full screen background image

“அம்மா கேரக்டர்கூட கொடுத்திருக்கக் கூடாதா..?” – பாக்யராஜிடம் நடிகை ஸ்ரீபிரியா கேட்ட கேள்வி..!

“அம்மா கேரக்டர்கூட கொடுத்திருக்கக் கூடாதா..?” – பாக்யராஜிடம் நடிகை ஸ்ரீபிரியா கேட்ட கேள்வி..!

எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்தும் கடைசியாக மூன்று பிளாப்புகளை கொடுத்ததினால், இயக்கத்திற்கு சற்று இடைவெளிவிட்டுவிட்டு நடிப்பாற்றலில் இறங்கிவிட்டார் புதுமை இயக்குநர் கே.பாக்யராஜ்.

இதுவரையில் அப்பா கேரக்டர்கள் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வந்த பாக்யராஜ் இப்போது மெயின் கேரக்டரில் ஹீரோ போல் நடித்திருக்கும் படம் ‘துணை முதல்வர்.’ இதில் தான் மட்டுமே தனி ஆவர்த்தனம் நடத்தினால் அது தேறாது என்பதை புரிந்து கொண்டு துணைக்கு ஜெயராமையும் நடிக்க வைத்துள்ளார்.

Thunai-Mudhalvar-Movie-Posters

கதை, திரைக்கதை வசனத்தை பாக்யராஜே எழுதியுள்ளார். ஆர்.விவேகானந்தன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘மத்திய சென்னை’ என்ற படத்தை இயக்கியவர். பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறார். ஜெயராமுக்கு ஜோடியாக சந்தியா நடித்திருக்கிறார். மீனாட்சியும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தி ஒலிம்பிக் மூவிஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆர்.சங்கர், ஆர்.சிவகுமார், கே.ஜி.சுரேஷ்பாபு, கே.ஜி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இதுவரையிலும், குடும்பக் கதைகளையே அதிகம் எடுத்திருக்கும் பாக்யராஜ் இதில் அரசியலை கையில் எடுத்திருக்கிறார். டிரையிலரை பார்த்தால் நடப்பு அரசியலை புட்டு புட்டு வைத்திருப்பது போல தெரிகிறது. சட்டமன்றத்தில் வேட்டி அவிழ்ப்பு, கவிழ்ப்பு அரசியல், பதவி வெறி, அரசியல்வாதிகளை ஓடவிட்டு அடிப்பது.. மக்களின் எதிர்ப்பு போராட்டம்.. கள்ள ஓட்டு தேர்தல்.. உட்கட்சி மோதல் அனைத்துமே தெரிகிறது.

எக்ஸ்ட்ராவாக பாக்யராஜுக்கே உரித்தான சில்மிஷங்களும் படத்தில் உண்டு. ஸ்வேதா மேனன் ஏற்கெனவே மலையாளத்தில் ஒன்லி ஒன் கிளாமர் அண்ட் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரெடுத்தவர். மற்ற நடிகைகளெல்லாம் தயக்கம் காட்டும் கேரக்டர்களை கேட்டு வாங்கி நடிப்பவர்.

_DSC0857

ஸ்வேதா மேன்னை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா..?  ‘யான் மலையாள சேச்சியல்லோ’ என்ற பாடலுக்கு சேலை அணிந்து ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறார் ஸ்வேதா. அப்படியொரு கவர்ச்சி.. கூடவே சந்தியாவும்.. இதுவுமல்லாமல் தமிழ்ச் சினிமாவில் வழக்கொழிந்து போன விஷயங்களை மீண்டும் வாழைப்பழம் போல சொருகியிருக்கிறார்.

பாக்யராஜுக்கு படத்தில் 5 வயதில் மகன் இருக்கிறான்  அவன் இன்னமும் பால்குடி மறக்காமல் இருக்கிறானாம்.. இதை ஒரு டயலாக்காகவே பேசுகிறார் பாக்யராஜ். அப்போது ஸ்வேதா மேனன் மலையாள பாணியில் முண்டு அணிந்து வர.. ஸ்கிரீனே வெட்கப்படுகிறது.. மேலும் பாக்யராஜ்-ஸ்வேதா கூட்டணியில் ஆடலும், பாடலும், ரொமான்ஸும் உண்டு. இது போதாதென்று இள வயது காதல் ஜோடியையும் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு டூயட் உண்டு. ஆக, எப்படியாவது மீண்டும் ஒரு வெற்றியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள்..!

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அழைப்பிதழில் 13 நடிகைகளின் புகைப்படங்களை அச்சிட்டு அவர்கள்தான் படத்தின் பாடல்களை வெளியிடப் போகிறார்கள் என்று வித்தியாசமாக சொல்லியிருந்தார்கள்.

thunai muthalvar-invitation-1

ஆனால் வந்தவர்கள் ஊர்வசி, ரேகா, ராதிகா, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி, சுஹாசினி, ரோகிணி, கோவை சரளா, மீனா மட்டுமே. அழைப்பிதழில் புகைப்படம் போட்டிருந்தும் குஷ்பு, லிசி, சீமா, சுலக்சனா, ரம்யா கிருஷ்ணன், சீதா ஆகியோர் வரவில்லை..

மேடையில் பெண்களை மட்டுமே மேடையேற்றி அமர வைத்தவர்கள் போனால் போகிறதென்று ஜெயராமுக்கும் ஒரு இடம் கொடுத்திருந்தார்கள்.  நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

துவக்கத்தில் தான் இயக்கிய முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் தயாரிப்பாளர் கோபிநாத்தை மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் பாக்யராஜ். இவருடைய மகன்கள்தான் இப்போது இந்த ‘துணை முதல்வர்’ படத்தையும் தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thunai-muthalvar-32

ஷூட்டிங் இருந்ததால் ராதிகா முதலிலேயே பேசிவிட்டு கிளம்பினார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் நடிக்க பாக்யராஜ் முதலில் தன்னைத்தான் அணுகியதாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தன்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறினார் ராதிகா.

Thunai-muthalvar-08

நடிகை ஸ்ரீபிரியா பேசும்போது “எப்பவும், எங்கேயும் நேரத்துக்கு போகணும்ன்ற கொள்கை உடையவள் நான். இந்த விழாவுக்கும் அப்படித்தான் எட்டே முக்காலுக்கெல்லாம் வந்துட்டேன். ஆனா பாருங்க. எனக்கு பின்னாடிதான் பாக்யராஜே வந்தார். எங்களுக்கும் பின்னாடி கரெக்ட்டா எப்பவும் வர்ற மாதிரியே வடிவுக்கரசி லேட்டா வந்தாங்க..” என்று தன் நண்பியை கிண்டல் செய்தார். பாக்யராஜ் தன்னை அவரது படங்களில் நடிக்க்க் கூப்பிடவே இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார் ஸ்ரீபிரியா. “ஏன் ஒரு அம்மா கேரக்டர்கூட கொடுத்திருக்கக் கூடாதா..?” என்று ஆதங்கப்பட்டார்.

Thunai-muthalvar-20

வடிவுக்கரசி பேசும்போது படத்தில் இடம் பெற்றிருந்த பாக்யராஜின் ஜொள்ளு சமாச்சாரங்களை ஜாடை, மாடையாக சுட்டிக் காட்டி, “பாக்யராஜ் ஸாரோட விஷயங்களும் படத்துல இருக்குன்றது டிரெயிலரை பார்த்தாலே தெரியுது. அது என்னைக்குமே மாறாதது. அவரோட ரசிகர்களுக்கு நிச்சயமா அது பிடிக்கும்னு நம்புறேன்..” என்றார்.

சுஹாசினியை அழைக்கும்போது ‘அறிவுஜீவி குடும்பத்தில் இருந்து வந்தவர்’ என்று அழைத்தார் பார்த்திபன். இதற்கு பதில் சொன்ன சுஹாசினி, “சமயத்துல வீட்ல என்னைய ‘உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா’ன்னு திட்டுக்கிட்டேயிருக்காங்க. இங்க நீங்கதான் அறிவுஜீவின்னு சொல்றீங்க..” என்றார். மேலும், ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் ஹீரோயின் சான்ஸுக்காக தயாரிப்பாளர் அலுவலகத்திற்கும், பாக்யராஜின் அலுவலகத்திற்கும் தான் ஓடி, ஓடி சான்ஸ் கேட்டு அலைந்த கதையைச் சொல்லி, “அது மட்டும் ஓகேயாயிருந்தா உங்க கல்யாணம் நடக்க கொஞ்சம் லேட்டாயிருக்கும்..” என்றார் மேடையில் அமர்ந்திருந்த பூர்ணிமா பாக்யராஜிடம்..!

Thunai-muthalvar-18

கோவை சரளா பேசும்போது ஒரு நாள் நடு ராத்திரியில் தன் வீட்டிற்கு வந்து தகவலைச் சொல்லி, “நாளைக்குக் காலைல ஷூட்டிங். வந்திருங்க..” என்று தன்னை ‘சின்ன வீடு’ படத்துக்கு புக் செய்த கதையைச் சொல்லி பாக்யராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Thunai-muthalvar-19

ஊர்வசி பேசும்போது கூட்டம் கலகலத்தது. தான் நடிக்க வந்தபோது தனக்கு நடிப்பு மீது ஆர்வமே இல்லையென்றும், தனது அம்மாவின் வற்புறுத்தலால் நடிக்க வந்ததாகவும் சொன்னார். “என்னை கொஞ்ச நேரம் நிக்கச் சொன்னால்கூட அப்பவே தூங்கிருவேன். அப்படியொரு தூங்கு மூஞ்சி நான். முழிச்சிருக்கும்போது தொண, தொணன்னு பேசிக்கிட்டிருப்பேன். ‘முந்தானை முடிச்சு’ ஷூட்டிங் முழுக்கவே பாக்யராஜ் ஸாரை ரொம்பவே பாடாய் படுத்திட்டேன்..” என்று அந்தக் கதையைக் கலகலவென சொன்னார்.

Thunai-muthalvar-14

நிகழ்ச்சி மிகவும் சீரியஸாக போவது போல தெரிய மனோபாலாவை மேடைக்கு அழைத்தார் பார்த்திபன். “டிரெயிலர் பார்த்தீங்கள்ல.. சட்டசபைலேயே வேட்டியை உருவுறாங்க.. அடிக்கிறாங்க.. திட்டிக்கிறாங்க.. ஒரு துணை முதல்வர் எப்படி பிளான் பண்ணி முதல்வராவாருன்றதையும் படத்துல பாருங்க.. அந்த முதல்வர் நான்தான்..” என்றார் டைமிங்காக.

Thunai-muthalvar-27

பாக்யராஜ் பேசும்போது, “ஸ்ரீபிரியா மேடம் அப்போ என்னைவிட சீனியர். அவங்கள எப்படி அப்ரோச் பண்ணி நடிக்க வைக்கிறதுன்னு எனக்கு அப்பவே சின்ன தயக்கம். சரிதாவைக்கூட இப்போவரைக்கும் நான் ‘வாங்க மேடம்’.. ‘போங்க மேடம்’ன்னுதான் மரியாதையா பேசுவேன்.. ஏன்னா அவங்களும் பாலசந்தர் ஸார் அறிமுகம். பெரிய இடத்துல இருந்து வந்திருக்காங்க. நமக்கும் சீனியர்ன்னு ஒரு பயம்.. அதுனாலதான் ஸ்ரீபிரியா மேடம் பக்கமே நான் போகலை.. இனி அடுத்து வாய்ப்பு வந்தால் அவரை நி்சசயம் நடிக்க வை்பபேன்..

இது அரசியல் கலந்த ஒரு படம். இதுவரைக்கும் நான் நேரடியா அரசியலை பத்தி படமே எடுக்கலை. இதுதான் முதல் படம். தற்போதைய நாட்டு நடப்புகளை வைச்சு அதுல ஒரு காதலையும் வைச்சு.. இந்தக் கால யூத்துகளுக்கு பிடிச்சது மாதிரி எடுத்திருக்கேன். என் ரசிகர்கள் எதிர்பார்க்குற தனி விஷயங்களும் படத்துல நிச்சயமா இருக்கு..” என்று உறுதியளித்தார்.

தற்போது கோடம்பாக்கத்தில் புதிய இயக்குநர்களின் படங்கள் மட்டுமே ஜெயித்துக் கொண்டேயிருக்க.. தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை புரட்டிப் போட்ட படங்களை இயக்கிய சீனியர்களெல்லாம் எந்தக் கப்பலில் ஏறினால் கரையேறலாம் என்று தெரியாமல் ஓரமாக ஒதுங்கி நிற்கிறார்கள். இந்த நேரத்தில் தைரியமாக கடலில் குதித்திருக்கும் இயக்குநர் பாக்யராஜ் இதில் வெற்றி பெற வாழ்த்துவோம்..!

Our Score