ட்ரூ சோல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரூபேஷ்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் ராகவ், லுதியா, திவ்யன், ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த் மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.
இசை – இளங்கோ கலைவாணன், ஒளிப்பதிவு – அணில் கே.சாமி, படத் தொகுப்பு -வி.டி.ஹீஜித், பாடல்கள் – முத்து விஜயன், குகை.மா.புகழேந்தி, கலை இயக்கம் -முத்துவேல், சண்டை இயக்கம் – ‘மிரட்டல்’ செல்வம், நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – விஜய முரளி, கிளாமர் சத்யா, எழுத்து, இயக்கம் – டாவின்சி சரவணன்.
5 காதல் ஜோடிகள். பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். வேலை பார்த்துக் கொண்டே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விடுமுறை தினத்தைக் கொண்டாட பைக்கில் கிளம்புகிறார்கள்.
பெங்களூர் அருகேயிருக்கும் சைலண்ட் வேலி என்னும் இடத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். இந்த ஜோடிகளில் ஒன்றுதான் ராகவ்-லுதியா ஜோடி.
இதில் லுதியா புதிதாக ஒரு செல்போன் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பார்க்கிறார். அதில் யாராவது ஒருவர் தனது பிறந்த தேதியை பதிவிட்டால், அவரது இறந்த தேதியை அந்த அப்ளிகேஷன் சொல்லும்.
சரி.. செய்துதான் பார்ப்போமா என்ற இள வயதுக்கேற்ற துடிப்புடன் 10 பேரும் தங்களது பிறந்த நாளை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்கிறார்கள்.
அதிசயத்திலும், அதியசமாக அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் மரணம் நிகழும் என்று செய்தி வருகிறது. முதலில் சிரிக்கிறார்கள். ஆனால், அந்த மரணம் இன்றைக்கே என்பதும் அதில் வர சற்று கலங்குகிறாள் லுதியா.
இவர்கள் செல்லும் வழியில் ஒரு லாரிக்காரன் இவர்களுக்கு வழி கொடுக்காமலேயே வந்து கொண்டிருக்க.. அந்த லாரியை பலவாறாக துரத்திப் பிடித்து ஓவர்டேக் செய்துதான் வந்திருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் பயணத்தைத் தொடங்கும்போது அதே லாரி இவர்களைக் கொலை வெறியோடு துரத்துகிறது. அதற்குள் இருட்டிவிட.. இதற்கு மேல் அந்த லாரியிடம் மாட்டிக் கொள்வது நல்லதல்ல என்பதால் அருகில் இருந்த ‘டெம்ப்பிள் ட்ரீ’ என்னும் ரிசார்ட் ஹோட்டலில் தங்குகிறார்கள்.
அந்த இரவிலேயே அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்கின்றன. யார் செய்கிறார்கள் என்பதையே கண்டறிய முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. அந்த ரிசார்ட்டைவிட்டு அவர்களால் வெளியேறவும் முடியவில்லை. போனிலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மரணத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
முடிவை பிக்ஸ் செய்துவிட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். இந்தக் கதைக்கு கடைசிவரைக்கும் உட்கார வைக்கும்படியான திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். நன்று.
நடிப்பென்று பார்த்தால் ராகவ்வுக்கு மட்டுமே காட்சிக்குக் காட்சி நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவர்தான் ஹீரோ. தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். பல காட்சிகளின் கோணங்களும், கேமிராவின் பார்வைகளும் தவறாக இருப்பதால் பல நடிகர், நடிகைகளின் நடிப்பு தெளிவாகப் பதிவாகவில்லை. ஆனால் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதில் பொய்யில்லை.
திரைக்கதையில் அடுத்தது என்ன என்று பதைபதைக்க வைக்கும்படியான காட்சிகள் இல்லை என்பது படத்தின் மைனஸ். 10 பேரும் இன்றைக்கே மரணமடைவார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட்டதால் எந்த சஸ்பென்ஸும் எடுபடாமல் அடுத்தக் கொலை யாராக இருக்கும் என்பதாக மட்டுமே பார்வையாளர்களின் கவனம் சென்றது திரைக்கதையின் பலவீனம்தான்.
அணில் கே.சாமியின் ஒளிப்பதிவின் தரம் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான பங்களிப்புடன் சுமாரான ஒளிப்பதிவை மட்டுமே அது கொடுத்திருக்கிறது. இதுவும் படத்தில் ஒரு குறைதான்.
இளங்கோ கலைவாணனின் பின்னணி இசை இதை கொஞ்சம் ஈடு கட்டியிருக்கிறது. பாடல்கள் அத்தனை ஈர்க்கவில்லை என்றாலும் பாடல் வரிகள் புரிவதைப் போல இருப்பது காதுகளுக்கு நிம்மதியாக இருந்தது.
படத் தொகுப்பாளரான வி.டி.ஹீஜித் தன்னுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். முதலில் பைக்-லாரி சேஸிங் காட்சிகளை கொஞ்சமும் சிதறல் இல்லாமல் ஒட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் தவறினாலும் விபத்தாகிவிடுமோ என்று நாமே பதற்றப்படும் அளவுக்கான காட்சிகளை அந்தத் துரத்தல் காட்சிகளில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கும் எமது பாராட்டுக்கள்.
ரிசார்ட்டுக்குள் நடக்கும் கொலைகள்.. பதட்டம், சஸ்பென்ஸ், திரில்லர் இவைகளையும் கச்சிதமாக நறுக்கியளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். இதனாலேயே இரண்டாம் பாதியில் படத்துடன் கொஞ்சம் ஒன்றிப் போக முடிந்திருக்கிறது.
இந்த 2021-ம் ஆண்டிற்கேற்றபடியான லாஜிக் எல்லை மீறல்கள் இல்லாமல் படத்தை உருவாக்கியிருந்தால் நிஜமாகவே படத்தை மென்மேலும் பாராட்டியிருக்கலாம்.
இயக்குநர் உருவாக்கிய கதைக்காக ரிசார்ட்டில் அந்த நேரத்தில் யாரும் தங்கியிருக்கவில்லை.. உரிமையாளர்கூட இல்லை. அந்த ரிசார்ட்டை சுற்றி மின் கம்பி வேலி போட்டதால் வெறியேற முடியவில்லை என்றெல்லாம் சொல்வதற்கு முன்பு அந்த கேட்டை இரும்பு கேட்டாக மாற்றியிருக்கலாம். மரத்தால் ஆன கேட்டை போட்டுவிட்டு அதற்கு மேல் கம்பி வலை பொருத்தி மின்சாரம் பாய்ச்சுவதாகச் சொன்னால் எப்படிங்கோ இயக்குநரே..?
அதேபோல் செல்போன்கள் வேலை செய்யவில்லை. காவல்துறையை அழைக்க முடியவில்லை. ஒரு கொலை நடந்து முடிந்தவுடனேயே அனைவரையும் தப்பிக்க வைக்க முயல எந்த முயற்சியும் செய்யாமல் அனைத்துக் கொலைகளுக்கும் பின்னாடியே போய் அழுது புலம்பும் கேரக்டராகவே ராகவ்வின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்துவிட்டதால் அவர் மீது பரிதாபமே வரவில்லை.
இறுதியில் அவருக்கான நீதி வழங்கப்படுவதில் தவறில்லைதான். ஆனால் சொல்லியவிதம்தான் தவறாக இருக்கிறது.
இப்படி செய்யப்படும் அனைத்து படுகொலைகளுக்கும், அதே படுகொலைதான் நியாயம் என்று சொல்வதை பொது புத்தியை வைத்து எப்படி ஏற்றுக் கொள்வது..!?
இது ஒரு நடந்த கதையாக சித்தரித்திருந்தால்கூட ஓகேதான். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பத்து பேரை படுகொலைகள் செய்வதை காட்டிவிட்டு, அதை நியாயப்படுத்தும்விதத்தில் டைட்டிங் கார்டெல்லாம் போடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை இயக்குநரே..! இப்படியே அவர்கள் தப்பித்துப் போக முடியுமா என்ன..?
தவறான கருத்தைச் சொல்லிவிட்டார்கள் என்கிற வருத்தமும் மிஞ்சுகிறது..!