டு லெட் – சினிமா விமர்சனம்

டு லெட் – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை ழ சினிமா நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் செழியனின் மனைவி பிரேமா செழியன் தயாரித்துள்ளார்.

படத்தில் சந்தோஷ் ராம், ஷீலா ராஜ்குமார், குழந்தை நட்சத்திரம் தருண், ஆதிரா பாண்டியலட்சுமி, ரவிசுப்ரமணியம், அருள் எழிலன், மருது மோகன், எம்.கே.மணி, ஆறுமுக வேலு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் – செழியன், ஒளிப்பதிவு – எஸ்.பி.மணி, படத் தொகுப்பு – கர் பிரசாத், ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், இணை தயாரிப்பு – சுப்பு, இணை இயக்கம் – ஏ.சிவக்குமார், சப்தம் – சேது, கேஸ்டிங் இயக்குநர் – ராஜன், ரெஜின், டிசைன்ஸ் – பிளெஸ்ஸம், மக்கள் தொடர்பு – ஏ.ஜான்.

இத்திரைப்படம் 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 84 முறை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு 32 விருதுகளை பெற்றிருக்கிறது. இதற்கு முழுத் தகுதியுள்ள திரைப்படம்தான்.

சென்னை போன்ற மாநகரங்களில் வீடு தேடி அலைந்திருக்கிறீர்களா..? நீங்கள் சாதாரண எளிமையான மனிதராக இருந்தால், இந்த வீடு தேடும் படலம்தான் நகர வாழ்க்கையில் மிகக் கொடுமையானது என்பதை உணர்வீர்கள். அப்படியொரு உணர்வைத்தான் இத்திரைப்படம் கொடுக்கிறது.

சந்தோஷ் ராம் சினிமாவில் ஒரு துணை இயக்குநர். கதாசிரியர், வசனகர்த்தா.. சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்றெண்ணி கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். மனைவி ஷீலா, மகன் தருண் என்று சின்னக் குடும்பம்தான்.

அவர் குடியிருக்கும் வீடும் ஒரு குருவிக் கூடு போலத்தான். 4500 ரூபாய்க்கு இதைவிட பெட்டரான வீடு கிடைக்காது என்பதால் இருப்பதில் இன்பம் கண்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கும் ஒரு நாள் சோதனை வருகிறது.

உடனடியாக வீட்டை காலி செய்யச் சொல்கிறார் வீட்டு ஓனரம்மா. அதுவும் 15 நாட்கள் இடைவெளி கொடுத்து. ஏற்கெனவே வீட்டு கக்கூஸில் தண்ணீர் இறங்காமல் அடம் பிடித்துக் கொண்டிருக்க.. இந்த வீட்டுக்கு இந்த வாடகையே அதிகம்.. என்றாலும் வேறு வழியில்லாமல், வீட்டு உரிமையாளர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதே என்பதாலும் அமைதியாக இருந்திருக்கிறார்கள் கணவனும், மனைவியும்.

இப்போது வீடு தேடும் படலம் துவங்குகிறது. பல இடங்களில் முட்டி, மோதியும் பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் போக.. கெடு தேதியும் நெருங்கிவிட்டது.. இறுதியில் என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

மிக எளிமையான கதை. ஆனால் சொன்ன விதத்தில் அசர வைத்திருக்கிறார் இயக்குநர் செழியன். அடிப்படையில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரான செழியன் ‘பரதேசி’ படத்தின் ஒளிப்பதிவுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கும் ஒரு அற்புதமான கலைஞர்.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சிகூட கதையின் மையக் கருத்துக்கு தேவையற்றதாக இல்லை. ஒரு எளிமையான, குடியானவனின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை அப்படியே கண் முன்பாகக் கொணர்ந்திருக்கிறார்.

அதே நேரம் சென்னையில் வீடு தேடும் படலத்தின்போது கிடைக்கும் அனுபவங்களை அப்படியே பட்டியலிட்டிருப்பதால், இத்திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக தாங்களே உணர்ந்த ஒரு அனுபவத்தை திரும்பவும் பெறுவார்கள்.

ஒன்லி வெஜிடேரியன், பிராமின்ஸ் ஒன்லி, சினிமாக்காரன் என்றால் வீடு இல்லை, குடும்பத்தில் 3 பேருக்கு மேல் என்றால் இல்லை, கருப்புச் சட்டைக்காரர்களுக்கு வீடு இல்லை, வேற்று ஜாதிக்காரர்களுக்கு வீடு இல்லை, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தால் வீடில்லை என்று சகலவிதமான நோய்க்கூறுகளையும் காண்பிக்கிறது இந்த வீடு தேடும் படலம்.

“சினிமாக்காரனுக்கு வீடு கொடுக்க மறுக்கும் இந்த உலகம்தான் சினிமாக்காரர்கள் கையில் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்கிறது…” என்கிற வசனம் இத்திரைப்படத்திற்கு மிக, மிக பொருத்தமானது. இதையும் பத்திரிகை போராளி அருள் எழிலன் மூலமாகச் சொல்ல வைத்திருப்பது கச்சிதமானது.

நவீன குறு நில அரசர்களாக தங்களை நினைத்துக் கொண்டு வாடகைதாரர்களை ஆட்டிப் படைக்கும் வீட்டு உரிமையாளர்களையும் இத்திரைப்படம் குத்திட்டு காட்டுகிறது. “தமிழன், தமிழன் என்று சொல்பவர்கள் வீடில்லை என்கிறார்கள். ஆனால் தொலைதூர மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மார்வாடி வீடு தர முன் வருகிறான்” என்கிற முரண்பாட்டையும் இத்திரைப்படம் முன் வைத்திருக்கிறது.

சினிமாக்காரன் என்று சொன்னால் வீடில்லை என்று சொல்வதால் போலியாக ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொல்லி நண்பரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வீடு தேடும் நிலைமைக்குச் செல்கிறார் சந்தோஷ். அது ஒரு பெரும் துயரத்தில் முடிவதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

சினிமா இயக்குநராகும் கனவோடு இருக்கும் சாதாரண துணை இயக்குநராக சந்தோஷ்.. நல்ல கணவனாக.. சிறந்த தந்தையாகவும் இருந்து கொண்டு, சிறந்த இயக்குநராக வேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்து கொண்டு அலையும் ஒரு இளைஞனாக நடித்திருக்கிறார்.

எத்தனை கோபம் வந்தாலும் வீட்டு உரிமையாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே கோபத்தை அடக்கிக் கொண்டும், “என்னவாம்?” என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை எரிச்சலையும் வெளிக்காட்டும் சமயம் பாவமாய் தெரிகிறார்.

இவருடைய மனைவியாக ஷீலா. காதலித்துக் கரம் பிடித்துவிட்ட காரணத்தினால் கணவரின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த நினைக்கும் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்திருக்கிறார்.

வீடு பார்க்க வருபவர்களின் சமயம் அறியாமல் வந்து நிற்பதும், அந்தச் சங்கடமான தருணங்களை இவர் கடக்கும்போதும் பரிதாபமே ஏற்படுகிறது. கணவருடன் மல்லுக்கட்டி சண்டை போட்டு பின்பு சமாதானமாகி ஒரு எளிய குடும்பத் தலைவியின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை கண் முன்னே காட்டியிருக்கிறார் ஷீலா.

இவருடைய மகனாக தருண். சுவர் முழுக்க படம் வரைந்து வைத்திருப்பதைக் கண்டு வீட்டுக்காரம்மா திட்டுவிட்டுப் போவதைப் பார்த்துவிட்டு தான் வரைந்ததை தானே அழிக்க முயலும் காட்சியில் ஒரு பெரும் நெகிழ்ச்சியை காண்பிக்கிறான் இந்தச் சிறுவன்.

வீடு பார்க்கும் படலத்தை நேரில் பார்த்த சிறுவன் அதனை தனது வீட்டில் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து செய்யும் மோனோ ஆக்டிங் பலே..!

வீட்டு ஓனரம்மாவாக ஆதிரா ஒரு பக்கம் தனது இறுக்கமான முக பாவனையிலேயே தனது குணத்தைக் காண்பிக்கிறார். இவருடனேயே வரும் இவரது வீட்டு நாய்கூட ஷீலா வீட்டுக்குள் அத்துமீறி நுழைவதைக் காட்டும் காட்சிகூட ஒரு சிம்பாலிக்குதான்..!

இவரது கணவராக ரவி சுப்ரமணியம். மனைவி பேசுவார். ஆனால், இவர் எதுவும் பேச மாட்டார் என்பதையே இவர் வரும் சில காட்சிகள் உணர்த்துகின்றன.

இத்தனை கஷ்டத்திற்கிடையில் ஒரு சின்னஞ்சிறிய குருவிக்கு வீட்டு சீலிங் பேனில் இடம் கொடுத்து தங்க வைக்கும், இவர்களது விசாலமான மனதுதான் இவர்கள் போன்ற எளிமையானவர்களின் குணம்.

மென்மையான குணம், அமைதியான பேச்சு.. ஆனால் வியாபாரம் என்றால் அதில் நேர்மை.. இதில்லாமல் மார்வாடிகள் இல்லை என்பதைக் காட்டுவதைப் போல அந்த மார்வாடியும் நடித்திருக்கிறார்.

பின்னணி இசையில்லை. ஆகவே ஒலி இரைச்சல் இல்லை. படம் முழுவதும் அமைதியான காட்சிகளில் கதாபாத்திரங்களை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. மார்வாடியிடமிருந்து போன் வரும் என்று எதிர்பார்த்து அந்த நேரத்துக்காக குடும்பமே செல்போனை பார்த்தபடியே இருக்கும் அந்தக் காட்சியை, இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

செழியன் தானே ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலு மகேந்திராவுக்கு பிறகு இத்தனை எளிமையான ஒளிப்பதிவை இவரிடம்தான், இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது. இதேபோல் இயக்கத்தில் முழுமையாகச் செய்திருக்கிறார் செழியன்.

ஒரு குறைகூட கண்டறிய முடியாதவண்ணம் திரைக்கதையை எழுதி, அழுத்தமாக இயக்கமும் செய்து இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமா என்கிற ஆர்வத்தையும், விவாதத்தையும் தமிழ்த் திரையுலக இயக்குநர்களிடத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். இதற்காகவே இவருக்கு ஒரு ‘ஓ’ போடலாம்..!

டு லெட் – தமிழ்ச் சினிமாவில் ஒரு பொக்கிஷம்..!

Our Score