full screen background image

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீர் தற்கொலை-காரணம் என்ன..?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீர் தற்கொலை-காரணம் என்ன..?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

மக்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் மீடியா உலகில் தலைகாட்டிய சித்ரா, இதன் பின்பு ஜெயா டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘சரவணன் மீனாட்சி’, ’வேலுநாச்சி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர் சித்ரா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் சித்ரா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பு சென்னையின் புறநகர் பகுதியில் நடைபெற்றது. சித்ராவின் வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் திருவான்மியூர் சென்று வந்து சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால் சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா.

சித்ராவுக்கு ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. வரும் பிப்ரவரியில் அவருக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா பங்கேற்றபோது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக ஹேமந்தை வரவைத்து அவரை ப்ரொபோஸ் செய்ய வைத்தனர். அதனை பற்றி நடிகை சித்ராவும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால கணவரான ஹேமந்துடன்தான், சித்ரா இந்த ஹோட்டலில் சமீப நாட்களில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

அப்போது “தான் குளிக்கப் போவதாகவும், எனவே, கொஞ்ச நேரம் நீங்கள் வெளியே நில்லுங்கள்…” என்றும் ஹேமந்திடம், சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து ஹேம்நாத் ரூமை விட்டு வெளியே வந்துள்ளார்.

 ஆனால், நீண்ட நேரமாகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. கதவை தட்டிப் பார்த்தும், பதில் வரவில்லை.  அதிர்ச்சியடைந்த ஹேமந்த் ஹோட்டல் நி்ர்வாகத்திடம் தகவல் சொல்ல.. அவர்கள் மாற்று சாவியைக் கொண்டு வந்து கதவைத் திறந்துள்ளனர்.

 அப்போதுதான் அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் சென்று சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் தூக்குப் போட்டுத் தற்கொலை என்பதுபோல தடயம் எதுவும் இல்லை என்பதால் ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்றைய படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு வேறு ஏதும் பிரச்சினைகள் இருந்ததா.. அதுதான் இந்தத் தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதியே பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாகக் காவல்துறைக்குச் செய்திகள் கிடைத்துள்ளது.

இதையடுத்து திருமணமாகி 2 மாதங்களில் சித்ரா இறந்திருப்பதால் இதற்காக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Our Score