full screen background image

வாய்தா – சினிமா விமர்சனம்

வாய்தா – சினிமா விமர்சனம்

வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்தத் தலைவருமான சி.மகேந்திரனின் மகனான புகழ் மகேந்திரன் இந்த வாய்தா’ படத்தின் மூலமாக ஹீரோவாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் ‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் ராணி ஜெயா, காக்கா முட்டை’ பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். 

இவர்களுடன் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அசுரன்’, ‘வட சென்னை’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்திலும் பணியாற்றியுள்ளார்.

அறிமுக இசையமைப்பாளரான சி.லோகேஷ்வரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சி.எஸ்.மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம், இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய டிரெண்ட்டான சாதி எதிர்ப்பு அலையில் இந்தப் படமும் பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி இந்த வாரத்தில் கடைசி நிமிடத்தில் தட்டுத் தடுமாறி கரை ஒதுங்கி வந்து நின்றிருக்கிறது.

எந்தச் சாதியாக இருந்தாலும் சாதிய எதிர்ப்பு என்பதற்குள் பொருளாதார உயர்வு, தாழ்வு என்னும் உட்பிரிவும் அடங்கியிருக்கிறது. சாதிய எதிர்ப்பையும் தாண்டி ஒரே சாதிக்குள் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வையும் புரிந்து கொண்டு தப்பித்துக் கொண்டவர்கள் புத்திசாலிகள். தப்பிக்க இயலாதவர்கள் இந்தப் படத்தின் நாயக குடும்பத்தைப் போல சீரழிகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் ஜாதிய கட்டுப்பாட்டில் வேரூன்றி இருக்கும் ஒரு கிராமம். இந்தக் கிராமத்தில் சாதிய ரீதியாக கடைக்கோடியில் இருக்கும் வண்ணார் ஜாதியைச் சேர்ந்த பெரியவர் அப்புசாமி’ என்னும் மு.ராமசாமி சாலை ஓரத்தில் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிறார்.

ஒரு நாள் காலையில் செல்போனில் பேசியபடியே பைக்கில் வரும் இளைஞன் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது பைக்கோடு மோதுகிறான். உடனேயே பயந்துபோய் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு ஓடி விடுகிறான்.

ராமசாமிக்கு கை, கால்களில் அடி. கையில் கட்டுப்போட்டு வீட்டில் படு்த்து விடுகிறார். அந்த பைக்கை ஓட்டி வந்தவன் யார் என்று தெரியாததால் அந்த பைக்கை எடு்தது தனது வீட்டின் உள்ளறையில் பூட்டி வைக்கிறான் ராமசாமியின் மகனான புகழ்.

ராமசாமியின் சாதியைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் அதே நேரம் பைக்கில் எதிரில் வந்திருக்கிறார். அவர் பைக்கில் மோதுவதைத் தவிர்ப்பதற்காகத்தான் அந்தப் பையன் ராமசாமி மீது மோதியிருக்கிறான். இப்போது அந்த பிரமுகர் ராமசாமிக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்கிறார்.

அந்தப் பையன் உள்ளூரை சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரின் மகன். இதனால் அவர்கள் வந்து வண்டியை கேட்கும்போது ராமசாமிக்கு உதவி செய்ய வந்த பிரமுகர் பணம் கேட்டு கெடுபிடி செய்ய வண்டியை கேட்காமலேயே சென்று விடுகிறார்கள்.

போன வேகத்தில் போலீஸ் ஸ்டேஷனில் தங்களது வண்டியை ராமசாமியின் குடும்பத்தினர் திருடிவிட்டதாக புகார் செய்கிறார் ஊராட்சித் தலைவர். இதனால் ராமசாமியின் வீட்டு்க்கு வரும் போலீஸார் ராமசாமியின் மகனை இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறது.

இதனால் பிரச்சினையும் பெரிதாகி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகிறது. இதன் பிறகான வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களும்தான் இந்தப் படம்.

படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் புகழுக்கு இது முதல் திரைப்படம். விசைத்தறித் தொழிலாளியாக வரும் இவரது இயல்பான நடிப்பு ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

காதலிக்கு நிஜ வாழ்க்கையை புரிய வைக்க அவர் படும் கஷ்டம் நமக்கு ஏற்புடையதாகியிருக்கிறது. அதே நேரம் அப்பாவுக்காக உதவி செய்யப் போய் கடைசியில் தன்னையும் அயர்னிங் கடையில் அமர வைக்கப் பார்க்கிறாரே என்கிற அவரது கோப நடிப்பும் உண்மையானது.

ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு எதிராக அவர் ஆவேசம் கொள்ளுமிடத்திலும் சிறந்த நடிப்பைக்  காண்பித்திருக்கிறார். அவர் பெயரைப் போலவே எதிர்காலத்திலும் இத்துறையில் புகழ் பெறுவார் என்று நம்பலாம்.

அவரது தந்தையாக, சலவைத் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் மு.இராமசாமி தனது பண்பட்ட நடிப்பினைக் காட்டியிருக்கிறார். ஏழை வண்ணான் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்டார். கை வலியோடு வீட்டுக்கு வந்த தலைவரிடம் அவர் பவ்யமாக பேசும் முறையிலேயே அந்த ஊரின் சாதிய அடக்கு முறை தெளிவாகத் தெரிகிறது.

வாய்தா..” “வாய்தா..” என்று தொடர்ச்சியாக வாய்தாவை போட்டு அவர் அலைக்கழிக்கப்படும் அந்தக் காலக்கட்டத்தில் அவர் காட்டும் பரிதாப நடிப்புதான் படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.

நாயகியாக ஜெசிகா பவுல் அழகால் கவர்ந்திழுத்து நடிப்பாலும் நம்மை ஈர்த்திருக்கிறார். நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா புகழ் பெறும் அளவுக்கு நடிப்பார் எனத் தெரிகிறது.

நீதிமன்றத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்து வாய்தாவுக்குத் தவறாமல் ஆஜராகி, கடைசியில் அனைத்தும் வீணாகிப் போய் கதறும் காது கேளாத, வாய் பேச முடியாத அந்தப் பாட்டியும் அவளது பேரனும் நம் கண்களைக் குளமாக்குகிறார்கள்.

கிளைமாக்ஸில் வரும் நாசர் தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். உட்கார்ந்து கொண்டே பேசுவதையும், “ஸார்” போட்டு பேசுவதையும் எதிர்க்கும் எதிர்க்கட்சி வழக்கறிஞருக்கு பதில் சொல்லும் ஸ்டைலும், நடிப்பும் அந்த நேரத்திலும் நம்மைக் கவர்கிறது.

கிராமப் பகுதிகள், ராமசாமியின் வீடு, விசைத்தறிக் கூடம், நீதிமன்றக் காட்சிகள் உட்பட எல்லாக் காட்சிகளையும் துளியும் அலங்காரம் இல்லாமல் இயல்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சேது முருகவேல் அங்காரகன். பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டியிருக்கலாம்.

சி.லோகேஷ்வரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பொருத்தமாக ஒலிக்கின்றன. ‘ஏனிந்த ஏனிந்த ஆனந்தம்’, ‘வாய்தா…வாய்தா’,  ‘பார்வை வண்ண நூலை’, ‘எளியோர் மனம்’ போன்ற எளிமையான பாடல் வரிகள் காதுகளில் நுழைவதைப் போன்ற இசையமைப்பும், பாடலிலேயே கதையை சொல்லியிருக்கும்விதமும் பாராட்டுக்குரியது.

ஊரில் இருக்கும் சலவைத் தொழிலாளி எவ்வளவு வயதானவராக இருந்தாலும், மற்ற சாதியைச் சேர்ந்த இளையவர்கள் அவரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதும், கிராம வழக்கம் என்ற பெயரில் அவர்களுக்குரிய கூலியை உடனடியாக கொடுக்காமல் அலைய விடுவதுமான சாதி அடுக்கில் புரையோடியிருக்கும் வன்மத்தை படத்தில் அழுத்தமாகப் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

கிராமங்களில் இப்போதும் நிலவி வரும் சாதியப் பாகுபாடுகள், அதே சாதியைத் தாண்டியும் சேர்ந்து கொள்ள வைக்கும் உள்ளூர் அரசியல், சில, பல வழக்கறிஞர்களின் ‘தொழில் நேர்மை’, வாய்தாக்களாலேயே ஏழை, எளிய மனிதர்களுக்குத் தாமதப்படுத்தப்படும் நீதி ஆகியவற்றைத்தான் ஒரு சேர பேச முயன்றுள்ளது இத்திரைப்படம்.

“ஒரு வழக்கின் தீர்ப்பு சரியான நேரத்திற்கு கிடைக்க வேண்டும். அப்படி தீர்ப்பு வர தாமதமானால் அது ஏற்புடையது அல்ல” என்பதை இந்தப் படத்தின் வாயிலாக கூறியுள்ளார்  இயக்குநர்.

நீதித் துறையில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என்று சிலரே நேர்மை தவறி நடந்து கொள்வதை வெளிப்படையாக சொல்லியதால்தான் இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இத்தனை எதிர்ப்புகள் வந்து குவிந்திருக்கின்றன. அதையும் தாண்டி இத்திரைப்படம் வெளியானதில் மகிழ்ச்சிதான்.

யாரும் சொல்லத் தயங்கிய நீதித் துறை பற்றிய விமர்சனத்தை துணிந்து பேசியதற்காகவே இப்படத்தின் இயக்குநர் மகிவர்மனை நாம் மனதாரப் பாராட்டலாம்.

இருந்தாலும் அப்புசாமியின் மகனான புகழுக்கும், ஆதிக்க சாதியை சேர்ந்த நாயகிக்கும் இடையிலான காதல் கதை, படத்திற்கு எந்த உதவியையும் செய்யாமல் போய் நேரத்தை வீணாக்கியிருக்கிறது.

இந்தக் குறைகளையும் தாண்டி, நீதிமன்றங்கள்வரையிலும் ஊடுறுவியிருக்கும் சாதிய மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வகையில், இந்த வாய்தா’ ஒரு துணிச்சலான படம்தான்.

இந்த வாய்தா’ ஏழைகளுக்கு கிட்டாத நீதியைச் சொல்கிறது..!

RATING :  3.5 / 5

Our Score