full screen background image

வாத்தி – சினிமா விமர்சனம்

வாத்தி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ்  சார்பில்  தயாரிப்பாளர்கள் எஸ்.நாகவம்சி, சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் தனுஷ் நாயகனாகவும், சம்யுக்தா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சாய்குமார், தணிகல பரணி, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரிஸ் பெராடி, பிரவீணா, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திட்ட வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, படத் தொகுப்பு – நவீன் நூலி, ஒளிப்பதிவு – J.யுவராஜ், இசை – G.V.பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சி – வெங்கட், தயாரிப்பாளர்கள் – நாகவம்சி.S – சாய் சௌஜன்யா, எழுத்து – இயக்கம் – வெங்கி அட்லூரி, தயாரிப்பு நிறுவனம் ; சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ், வெளியீடு – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹ்மத்.

தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது.

1990-களின் இறுதியில்  ஐடி கம்பெனிகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாக ஆரம்பித்த சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்தின. சில பேர் இதை பயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள் என பயனடைய ஆரம்பித்து கல்வித் தந்தையாக உயர்ந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளின் கட்டணமும் மிகப் பெரிய அளவில் உயர்ந்தது.

கல்வி என்பது எப்போதும் மக்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயமாகவே இருக்கிறது. தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள்கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.

அதேசமயம் அரசு பள்ளிகளின் தரம் குறைய ஆரம்பித்தது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறமையில்லை என்பதால் அல்ல.. அவர்களுக்கான சரியான களமும், சூழலும் அரசுப் பள்ளிகளில் இல்லை என்பதுதான் முக்கியமான காரணம்.

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால் தற்போது அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளைகளைத் துவக்கி படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். கல்வியை அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கிவிட்டார்கள்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினார்கள் பள்ளி நிர்வாகத்தினர். ஆனால், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு பதிலாக முன்பைவிட அதிக அளவில் உயர்த்தினார்கள். பள்ளிப் பேருந்துகளை இயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களை வசூலித்தார்கள்.

இப்படிப்பட்ட கல்வி வியாபாரம்தான் இந்தப் படத்தின் மையக் கருத்து. கல்வி முறை மாற வேண்டுமா..? அல்லது பெற்றோர்கள் மாற வேண்டுமா..? என்பதைவிட வேறொரு மாற்று தீர்வை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இதன் கதை 1997-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலத்திலிருந்து 1998-ம் ஆண்டை திரும்பி பார்க்க வைக்கும்விதமாக படம் துவங்குகிறது.

தற்போது பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது புரியவில்லை. அந்த மாணவனின் படிப்பு செலவுக்காக குடும்பத்திற்கு ஆதாரமாக இருந்த வீடியோ கடையை விற்கிறார் அந்த மாணவனின் அப்பா.

அந்த மாணவன் தங்களது கடையில் உள்ள வீடியோக்களை அப்புறப்படுத்துகிறான். அப்போது கடையில் ஒரு ரகசிய இடத்தில் பத்திரமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வி.ஹெச்.எஸ். கேஸட்டுகளை கண்டெடுக்கிறான்.

அந்த வீடியோவை போட்டுப் பார்க்கும் பொழுது, அதில் ஒரு வீடியோவில் தனுஷ் கணக்குப் பாடம் நடத்துகிறார். கல்லூரியில் தனது ஆசிரியர் அன்றைக்கு சொன்ன அதே கணக்குப் பாடத்தை, இங்கே தனுஷ் வீடியோவில் சொல்லிக் கொடுக்கிறார். இது அந்த மாணவனுக்கு புரிய.. அவன் ஆச்சரியப்படுகிறான்.

அந்த வீடியோவின் நதிமூலம், ரிஷிமூலம் அறிய வேண்டி தனுஷைத் தேடத் துவங்குகிறார்கள் மாணவனும், அவனது நண்பர்களும். வாத்தியார் தனுஷின் ஒரு மாணவன் தற்போது காக்கிநாடா மாவட்ட கலெக்டராக இருப்பதை அறிந்து அவரை சந்திக்கின்றனர்.

அந்த கலெக்டர்தான் அந்த வீடியோவில் இருக்கும் தனது வாத்தியார் தனுஷின் மூலக் கதையைச் சொல்கிறார். இப்படித்தான் இந்தப் படமும் துவங்குகிறது.

1997-ல் பாலமுருகன்’ என்ற தனுஷ் திருப்பதி குரூப் பள்ளியில் செகண்ட் கிரேட் வாத்தியார். அந்தப் பள்ளியின் தாளாளரான ‘திருப்பதி’ என்ற சமுத்திரக்கனி ‘திருப்பதி’ என்ற பெயரிலேயே பல கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டு வருகிறார். மாநிலத்தின் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவரும் அவர்தான்.

அரசியல்வாதிகளைவிடவும் பெரும் புத்திசாலி. பள்ளி, கல்லூரிகள் மூலமாக எப்படி காசு பார்க்க முடியும் என்று தெரிந்த வித்தைக்காரர் சமுத்திரக்கனி.

இந்த நேரத்தில் தனியார் பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டே போக, அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்ந்து கொண்டே போவதாக பல புகார்கள் எழ, இதற்காக தனியார் பள்ளிகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடுகிறது.

இதைக் கேள்விப்பட்ட சமுத்திரக்கனி தான் முந்திக் கொண்டு அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். இதன்படி தனியார் பள்ளிகளில் இருக்கும் திறமையான ஆசிரியர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு ஆசிரியர்கள் தேவைப்படும் அரசுப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். இதன் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளைப் போல கல்வி பயில்வார்கள் என்று ஆசை காட்டுகிறார் கனி.

இதை அரசும் ஏற்றுக் கொண்டு இதற்கான அரசாணையைப் பிறப்பிக்கிறது. இதன்படி திருப்பதியின் பள்ளியில் வேலை பார்க்கும் தனுஷ் தமிழக, ஆந்திர எல்லையில் இருக்கும் சோழவரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு பாடம் கற்பிக்க வருகிறார்.

ஆனால், இவர் நினைப்பதற்கு மாறாக அந்தப் பள்ளியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துபோய் கிடக்கிறது. தனுஷ் மிகப் பொறுமையாக செயல்பட்டு ஊர்க்காரர்களின் அபிமானத்தைப் பெற்று மாணவர், மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்குப் புரிவதைப் போல பாடமெடுத்து 11-ம் வகுப்பு இறுதித் தேர்வில் அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்.

அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்திருப்பதால் தனக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த தனுஷூக்கு அதிர்ச்சி தருகிறார் கனி. தனுஷை உடனடியாக தன் பள்ளிக்கே திரும்பும்படி உத்தரவு போடுகிறார்.

கனியின் உண்மையான குணத்தைத் தெரிந்து கொண்ட தனுஷ் அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் அவருக்கு அந்த சோழவரம் பள்ளியைவிட்டு வெளியில் செல்ல விருப்பமில்லை. இன்னும் ஒரு வருடம் இருந்து பிளஸ் டூ தேர்வில் இவர்கள் அனைவரையும் பாஸாக்கியே தீருவது என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் இதை எதிர்க்கும் கனி தனுஷை அந்த ஊரில் இருந்து விரட்ட தன்னாலான அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறார். இவை அனைத்தையும் முறியடித்து தனுஷ் எப்படி மாணவர்களை பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கனக்கச்சிதமாக தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனுஷ், இந்த வாத்தியார் கதாப்பாத்திரத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறார். மிக சின்ன வயது தோரணையிலும், தோற்றத்திலும் இருப்பது மாணவர்களுடன் நெருங்குவதற்கு பொருத்தமானதாக இருந்தாலும் உலகத்துக்கே அட்வைஸ் செய்வதற்கும், காதலிப்பதற்கும் பொருத்தமில்லாமல் போனதுதான் வருத்தமான விஷயம்.

மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது.. பிள்ளைகளின் படிப்பு அவர்களது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்றதை பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்வது.. பள்ளிக்குள் இருக்கும் சாதி பிரிவினையை பார்த்து மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது, மாணவர்களின் நலனுக்காக ஊர்க்காரர்களுடன் சண்டையிடுவது, தன் உயிரைப் பணயம் வைத்து மாணவர்களை தேர்வுக்கு அழைத்துச் செல்வது என்று தன்னந்தனியாளாக படம் முழுவதையும் தானே சுமந்திருக்கிறார் தனுஷ்.

அதேபோல் சக ஆசிரியரான நாயகியுடன் ஏற்படும் காதலை கடைசிவரையிலும் நாகரிகமாக கொண்டு சென்றிருப்பது தனி சிறப்பம்சம். மேலும் இவர்களுக்கிடையேயான காதலுக்கான பாடல் காட்சியில்கூட கண்ணியத்தைக் கடைப்பிடித்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். மொத்தத்தில் தனுஷின் அசுர நடிப்புக்கு இந்த வாத்தியார் கதாப்பாத்திரம் முழுமையைத் தரவில்லை என்பதும் உண்மை.

உயிரியல் ஆசிரியையான நாயகி சம்யுக்தா வழமையான நாயகிபோல் தனுஷின் நல்ல குணத்தைப் பார்த்து காதலிக்கிறார். தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும்போது “காதலை மறந்துவிடு” என்று சொன்னதையும் மீறி தனுஷின் வீட்டுக்கே சூட்கேஸூடன் வந்து அமர்ந்து நியாயம் கேட்பதுவரையிலும் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

வில்லனாக சமுத்திரக்கனி. அளவோடு நடித்து தனது வில்லத்தனத்தைக் காண்பித்திருக்கிறார். ‘நீயெல்லாம் அரசியலுக்கெல்லாம் வந்திராதய்யா… எங்களை எல்லாம் காலி பண்ணிருவே.” என்று அமைச்சர் இளவரசுவே சொல்லும் அளவுக்கு கிரிமினல் மைண்ட் கேரக்டரை செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

“ஆசைப்பட்டது கிடைக்காத குழந்தை அன்னிக்கு மட்டும்தான் அழும். ஆனா, அந்தக் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்க முடியாத அப்பன் வாழ்நாள் முழுவதும் மனசுக்குள்ளேயே அழுதுக்கிட்டிருப்பான்” என்று உணர்ச்சிப்பூர்வமாக வசனம் பேசி தனுஷின் அப்பாவாக நடித்திருக்கிறார் ‘ஆடுகளம்’ நரேன். இந்த ஒரு காட்சிக்காகவே இனி வரும் காலங்களில் நிச்சயமாகப் பேசப்படுவார்.

கடைசி நிமிடத்தில் தனது மகளது நிலைமையை உணர்ந்த பின்பு மனம் மாறும் ஊர்ப் பஞ்சாயத்து தலைவரான சாய்குமார், கடைசி காட்சியில் வந்து தலை காட்டினாலும் பரபரப்பைக் கூட்டியிருக்கும் இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, துவக்கத்தில் தனுஷூடன் ஆசிரியர்களாக வந்து ரகளை செய்யும் ஷாரா, நரேன், தனுஷின் குடும்ப நண்பரான ஹரீஷ் பெராடி, வீடியோ கடையை நடத்தும் ‘மொட்டை’ ராஜேந்திரன் என்று பலரும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கேற்ப நடித்துள்ளனர்.

ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவில் ஒளியமைப்பு தேவையானபடிக்கு இருந்தாலும் அனைத்து இடங்களும் செட்டுகள் என்பது தெரியும் அளவுக்கு படம் பிடித்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் என்றாலும் வா வாத்தி’ பாடல் இந்தாண்டின் டாப் டென்னில் இடம் பிடித்திருக்கிறது. பின்னணி இசை இன்னொரு பக்கம் கதையோடு பயணித்திருக்கிறது. சண்டை காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அது சூப்பர் ஹீரோ படமாகக் காட்டுவதால் ‘அட்வைஸ் திலகம்’ பெயரை பின்னுக்குத் தள்ளுகிறது.

படத்தில் ஓரிடத்தில் கல்வியின் அவசியத்தை விளக்குவதற்காக ஒரு குட்டிக் கதையை சொல்லி அதை அப்துல் கலாமின் சாதனையோடு முடிச்சுப் போடும் காட்சி ருசிகரமானது. அதேபோல்  வகுப்பறைக்குள் சாதியைக் காட்டி நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு அது தவறு என்பதை உணர்த்துவதற்காக தனுஷ் நடத்தும் சின்ன மெலோ டிராமாவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

போலீஸால் தாக்கப்பட்டு ரோட்டில் வெயிலில் செருப்பு இல்லாமல் தனுஷ் நடந்து செல்வதைப் பார்த்து பதறும் ஒரு மாணவன் அடிபம்பில் தண்ணியடித்து அந்தத் தண்ணியில் தனுஷை நடக்க வைக்கும் காட்சி உணர்வுப்பூர்வமாய் இருக்கிறது.

ஆனாலும் சினிமா தியேட்டரில் படம் காட்டுவதைப் போல தனுஷ் பாடம் எடுப்பதெல்லாம் லாஜிக்காக ஏற்கவே முடியாத விஷயம். தினமும் சினிமாவுக்குப் போக அந்த ஊரில் விட்டிருப்பார்களா என்ன…? பல இடங்களில் பல முறை இது தெலுங்கு படம் என்பது போன்ற பீலிங்கை வர வைத்துள்ளது காட்சியமைப்புகள்.

இது போன்று இருக்கும் குறைகளையெல்லாம் சொன்னாலும், இந்தப் படம் தனுஷின் நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படம்தான்.

இன்றைய சமூகத்திற்குத் தேவையான கல்வி பற்றிய கதையை தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வகையில் இயக்குநர் கொடுத்திருக்கிறார்.

1990-களின் இறுதியில் இந்தியாவில் கல்வியில் தனியார்கள் எப்படி கொடி கட்டினார்கள்.. கல்வி எப்படி இந்தியாவில் மிகப் பெரிய வியாபரமாக மாறியது போன்றவைகளை இந்தப் படத்தில் மிக தெளிவாக விவரித்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. அதோடு கூடவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை எப்படி கொடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்வழியையும் காட்டியுள்ளார்.

பணம் இல்லாமல் தரமான கல்வி கிடைக்காது என்ற நிலைமை இருக்கும் இன்றைய சூழலில், ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக இந்தப் படம் சொல்லியிருப்பதால் இது நிச்சயமாக கருத்தியல் ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய படம்தான்..!

RATING : 3.5 / 5

Our Score