தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.
இந்தப் படத்தில் ரேஷ்மா ரத்தோர் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ முதலான படங்களின் ஒளிப்பதிவாளரான பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநரான இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, துரை செந்தில்குமார், சுராஜ், பிரபு சாலமன், ஏ.எல்.விஜய், பொன்வண்ணன், அறிவழகன், ஐக், மனோபாலா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என அழைத்தார். இதேபோல் இயக்குநர் பேரரசு பேசும் போது, சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என பாராட்டினார்.
படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “நடிகர் தம்பி ராமையா என் குடுபத்தில் ஒருத்தர் மாதிரி. அவரை நான் ‘சித்தப்பா’ என்றுதான் கூப்பிடுவேன். அவரது மகன் உமாபதி என்னை அன்போடு ‘அண்ணா’ என்றுதான் அழைப்பார். அதனால் அவன் எனக்கு தம்பி.
சித்தப்பா தம்பி ராமையாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் நிறைய இருந்தது. ஆனால் வாய்ப்புகள் அமையாமல் போய்விட்டது. ஆனால் அந்த ஆசை இப்போது ‘வேலைக்காரன்’ படத்தின் மூலமாக நிறைவேறியது.
அவரது விடாமுயற்சி எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம். அவர் தன் வயதை என்றைக்குமே வெளியே காட்டிக் கொள்ளாமல், தன்னை மட்டுமே நம்பிப் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்புக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன்.
இந்த மேடையில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசி எனக்கொரு அதிர்ச்சியைக் கொடுத்தார் அண்ணன் பி.டி.செல்வகுமார். அவர் என்ன சொன்னார் என்பதை என் வாயால் சொல்லவே மாட்டேன். அதெல்லாம் எனக்கு வேண்டாம்.
பேரரசு சார் பேசும்போது நான் சினிமாவைப் புரிந்து கொண்டதாகச் சொன்னார். ஆனால், நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன். எங்கியிருந்து வந்திருக்கிறேன் என்பது தெரியும். அதெல்லாம் புரிந்துள்ளதால், யார் என்ன பேசினாலும் காதில் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
நாம் என்ன வேலை செய்கிறோமோ அது அனைவரிடமும் போய் சேர்ந்தால் போதுமானது. ஆகையால் இந்த பட்டமெல்லாம் வேண்டாம். நீங்க இந்த படைப்பு கொடுத்தீர்கள் என்பது, அதற்குள் செய்தி தலைப்பாக இணையத்தில் வந்துவிட்டது.
எனக்கென்று ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதில் போய் கொண்டே இருக்கிறேன். என்னுடைய படம் அனைவருக்கும் பிடித்திருந்தாலே எனக்கு போதும். அதுவே எனக்குச் சந்தோஷம்தான். அதில் விமர்சனம் வரும்போது, திருத்திக் கொண்டு வேறு மாதிரி செய்யப் பார்ப்போம்.
கண்டிப்பாக திரையுலகம் என்பது ஒரு கடினமான துறைதான். நான் சினிமாவில் நுழைந்த புதுதில் ‘ஜாக்கிரதையாக இருப்பா’ என்று சொன்னார்கள். முதல் 2 வருடங்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால், கடைசி 2 வருடங்களில் தெரிந்துவிட்டது. போட்டிகள் நிறைந்த துறையில் இப்படித்தான் இருக்கும். அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் ஏறி போக முடியாது.
கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் பேசும்போது, “முத்து’ படத்தை 45 நாட்களில் முடித்தோம்” என்றார். எனக்கும் 45 நாட்களில் ஒரு படத்தை முடிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், 100 நாட்களாகி விடுகிறது. தற்போது படங்கள் 25 நாட்கள் ஓடினால் வெற்றி என்பதால், படப்பிடிப்பை 100 நாட்களாக்கி விட்டோம். இனிமேல் வரும் இயக்குநர்களுக்கு குறைந்த நாட்களில் படப்பிடிப்பு செய்வது எப்படி என்பதை கே.எஸ்.ரவிக்குமார் ஸார் வகுப்பு எடுக்க வேண்டும்.
ஹீரோ உமாபதியை இங்கே நிறைய பேர் பாராட்டி பேசினார்கள். அவர்களுடைய பாராட்டைக் கேட்கும்போது, இன்னும் பத்தாதுடா ஓடுடா தம்பி என்று மட்டும் என் மனதில் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இதைத்தான் தம்பி உமாபதி தன் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நடிக்க வந்த புதிதில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் டான்ஸ் ஆடுவேன். ஆனால், உமாபதி முதல் படத்திலேயே நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறார். உமாபதி அதிக உயரமாகவும் இருக்கிறார். அவரது உயரத்திற்கு அவர் ஆடும் பாடல் காட்சிகள் ஹிரித்திக் ரோஷனை நியாபகப்படுத்தும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடனமாடி இருக்கிறார் என்று டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
நான் விஜய் டிவியிலிருந்து வந்தவன். அதைப் போல நிறைய பேர் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் மூலம் இயக்குநர் இன்பசேகரும் இயக்குனராக அறிமுகமாகிறார். எல்லோருக்கும் இந்த படம் வெற்றிப் படமாக அமையும். அமைய வேண்டும்..” என்றார் சிவகார்த்திகேயன்.
வருகிற 16-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை ’சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.