவது அனுப்பி வைப்பேன்.

டக்குனு செட்டாகிட்டா பெண்ணும் சரி, சினிமாவும் சரி ருசிக்காது, கொஞ்சம் போராடித்தான் வெற்றியை ருசிக்க வேண்டும். இதேபோல் செல்லத் தஙகையாவும் ஜெயிக்க வேண்டும். செந்தில் கணேஷ் சினிமாவுலகத்தில் நன்றாக வர வேண்டும்..” என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் வசந்தபாலன் மற்றும் ’கரிமுகன்’ படக் குழுவினர் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

Our Score