full screen background image

ஒரு குடும்பமே சேர்ந்து தயாரித்திருக்கும் ‘உதிர்’ திரைப்படம்

ஒரு குடும்பமே சேர்ந்து தயாரித்திருக்கும் ‘உதிர்’ திரைப்படம்

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’.

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…” உள்ளிட்ட பல புகழ் பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “இந்த ‘உதிர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா, என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

முதலில் நான் என் படங்களில் பாடல்கள் எழுத யோசித்தேன். வேறு ஒரு பாடலாசிரியர் மூலம்தான் பாடல் எழுத முயற்சித்தோம். ஆனால், எனக்கு திருப்தியளிக்காததால் ஒரு கட்டத்தில், எனது வரிகளே நன்றாக இருப்பதாக இசையமைப்பாளர் தினா கூறிவிட்டார். அப்படித்தான் நான் பாடலாசிரியரானேன்.

நான் பாடல் எழுத முதல் காரணம், தளபதி விஜய், இரண்டாவது காரணம் இசையமைப்பாளர் தினா. நான் கூட இயக்குநர், பாடலாசிரியர் மட்டும்தான். ஆனால், ஞான ஆரோக்கிய ராஜா, தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதனால், அவர் என்னைவிட ஒரு படி தாண்டிவிட்டார்.

‘உதிர்’ படத்தின் மூலம் அவர் மிகப் பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து வெற்றிகரமான இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பயணிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், “இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா இந்த படத்திற்காக அவர் அனுபவித்த வலிகள் பற்றி அவரின் குடும்பத்தார் சொல்லியபோது, அவைகள் என் கண் முன் நின்றன.

ஒரு குடும்பமே இந்தப் படம் உருவாக காரணமாக இருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து இப்படி படம் தயாரிப்பாளர்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து படம் தயாரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

படத்திற்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம் புகழ் பெற்ற பல ஆன்மீக பாடல்களை கொடுத்திருக்கிறார். அவர் சினிமாவுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவருடைய ஆன்மீக பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலம். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால், இந்த அரங்கில் அவர் உட்கார்ந்திருப்பது போல எனக்கு தெரிகிறது. படத்தின் மற்றொரு இசையமைப்பாளர் ஈஸ்வர் ஆனந்த், அவரும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும்.

இயக்குநர்கள் பாடல்கள் எழுதும்போது, அந்த பாடல்கள் சிறப்பாக வரும், என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. அதற்கு உதாரணம், பேரரசு சார். அந்த வகையில், இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா சிறப்பாக எழுதியிருக்கிறார். படமும் சிறப்பாக வந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் உரையாற்றிய பிறகு இசையின் குறுந் தகடு வெளியிடப்பட்டது.

Our Score