‘ஆல் ஆன் ஆல் அழகுராஜா’, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ – காமெடி உருவானது எப்படி..?

‘ஆல் ஆன் ஆல் அழகுராஜா’, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ – காமெடி உருவானது எப்படி..?

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இருக்கும் சில திரைப்படங்களில் ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் ஒன்று.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜயகாந்த், ரேவதி, ராதாரவி, கோகிலா, கவுண்டமணி, செந்தில்,கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றைக்கும் யுடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பெட்ரோமாக்ஸ் லைட்’ போன்றவைகள் எப்படி உருவாகின என்பது பற்றி இந்தப் படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் அனு மோகன் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அனு மோகன் தனது பேட்டியில், “இந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் முதலிலேயே விஜயகாந்த்துதான் இதில் நடிக்க வேண்டும் என்பதில் என் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் உறுதியாக இருந்தார்.

படத்தில் நகைச்சுவைக் காட்சிகளை வடிவமைக்கும்போது “மக்கள் பெரும்பாலும் அரசியல் பேசுவதும், ஊர்க் கதைகள் பேசுவதும், டீக் கடை, சலூன் கடை மற்றும் சைக்கிள் கடைகளில்தான் என்பதால் நாம இந்தப் படத்துல சைக்கிள் கடை வைப்போம்”ன்னு இயக்குநர் சொன்னார். அதனால்தான் சைக்கிள் கடை செட்டப் உருவானது.

இயக்குநர் கே.பாக்யராஜிடம் நாங்கள் வேலை பார்த்தபோது அப்போது அவரிடம் ‘அழகுராஜ்’ என்ற உதவி இயக்குநர் வேலை பார்த்து வந்தார். அவர் சினிமாவையே கரைத்துக் குடித்ததுபோல பேசுவார். அதனால் அவரை நாங்கள் அப்போதே ‘ஆல் இன் ஆல் அழகுராஜ்’ என்று கிண்டல் செய்வோம். அந்தப் பெயரைத்தான் இப்போது கவுண்டமணிக்கு வைத்தோம்.

எங்களிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திலீப்குமார், தன்னுடைய ஊரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர். தனது வாழ்க்கைக் கதையை அவர் ஒரு நாள் எங்களிடம் சொன்னார். “எங்க சைக்கிள் கடையில் பெட்ரோமாக்ஸ் லைட்டுகளையும் வாடகைக்கு விடுவோம். அப்படியொரு நாள் பெட்ரோமாக்ஸ் லைட்டை துடைச்சு சுத்தம் செய்யும்போது நான் தெரியாத்தனமா அந்த குமிழை அமுக்கி உடைச்சிட்டேன். எங்கப்பா என்னை விரட்டி, விரட்டி அடிச்சாரு”ன்னு ச்சும்மா சாதாரணமா சொன்னார்.

இதைக் கேட்டவுடனேயே ஆர்.சுந்தர்ராஜன் ஸார், “இதையே ஒரு சீனா வைக்கணும்ய்யா”ன்னு சொல்லி உடனே ஐந்து நிமிடங்களில் இதைக் எழுதிக் கொடுத்திட்டார். அதைத்தான் அப்படியே படமாக்கினோம். அது இன்னிக்குவரைக்கும் பேசப்படுது.

இந்தப் படம் வெளியானது 1984-ம் வருடம் தீபாவளி தினமான அக்டோபர் 23-ம் தேதியன்று. அன்றைக்குத்தான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படமும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படமும் வெளியானது. அதோடு, அன்றைக்கு மொத்தம் 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின.

பட வரிசைப் பட்டியலில் ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் அன்றைக்குக் காலையில் முதல் ஷோவின்போது 11-வது இடத்தில் இருந்தது. இரண்டாவது ஷோவின் முடிவில் 7-வது இடத்துக்கு வந்தது. மாலை நேரக் காட்சி முடிந்தவுடன் 5-வது இடத்துக்கு வந்தது. செகண்ட் ஷோ முடிஞ்சதும் முதலிடத்திற்கு வந்து அந்தத் தீபாவளியைக் கொண்டாடியது எங்க ‘வைதேகி காத்திருந்தாள்’ படம்தான்..” என்று உற்சாகத்துடன் கூறினார் இயக்குநர் அனு மோகன்.