‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்துள்ள படம் ‘உரு’.
’எய்தவன்’ படத்திற்கு பிறகு ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் இது. கலையரசனுக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும், மைம் கோபி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ளார். பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாய் லோகேஷ் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித்தும், டீசரை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், டிரையிலரை படக் குழுவினரும் வெளியிட்டார்கள்.
இந்த போஸ்டர், டீசர், டிரையிலர் மூன்றுமே ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக் குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
விழாவில் இயக்குநர் விக்கி ஆனந்த் படம் குறித்து பேசும்போது, “இந்த ‘உரு’ திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இது, பேய் படங்கள் அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு, ‘உரு’வம் தெரியாத ஒரு மனிதனை பற்றிய இந்த படம் மிகவும் புதியதாக இருக்கும்..!
‘உருவம்’ என்பதன் சுருக்கம்தான் ‘உரு’. இதற்கு ‘பயம்’ என்ற அர்த்தமும் உண்டு. முழுக்க, முழுக்க பயத்தை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் இந்தத் தலைப்பை தேர்வு செய்தேன்.
ரசிகர்களை பயமுறுத்துவதற்காகவே இப்படியொரு தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பயமுறுத்தல்கள் உண்டு. ஆனால் பேய் இல்லை. காட்சிகள் மூலமாகவே பயமுறுத்தியிருக்கிறோம்.
ஒரு எழுத்தாளன் தனக்கு மார்க்கெட் குறையும்போது தனது வழக்கமான பாணியில் இருந்து மாறி திகில் கதையொன்றை எழுத ஆரம்பிக்கிறான். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. நேரடியாக திகிலான அனுபவங்களோடு இந்தக் கதையை எழுத வேண்டி தனிமைக்காக மேகமலை காட்டு பங்களாவிற்குச் சென்று கதையை எழுத ஆரம்பிக்கிறான். அங்கே அவன் சந்திக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை.
இந்த படத்தை முழுக்க, முழுக்க கொடைக்கானல் பின்னணியில் எடுத்துள்ளோம். கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் மட்டுமே காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது எங்களுக்கு ஒரு சவாலான விஷயமாக இருந்தது.
கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி என இப்படத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் என எல்லோருமே ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டம் எல்லாம் மறந்துபோகும்விதமாக இந்த ‘உரு’ படம் சிறப்பாக வந்துள்ளது. படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகவுள்ளது. நிச்சயம் பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்றார் நம்பிக்கையோடு..!











