full screen background image

சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து நடிக்கும் ‘அமீரா’ திரைப்படம்..!

சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து நடிக்கும் ‘அமீரா’ திரைப்படம்..!

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’.

இந்தப் படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். பிரபல மலையாள முன்னணி நடிகையான அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். 

சமீபத்தில் வெளியாகி பல சர்வதேச விருதுகளை குவித்திருக்கும் ’டுலெட்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

தயாரிப்பு – தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9, இயக்குநர் – ரா.சுப்பிரமணியன், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு – இரா.செழியன், இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சிவராஜ், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், புகைப்படம் – சாரதி, மக்கள் தொடர்பு – ஆ.ஜான், டிசைன்ஸ் – தண்டோரா, தயாரிப்பு மேற்பார்வை – மா. சிவக்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – முத் அம் சிவா – பார்த்திபன் சன்ராஜ்.

AMEERA POOJA (61)

’அமீரா’ படத்தின் பூஜை இன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், நடிகை அனு சித்தாரா உள்ளிட்ட படக் குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் அமீர், மீரா கதிரவன், ஜெகன்னாத், ’டோரா’  தாஸ், கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறோம் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாராதான்” என்றார்.

AMEERA POOJA (58)

படம் பற்றி செந்தமிழன் சீமான் பேசும்போது, “இது தமிழ் தலைப்பு அல்லதான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப்  பற்றிய  கதை. அதனால் ‘அமீரா’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

‘அமீரா’ என்றால் ‘இளவரசி’ என அர்த்தம். அமீராதான் மையக் கரு. நாங்கள் இருவரும் அவரை நோக்கி செல்லும் கதாபாத்திரங்கள்தான். அதேசமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும், விறுவிறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

இது ஒரு சமூக அக்கறை உள்ள படம். இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறைதானே..? சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுகிறது.

இஸ்லாம் தீவிரவாதம் என்பது  ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு. அதேசமயம் எல்லா மதங்களுமே  நன்னெறியைத்தான் போதிக்கின்றன..” என்றார்.

Our Score