தமிழ்த் திரையுலகத்தில் தற்போது சங்கங்கள் உடையும் காலம். பல சங்கங்கள் உடைந்து கொண்டேயிருக்கின்றன. அடுத்து உடையவிருப்பது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவராக டி.ராஜேந்தர் இருக்கிறார். இந்தச் சங்கத்திற்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ம் தேதிதான் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பிரபல விநியோகஸ்தர் அருள்பதியை தோற்கடித்த டி.ராஜேந்தர் கடந்த ஓராண்டாக அந்தப் பதவியை வகித்து வருகிறார்.
அதோடு ‘தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு’ என்னும் அமைப்பின் தலைவராகவும் ஆனார். தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பு என்பது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு.
‘தமிழ்த் திரையுலகத்தின் உச்சநீதிமன்றம்’ என்று சொல்லுமளவுக்கு திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையிடல் என அனைத்து துறைகளிலும் ஏற்படுகிற சிக்கல்களுக்கும் தீர்வு காணக் கூடிய அமைப்பு இதுதான்.
டி.ராஜேந்தர் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரானதால் வழக்கம்போல இந்தக் கூட்டமைப்புக்கும் தலைவரானார்.
ஆனால், கடந்த ஓராண்டாக அந்தப் பதவியில் இருந்து கொண்டே மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் போட்டியிட்டது விநியோகஸ்தர்களுக்கு பெரும் கோபத்தைக் கிளப்பியது.
திரையுலகத்தில் பெரும்பாலான பஞ்சாயத்துக்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில்தான் நடக்கின்றன. அதைச் சரி செய்ய வலுவான விநியோகஸ்தர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நினைக்க.. டி.ராஜேந்தர் நான் இரண்டு பதவியிலும் அமர்வேன் என்று கெத்தாகச் சொல்லிவிட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனாலும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் விதிப்படி இந்தச் சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர் வேறு சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது. டி.ராஜேந்தர் இதையும் தனது ஆதரவாளர்களை வைத்து சங்கத்தின் விதிகளில் திருத்தம் செய்வதாக செயற்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன்படிதான் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தனியாகத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற சங்கத்தைத் தனியாகத் தொடங்கியுள்ளார் டி.ராஜேந்தர். இதுவும் பல விநியோகஸ்தர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டது.
அடிப்படையில் டி.ராஜேந்தர் நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமே. தான் தயாரித்த திரைப்படங்களை மட்டுமே அவர் விநியோகம் செய்துள்ளார். அதுவும் சமீப வருடங்களில் அவர் விநியோகஸ்தராகவும் இல்லை.
இப்படியிருக்கும் சூழலில் சங்கத்தின் விதிகளைத் திருத்தி எதேச்சிதிகாரமாக அவர் நடந்து கொண்டவிதம் நீண்ட பல வருடங்களாக விநியோகஸ்தர்களாக இருந்து வரும் பலருக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் விளைவாக புதிதாக விநியோகஸ்தர்கள் சங்கத்தை உருவாக்க பல பிரபல விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
முக்கிய விநியோகஸ்தர்களான அருள்பதி, மதுரை அன்புசெழியன், அழகர்சாமி, தேனாண்டாள் சாகுல், வேலூர் சீனிவாசன், கோவை இராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணியம், திருச்சி பிரான்சிஸ் ஆகியோர் இணைந்துதான் இந்தப் புதிய சங்கத்தை உருவாக்குகிறார்கள்.
சமீபத்தில் உருவான நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் போலவே இந்தச் சங்கத்திற்கும் தமிழ்நாடு நடப்பு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தச் சங்கத்தில் இப்போது படங்களை வியாபாரம் செய்து வரும் விநியோகஸ்தர்களை மட்டும் உறுப்பினர்களாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய சங்கத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்புக்கு கடன் கொடுக்கும் பெரிய பைனான்சியர்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இந்தச் சங்கம் உருவானால், இப்போது தமிழகமெங்கும் இருக்கிற விநியோகஸ்தர்களின் சங்கங்கள் செயல் இழக்கும். திரைப்படம் சம்பந்தபட்ட அனைத்து பஞ்சாயத்துகளும் இந்தப் புதிய அமைப்பில் மட்டுமே பேசி தீர்க்கப்படும் சூழல் உருவாகவுள்ளது.
இதன் காரணமாக டி.ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பின் நிலைமை கேள்விக்குறியாகியிருக்கிறது..!
தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது.