இயக்குநர் பா.இரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலமாக தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
இதுவரையிலும் ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்கள் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த வரிசையில் ‘நீலம் புரொடெக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படமாக வெளிவந்துள்ளது இந்த ‘சேத்துமான்’ திரைப்படம்.
இந்தப் படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறு கறி’ எனும் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மாணிக்கம், மாஸ்டர் அஸ்வின், பிரசன்னா, குமார், சாவித்திரி, சுருளி, அண்ணாமலை, நாகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கரை, இயக்கம் – தமிழ், தயாரிப்பாளர் – பா.இரஞ்சித், கதை, வசனம் – பெருமாள் முருகன், ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, இசை – பிந்து மாலினி, படத் தொகுப்பு – C.S.பிரேம் குமார், ஒலி வடிவமைப்பு – அந்தோணி B.J.ரூபன், சண்டை பயிற்சி இயக்கம் – ‘ஸ்டன்னர்’ சாம், பாடல்கள் – யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல், கலை இயக்கம் – ஜெய்குமார், இணை இயக்குநர் – சதீஸ் சவுந்தர், துணை இயக்குநர் – யஷ்வந்த், ஒலிக்கலவை – பிரமோத் தாமஸ், நிர்வாகத் தயாரிப்பு – சஞ்சீவ் கணினி, வரை கலை – மாதவன், DI – iGene விளம்பர வடிவமைப்பு – தமோ நாகபூசணம், மக்கள் தொடர்பு – குணா தயாரிப்பு நிறுவனம் – NEELAM PRODUCTIONS,
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற ‘சேத்துமான்’ சிறந்த தயாரிப்புக்கான விருதையும் பெற்றுள்ளது.
புனே சர்வதேச திரைப்பட விழா, மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. சென்னை திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது.
இத்திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று சொல்லி சிலரை ஊரைவிட்டு ஒதுக்கி அத்துவானக் காட்டில் குடியமர்த்துகிறார்கள். அவர்களை தங்களது வீட்டுக்குள் வரவும் அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு மட்டும் குடிப்பதற்கு தனி டம்ளர்களையே ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கிறார்கள்.
இப்படி அந்த மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அதே தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்க்கும் பன்றி கறியை மட்டும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது என்ன வகையான மனித குணம் என்று தெரியவில்லை. இந்த குணமுள்ள மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.
‘சேத்துமான்’ என்பது பன்றியைக் குறிக்கும் சொல். சேற்றில் புரண்டு கிடக்கும் விலங்கு என்றாலும் அதன் கறி மனித உடலுக்கு நல்லது என்ற அபிப்ராயம் அனைத்து ஜாதிக்காரர்களுக்கும் இருப்பதாலும் அதற்கு ‘மான்’ என்றொரு புனைப் பெயரைச் சூட்டி ‘சேத்துமான்’ என்று அழைக்கிறார்களாம்.
இந்த ‘சேத்துமான்’ கறியை சாப்பிட வேண்டுமே என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எப்பேர்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் அதையும் சகித்துக் கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற அரசியலையும் இந்தப் படம் வெட்டவெளிச்சமாக்குகிறது.
கொங்கு மண்டலத்தில் நாமக்கல் அருகேயிருக்கும் கிராமம். ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்டோரும் வாழும் ஊர். அதே ஊரில் வசிக்கும் இரண்டு பங்காளி முறை கொண்ட ஆதிக்க சாதி பண்ணையாளர்களுக்குள் கடந்த சில வருடங்களாக பகிரங்கமாக மோதல் நடந்து வருகிறது.
அதே ஊரில் வசிக்கும் பூச்சியப்பன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். தனது மகன், மகளை சாதிய வெறியால் இழந்திருக்கிறார். தப்பிப் பிழைத்த தனது பேரனான குமரேசன் மீது உயிரையே வைத்திருக்கிறார். முதல் வகுப்பு படிக்கும் தனது பேரனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பூச்சியப்பன்.
பண்ணையார் வெள்ளையனுக்கு பன்றிக் கறி மீது ஒரு தனிப் பாசம். உடம்பு சூட்டைக் குறைக்க பன்றிக் கறி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று குறியாக இருக்கிறார். இதற்காக ஆட்களை கூட்டணி சேர்க்கிறார். ஒவ்வொருவரிடமும் பணத்தை கலெக்ட் செய்து பன்றிக் கறி விருந்துக்குத் தயாராகிறார் வெள்ளையன். பூச்சியப்பனின் உதவியோடு பன்றியை விலைக்கு வாங்கி விருந்து சாப்பிட தோட்டத்திற்கு அழைத்து வருகிறார் வெள்ளையன்.
அந்த விருந்தில் அழையா விருந்தாளியாக வெள்ளையனின் பரம எதிரி பங்காளியும் வந்து கலந்து கொள்ள வெள்ளையனுக்கு கோபம் வருகிறது. இவர்களின் இந்தத் தீராப் பகையினால் அந்த விருந்தில் ஏற்படும் விளைவுதான் இந்த ‘சேத்துமான்’ படத்தின் மீதமான கதை.
தாத்தா பூச்சியப்பனாக நடித்திருக்கும் மாணிக்கமும், பேரன் குமரேசனாக நடித்திருக்கும் அஸ்வினும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பூச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாணிக்கம், இந்தக் கால எதார்த்தவாத மனிதராக.. அனைவருக்கும் வளைந்து கொடுப்பவராகவும், அனைத்துவித அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் பக்குவமான மனிதராக மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
பேரனிடம் அவர் காட்டும் பாசமும், அன்பும் தனது ஒரேயொரு உறவினர் குடும்பத்தையும் பகைத்துக் கொள்ளும் அளவுக்குப் போகிறது. வெள்ளையனின் மனைவி குத்தீட்டியாய் சாதி வெறி கொண்டு தன்னை அவமானப்படுத்தும்போதும் அதைக் கண்டு கொள்ளாதவராக இருந்து அவரிடமே முடைக் கூடையை பேரம் பேசி விற்று வருகிறார் பூச்சியப்பன்.
வாத்தியாரிடம் காலில் விழுகாத குறையாக தனது பேரனை நன்கு படிக்க வையுங்கள் என்று கெஞ்சுகிறார். வெள்ளையன் ஊசியாய் குத்திப் பேசும்போதும் தனது பேரனின் நல்வாழ்வுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். இறுதியில் பங்காளிகளின் சண்டையை விலக்கப் போய் அவரே குத்துப்பட்டு சரிகிறார். இதுவரையிலும் அந்தக் கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார் மாணிக்கம். வாழ்த்துகள்.
இவருடைய ஜாதியில் பிறந்த ரங்கன் அதே ஊரில் பன்றிகளை மேய்த்து விற்பனை செய்பவராக நடித்திருக்கிறார். இந்தக் கால இளைஞராக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அவமானங்களைத் தாங்குவது.. திருப்பியடிப்போம் என்று குரலை ஓங்கும் ஒரு வாலிபராக.. கோபக்கார இளைஞராக தன் முழு நடிப்பையும் காண்பித்திருக்கிறார் இந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் நடிகரான குமார்.
டீக்கடையில் ‘கப்’பில் டீ கொடுக்கும்போது அதற்காக சண்டையிடும்போதும், ஆசிரியரிடம், “சாமிகிட்ட வரம் கேக்குற மாதிரி கேக்குறேன் ஐயா…” என்று பூச்சியப்பன் கை கூப்பி சொல்லும்போது, ”அவரே பகுதி நேர ஆசிரியர். இந்த வேலையே அவருக்கு நிரந்தமா கிடைக்குமா”ன்னு தெரியல.. அவர்கிட்ட போய் கெஞ்சிக்கிட்டிருக்க..?” என்று தைரியமாக பேசும்போதும், பன்றி கேட்க வரும் பண்ணையாரிடம் பதிலுக்குப் பதில் பேசி “வேணும்ன்னா வாங்கிக்குங்க.. இல்லைன்னா கிளம்புங்க…” என்று உறுதியாய் சொல்லி அனுப்பிவிட்டு ”நமக்குன்னு ஒரு சுய தொழில் இருந்தா யார்கிட்டேயும் நாம அடிமையா இருக்கத் தேவையில்ல” என்று பூச்சியப்பனிடம் சொல்லும் குமாரின் கதாப்பாத்திரம்தான் இன்றைய தமிழகத்திற்கு அவசியம் தேவை.
குமார் இப்படி அட்வைஸ் செய்தாலும் பூச்சியப்பன் ஒரு காட்சியில் ’அவங்க குடிச்ச க்ளாஸுல நான் எப்படிக் குடிக்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என்று ஸ்கட் ஏவுகணையாக சொல்வார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இந்தக் காட்சியில் கை தட்டல்களால் தியேட்டரே அதிர்ந்து போயிருக்கும்.
பேரன் குமரேசனாக நடித்திருக்கும் அஸ்வின் தனது முதல் காட்சியிலேயே மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கேள்வியை கேட்கிறான். “எல்லாரும் ஊருக்குள்ள குடியிருக்காங்க. நாம மட்டும் ஏன் தாத்தா இவ்ளோ தூரம் தள்ளி குடியிருக்கோம்?” என்று குமரசேன் கேட்கும் கேள்வி இன்றைக்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான்.
பூச்சியப்பன் பேரனை ஏமாற்றுவதற்காக எழுந்திருக்காமல் இருக்க… அந்த நேரத்தில் தாத்தாவுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்ற அஸ்வின் அவரது மார்பில் காதை வைத்து இதயத் துடிப்பை சோதிக்கும் காட்சியிலும், தாத்தாவைவிட்டு வேறு யாரிடமும் செல்லாமல் கட்டியணத்துக் கொள்ளும் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுகிறான்.
சிறுவனுக்கே உண்டான அவனது சின்ன சின்ன சேட்டைகளும் நம்மை ரசிக்க வைக்கின்றன. ”கறித் துண்டு குறையுதுன்னு உன் ஆட்டுக் குட்டியை அடிச்சிற போறாங்க” என்று வாத்தியார் ச்சும்மா தமாஷூக்கு சொன்னவுடன் அடுத்த கணமே ஓடிப் போய் தன் ஆட்டுக் குட்டியை கட்டியணைக்கும்போது நம்மையும் சிரிக்க வைக்கிறான் அஸ்வின்.
இதேபோல் கறி விருந்தில் கலந்து கொள்ளும் அவனது பள்ளி ஆசிரியர், குமரேசனிடம் “நான் இங்க வந்திருக்கிறதை யார்கிட்டேயும் சொல்லாத. நான் உனக்கு ஃபர்ஸ்ட் மார்க் போடுறேன்” என்று சொல்லும்போது, “நான் இப்பவே எல்லா பாடத்திலேயும் ஃபர்ஸ்ட் மார்க்தான் வாங்கிக்கிட்டிருக்கேன் ஸார்..” என்று அஸ்வின் திருப்பிச் சொல்லும்போது நமக்குள் எழும் குபீர் சிரிப்பினால் கை தட்டாமல் இருக்க முடியவில்லை.
வெள்ளையனாக நடித்துள்ள பிரசன்னா தனது பொறுமைசாலி கணவன் கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். மனைவியின் கடுமையான திட்டல்கள், பொங்கல்களை கண்டும் காணாததுபோல் சகித்துக் கொண்டு போகும் அவருடைய முக வெளிப்பாடுகள் அபாரம்.
சேத்துமான் கறி பற்றி தனது நண்பர்களுக்கு அவர் சொல்லும் விஷயங்கள்.. பன்றி வாங்க வந்து குமாரைத் திட்டுவதும், பதிலுக்கு குமாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வதும்.. தனது குரோத பங்காளியிடம் வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசியபடியே கொஞ்சம், கொஞ்சமாக திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருப்பதும் வெள்ளையன்தான்.
இவருடைய மனைவியாக நடித்திருக்கும் சாவித்திரியும் இன்னொரு பக்கம் அசர வைக்கிறார். நாமக்கல் வட்டார மொழியில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும்.. “நான் மட்டும் புருஷனா இருந்திருந்தால்..?” என்று படம் பார்க்கும் ஆண்களையே கோபப்பட வைத்துள்ளது. வெள்ளையனின் பங்காளியாக நடித்தவரும், கட்டப் பஞ்சாயத்து செய்யும் தலைவரும்கூட நடிப்பில் நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவில் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் உடன் ஒரு கதாபாத்திரமாகவே கேமிரா இருந்து வந்திருக்கிறது.
பன்றிகளின் கூடாரத்தை இரவு நேரத்தில் காட்டும் அந்த சிங்கிள் ஷாட் இன்னமும் நம் மனதைவிட்டு அகலவில்லை. இறுதிக் காட்சியில் நடக்கும் சண்டையை படமாக்கியவிதத்திற்கே இந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.
இதேபோல் சண்டை பயிற்சி இயக்குநரான ‘ஸ்டன்னர்’ சாமுக்கும் ஒரு சல்யூட். சாதாரணமான சண்டை காட்சியாக இல்லாமல் மிக, மிக யதார்த்தமாக இந்த சண்டை காட்சியை வடிவமைத்திருக்கும் அவருக்கு நமது பாராட்டுக்கள்.
பிந்து மாலினியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அடித்து அதகளம் செய்யாமல் அமைதியாக படம் நெடுகிலும் ஒரு மெல்லிய பூங்காற்றை தூவிவிட்டிருக்கிறார் இசையமைப்பாளர்.
தனது முதல் படத்திலேயே இது போன்ற சர்ச்சைக்குரிய, ஜாதிய அம்சம் கொண்ட கதைக் களத்தை தேர்ந்தெடுத்த இயக்குநர் தமிழுக்கு நமது பாராட்டுக்கள்.
எழுத்தாளரின் சிறுகதையை கொஞ்சமும் சிதைக்காமல் அதன் உண்மைத் தன்மையோடு பரபரப்பான திரைக்கதையாக்கி பார்வையாளர்களிடம் அப்படியே அந்த உணர்வை கடத்தியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.
‘சேத்துமான்’ கறியைப் பங்கு போட பங்காளிகள் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் செம சுவாரஸ்யம். அதுவும், கறி வெந்து கொண்டிருக்கும்போதே பங்காளி சுப்பிரமணி எடுத்து டேஸ்ட் செய்து, ’இன்னும் வேகணும்’ என்று சொல்லும்போதும் வெள்ளையனிடம் கேட்காமலேயே, எக்ஸ்ட்ரா கறியை எடுத்து சாப்பிட்டுவிட்டு சண்டை போடுவதும் அந்த ‘சேத்துமான்’ கறியின் மீதான ஆவலை பார்வையாளர்களிடமும் கடத்தி விட்டார் இயக்குநர் தமிழ்.
இதற்குப் பெரிதும் துணை நின்றிருப்பது வசனங்கள்தான். ஆண்டாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாதிய வெறியையும், அடக்கு முறைக்கான வழிகளையும் வசனங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வசனங்களைக்கூட கொங்கு வட்டார பாஷையில் கேட்டதில் பார்வையாளனுக்கு கூடுதல் திரில் கிடைத்திருக்கிறது.
மாநிலத்தின் பல உள்ளடங்கிய பகுதிகளில் மாணவர்கள் அதிகம் வராத காரணத்தாலும், ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தினாலும் துவக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூடிவிட்டு ஒருங்கிணைந்த பள்ளிகளைக் கொண்டு வர நினைக்கும் தற்போதைய மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை இந்தப் படம் நியாயமான முறையில் விமர்சித்திருக்கிறது.
இப்போது ஊருக்குள் மற்றும் ஊருக்கு அருகிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளை மூடிவிட்டு, தூரத்தில் கொண்டுபோய் அமைத்தால் இந்த பூச்சியப்பனைப் போன்ற எளிய மனிதர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்க என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது இத்திரைப்படம்.
எந்த சாதிக்காரர்களை தொட்டால் தீட்டு என்று சொல்லி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கிறார்களோ.. அதே மனிதர்கள் வளர்த்தெடுக்கும் ‘சேத்துமானின்’ கறிக்காக சாதியை மறந்து, குடும்பப் பகையை மறந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுபவர்கள், சமைத்துக் கொடுப்பவர்களை மட்டும் ஏன் சாதிய கண்ணோட்டத்துடன் பிரித்துப் பார்க்க வேண்டும்..?
சாக்கடைக்குள் உழலும் ‘சேத்துமானின்’ கறி மட்டும் வேண்டும். அதை வளர்க்கிற மனிதர்கள் வேண்டாம் என்கிற முட்டாள் புத்தியில் ஆதிக்க சாதி மக்கள் வாழ்வது ஏன்..? என்பது போன்ற கேள்விகளை எழுப்பிய இத்திரைப்படம் கிளைமாக்ஸில் பூச்சியப்பனின் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததுபோல், குமரேசனின் நிலைமையை எண்ணி நம்மையும் கண் கலங்க வைத்திருக்கிறது.
தொடர்ந்து தனது வித்தியாசமான கலைப் படைப்புகள் மூலம் ஆண்டாண்டு காலமாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் ஆண்டான்-அடிமையாகப் பிணைக்கப்பட்டிருக்கும் சாதிய அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து கொண்டே வருகிறார் பா.ரஞ்சித்.
நாடு முழுவதும் சமீபமாக நடைபெற்று வரும் இறைச்சி அரசியல் குறித்த பார்வையை மக்களுக்கு தெளிவுபடுத்த, வியாபார நோக்கமின்றி இந்தப் படத்தைத் தயாரித்த பா.ரஞ்சித்தை நாம் வாயால் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. இது போன்ற படங்களை இயக்கவும், தயாரிக்கவும் நம் தமிழ்ச் சமூகம் அவரை பெரிதும் ஊக்கப்படுத்த வேண்டும்.
RATING : 4.5 / 5