நடிகர் சிம்புவின் ‘வாலு’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.
தான் நடிக்கும் படமாகவே இருந்தும் பட ரிலீஸ் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கிறார் சிம்பு என்று அவரது ரசிகர்களே அவரை குற்றம் சொல்லும் அளவுக்கு மீடியாக்கள் எழுதிக் குவித்துவிட்டன.
இதையடுத்து தனக்கும் படத்தில் பொறுப்புண்டு என்பதைக் காட்டுவதுபோல ‘வாலு’ படம் அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் ரிலீஸ் என்பதை சிம்புவே இன்றைக்கு தனது ரசிகர்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
இது குறித்து அவர் சொல்லியிருக்கும் செய்தியில், “நடிகன் என்ற முறையில் ‘வாலு’ படத்தில் என்னுடைய பங்கு ஒரு அளவானதுதான். அதற்கு மேலும் நான் அதில் அக்கறை காட்டுகிறேன். ஆனால் உரிமை எடுக்க முடியாது..
படத்தின் விநியோகம் மற்றும் வெளியிடல் தொடர்பான வேலைகள் எனக்குத் தெரியாது. ஆனால் அதுதான் ஒவ்வொரு படத்துக்கும் முக்கியம். அந்தப் பணிகளில் தொய்வில்லாமல் இருந்தால்தான் படம் வெற்றியாகும்.
இப்போது தவிர்க்க முடியாத சில காரணங்களினால் ‘வாலு’ படம் டிசம்பரில் வெளியாகாது. கொஞ்சம் தள்ளிப் போய் அடுத்தாண்டு பிப்ரவரியில் கண்டிப்பாக ரிலீஸாகும். அதைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ படமும் கோடை விடுமுறை காலத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்பதை எனது ரசிகர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்த வருஷமாவது வருமான்னு பார்ப்போம்..!