full screen background image

‘போத்தனூர் தபால் நிலையம்’ – சினிமா விமர்சனம்

‘போத்தனூர் தபால் நிலையம்’ – சினிமா விமர்சனம்

Passion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரவீன் இப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அஞ்சலி ராவ் நாயகியாக நடித்திருக்கிறார். 75-க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் கோயம்புத்தூரை சேர்ந்த  தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிகர்கள். பல கட்ட ஆடிசனுக்கு பிறகே, இந்த நடிகர்கள் இப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனராம்.

இயக்குநர் பிரவீன் VFX மற்றும் அனிமேஷன் துறையில் 13 வருட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘கோச்சடையான்’ படத்தில் டெக்னிகல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மூன்று பாகங்கள் கொண்ட இந்தப் படம் சஸ்பென்ஸ், க்ரைம், விசாரணை திரில்லராக உருவாகியுள்ளது.  இந்த படம் தற்போது ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் முதல்முறையாக, தபால் நிலைய பின்னணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும்.

இதன் முதல் பாகமான இந்தப் படம் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், போத்தனூர் தபால் நிலையத்தின் பின்னணியில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார் வெங்கட்ராமன். அவரது மகன் பிரவீன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர். அமெரிக்கா சென்று வேலை பார்த்தவர் சொந்த நாட்டில், சொந்த ஊரில் சுய தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். உள்ளூரிலேயே கம்ப்யூட்டர் தொழில் செய்ய வங்கிகளில் லோனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் பணத்தை தபால் நிலையங்களில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், போத்தனூர் தபால் நிலையத்தில் மக்களின் பணம், சேமிப்புக் கணக்கிற்காக வாங்கி வைக்கப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தினமும் பொதுமக்கள் கட்டும் பணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்திவிடுவார்கள். இதுதான் வழக்கம்.

ஆனால் ஒரு நாள் போத்தனூர் தபால் நிலையத்துக்கு வழக்கத்துக்கு மாறாக 7 லட்சம் ரூபாய் அளவுக்கான பணம் சேமிப்புக் கணக்கிற்காக கட்டப்பட்டுவிட்டது. இந்தப் பணத்தை அன்றைய தினமே வங்கியில் செலுத்த மறந்து விடுகிறார் போஸ்ட் ஆபீஸின் கேஷியர்.

அடுத்த 2 நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் பணத்தை அப்படியேவிட்டுவிட்டு சென்றால் அது பாதுகாப்பில்லையே என்று யோசித்த போஸ்ட் மாஸ்டர் வெங்கட்ராமன், அந்தப் பணத்தை கேஷியருக்கே தெரியாமல் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், வழியிலேயே அந்தப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும் வெங்கட்ராகவனுக்கு இந்தப் பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது. 2 நாட்களுக்குள்ளாக பணத்தைத் திருப்பி அதே லாக்கரில் வைத்துவிட்டால், போலீஸ், கைது, ஜெயில் என்ற பிரச்சினைகள் இருக்காது என்பதால் தந்தைக்கு உதவ  களத்தில் குதிக்கிறார் நாயகன் பிரவீன்.

அப்பாவிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யார் என்பதை தனது காதலி மற்றும் தனது நண்பனின் உதவியோடு விசாரிக்கத் துவங்குகிறார் நாயகன் பிரவீன். அந்தப் பணத்தைக் கண்டு பிடித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் புத்திசாலித்தனமான திரைக்கதை கொண்ட படத்தின் கதை.

டத்தின் இயக்குநரும், நடிகருமான பிரவீன் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை கேரக்டருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறார். ஆனால் நடிப்பில்தான் இன்னமும் நிறைய தேவைப்படுகிறது. நவரசங்களைக் காட்ட வேண்டிய இடங்களில் அவர் காட்டாத நடிப்பினால் அந்தக் காட்சிகள் கொஞ்சம் சோர்வைக் கூட்டுகின்றன.

இவருடைய அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ்தான் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற தோற்றமும், எதார்த்தமான, எளிமையான நடிப்பும் இவரது காட்சிகள் முழுவதையும் ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.

நாயகி அஞ்சலி ராவ் வழக்கமான ஹீரோயினைப் போன்றே தோன்றியிருக்கிறார். நடித்திருக்கிறார். ஒரு சண்டை காட்சியில் எதிர்பாராதவிதமாக நடித்து திகைக்க வைக்கிறார்.

காமெடியனாக நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட் சுந்தரின் சில வசனங்கள் சிரிப்பைக் கொடுக்கின்றன. ஆனாலும் இன்னமும் கூடுதலாக நடித்திருந்தால் அதிகமாவே சிரிப்பலை எழும்பியிருக்கும்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தபால் நிலைய ஊழியர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கேஷியராக நடித்தவரின் கல்லுளிமங்கன் நடிப்பு மிகச் சிறப்பு.

இந்த படத்தின் மிகப் பெரிய பிளஸ் படத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்கமும்தான். ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 1990-களின் காலக்கட்டத்தை அப்படியே அழகாக நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார்.

கேமராவின் புதிய கோணங்களின் மூலம் பழக்கமான சில இடங்களே நமக்கு வித்தியாசமாகத் தோன்றுகிறது. அதேபோல, இசையமைப்பாளர் டென்மாவின் இசை திரைக்கதை ஓட்டத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறது. படத்தின் பின்னணி இசையும், படத் தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

1990-களின் காலக்கட்டத்தில் திரைக்கதை நகர்வதால் அதற்கு ஏற்றார் போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார்கள். கலை இயக்குநர் குழுவும்,  படக் குழுவினரும்  மிகவும் கவனமுடன் நுணுக்கமான விவரங்களுடன், கடுமையாக உழைத்துள்ளனர்.

1990-களில் பயன்படுத்தப்பட்ட பேனாவில் இருந்து நியூஸ் பேப்பர், ரேடியா, பணம் என்று அப்போதைய காலக்கட்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியதன் மூலம் கலை இயக்குநரின் திறமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. போத்தனூர் தபால் நிலையம் பற்றிய விவரணை அந்தக் காலக்கட்டத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

வங்கி மேனேஜர் கை விரல் சூப்புவதை, நாயகன் வெளியில் சொல்வதால்தான் அவருக்கு லோன் மறுக்கப்படுகிறது என்ற காரணம் ஏற்கப்பட முடியாததாக உள்ளது. வேறு எதையாவது இயக்குநர் யோசித்திருக்கலாம். நகைச்சுவைக்காக இதை வைத்திருந்தாலும் இதில் காமெடியே வரவில்லை என்பதுதான் உண்மை.

கதைக் களத்துக்கும், காட்சியமைப்புகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர், காட்சிகளை நகர்த்துவதில்தான் சற்று தடுமாறியுள்ளார். சில இடங்களில் நாடக பாணியில், ஒரு குறும் படத்துக்கான உணர்வும் நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

திரைக்கதையில் இன்னும் கவனத்துடன் செயல்பட்டு இருந்தால் இது ஒரு குறிப்பிடத்தக்க திரில்லர் படமாக மாறியிருக்கும்.

நீதி, நேர்மை, நியாயம், தர்மம் என்று பேசிக் கொண்டிருக்கும் நாயகன் இறுதியில் எப்படி பாதை மாறுகிறான் என்பதை அதிர்ச்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இது தவறான பாதையல்லவா இயக்குநரே..? ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷயம் கலந்ததுபோலாகிவிட்டது நாயகனின் அந்த முடிவு..!

இதுவொரு வித்தியாசமான முயற்சி என்று பாராட்டினாலும், இன்றைய இளைய தலைமுறைக்கு தவறான பாதையைக் காட்டுகிறது என்பதால் கண்டிக்கக் கூடிய படமாகவும் அமைந்துவிட்டது.

அடுத்தடுத்த பாகங்களில் இந்தத் தவறு ஒப்புக் கொள்ளப்பட்டு சரி செய்யப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போத்தனூர் தபால் நிலையம் – ஸ்டாம்ப் ஒட்டப்படாத கடிதம்..!

RATING : 3.5 / 5

Our Score